மே தினம் குறித்து தோழர் லெனின்

“பிரசுரம் வெளிவந்த ஒரு மாதத்திற்குப்பின் வெடித்தெழுந்த பஞ்சாலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின்போது, எங்களுக்கு இந்த வேலை நிறுத்தத்துக்கான ஆரம்ப உத்வேகத்தை தந்ததே அந்த சிறிய மே தின பிரசுரம் தான்’’ என்று தொழிலாளர்கள் சொன்னதாக அந்த பிரசுரத்தை விநியோகித்த லெனினின் சமகாலத்தவர் ஒருவர் கூறியுள்ளார்.

மே தினத்தை ஒரு ஆர்ப்பாட்ட, போராட்ட தினமாக ரஷ்ய தொழிலாளர்களுக்கு லெனின் தன்னுடைய ஆரம்பகால ரஷ்ய புரட்சி இயக்க நடவடிக்கையின் போதே அறியச் செய்தார்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் தொழிலாளர் விடுதலைப் போராட்ட சங்கம் ரஷ்யாவில் இருந்த ஒரு மார்க்சிய அரசியல் குழு. இந்த சங்கத்துக்காக 1896-ம் ஆண்டு லெனின் சிறையில் இருந்தபோது மே தின துண்டு பிரசுரம் ஒன்றை எழுதினார்.

அந்த பிரசுரம் சிறையிலிருந்து கடத்தப்பட்டு 200 பிரதிகள் எடுக்கப்பட்டு 40 தொழிற்சாலைகளில் தொழிலாளர்களிடையே விநியோகிக்கப்பட்டது. அந்தப் பிரசுரம் மிகவும் சுருக்கமாக, லெனினுக்கே உரிய நேரிடையான மற்றும் எளிமையான முறையில் சாதாரண தொழிலாளியும் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதப்பட்டது.

படிக்க : நான் உலகம்! தொழிலாளி நானே உலகம் | ம.க.இ.க பாடல் | சிவப்பு அலை

“பிரசுரம் வெளிவந்த ஒரு மாதத்திற்குப்பின் வெடித்தெழுந்த பஞ்சாலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின்போது, எங்களுக்கு இந்த வேலை நிறுத்தத்துக்கான ஆரம்ப உத்வேகத்தை தந்ததே அந்த சிறிய மே தின பிரசுரம் தான்’’ என்று தொழிலாளர்கள் சொன்னதாக அந்த பிரசுரத்தை விநியோகித்த லெனினின் சமகாலத்தவர் ஒருவர் கூறியுள்ளார்.

தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யும் முதலாளிகளின் நலனுக்காக எங்ஙனம் சுரண்டப்படுகிறார்கள் என்பதையும், தங்களின் நிலையில் முன்னேற்றத்தை கோருபவர்கள் எவ்வாறு அரசாங்கத்தால் தண்டிக்கப் படுகிறார்கள் என்பதையும் சொல்லிய பிறகு மே தினத்தின் முக்கியத்துவம் குறித்து லெனின் எழுதுகிறார்.

“பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மன் நாட்டுத் தொழிலாளர்கள் ஏற்கனவே வலுவான சங்கங்களின் கீழ் அணிதிரண்டு தங்களின் பல உரிமைகளை அடைந்திருக்கிறார்கள். அவர்கள் ஏப்ரல் 19 (மே 1 ரஷ்ய நாட்காட்டி மேற்கு ஐரோப்பிய நாட்காட்டியை விட 13 நாட்கள் பிந்தியது) அன்று பொது வேலை நிறுத்த நாளாக கடைபிடித்தார்கள்.

காற்று வசதியற்ற தங்கள் தொழிற்சாலைகளை விட்டு, விரிந்த பதாகைகளுடன் தொழிலாளர்கள் தெருவிலே இறங்கினர். முதலாளிகளுக்கும் அவர்களின் வளர்ந்து வரும் சக்திக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இசைக்கு ஏற்ப நகரங்களின் முக்கிய வீதிகள் வழியே அணிவகுத்து சென்றனர்.

மாபெரும் வெகுஜன ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஒன்று கூடினார்கள். அங்கே அவர்கள் முதலாளிகளுக்கு எதிராக கடந்த ஆண்டு தாங்கள் பெற்ற வெற்றிகளையும், வருங்கால போராட்டத்திற்கான திட்டங்களை குறித்தும் பேசினார்கள்.

இந்த வேலை நிறுத்தத்தின் அச்சுறுத்தல் காரணமாக, தொழிலாளர்களுக்கு அவர்கள் தொழிற்சாலைகளுக்கு அன்று வராததற்காக அபராதம் விதிக்கக்கூடிய துணிவு அவர்களின் முதலாளிகளுக்கு இல்லை. அந்த நாளில் தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளிடம் தங்களின் முக்கிய கோரிக்கையான 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர பொழுது போக்கு என்பதை நினைவுப்படுத்தவும் தவறவில்லை. இதைத்தான் மற்ற நாட்டு தொழிலாளர்களும் தற்போது கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்’’.

ரஷ்ய புரட்சி இயக்கம் மே தினத்தை பெருமளவில் பயன்படுத்திக் கொண்டது. 1900-ஆம் ஆண்டு நவம்பரில் புதிப்பிக்கப்பட்ட “கார்கோவில் மே தினம்” என்ற பிரசுரத்தில் முன்னுரையில் லெனின் பின்வருமாறு எழுதுகிறார்.

“இன்னும் ஆறு மாதத்தில் ரஷ்ய தொழிலாளர்கள் தங்களின் புதிய நூற்றாண்டின் முதலாண்டு மே நாளை கொண்டாடுவார்கள். எத்தனை இடங்களில் முடியுமோ அத்தனை இடங்களில் மே தினத்தை சிறப்பாக, விரிவாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்ய இதுதான் நேரம்.

மே தின நிகழ்ச்சியில் பங்கு கொள்வது எத்தனை பேர் என்பது முக்கியமல்ல. பங்கு கொள்பவர்கள் வெளிக்காட்டும் ஸ்தாபன கட்டுப்பாட்டு உணர்வும், வர்க்க உணர்வும், ரஷ்ய மக்களின் அரசியல் விடுதலைக்கான ஒடுக்க முடியாத போராட்டத்திற்கு அவர்கள் காட்டும் உறுதியும்தான் முக்கியமானது. இதன் விளைவாக பாட்டாளி வர்க்க வளர்ச்சிக்கான வசதியாக சந்தர்ப்பமும், சோஷலிசத்திற்கான வெளிப்படையான போராட்டமும் வளரும்.”

மே தின ஆர்ப்பாட்டங்கள் குறித்து ஆறுமாதங்கள் முன்னமேயே கவனத்தை இழுத்திருக்கிறாரென்றால், அதை லெனின் எவ்வளவு முக்கியமாய் கருதியிருக்கிறார் என்பது தெளிவாய் தெரிகிறது.

லெனினுக்கு மே தினம் என்பது “ரஷ்ய மக்களின் அரசியல் விடுதலைக்கான அடக்கமுடியாத போராட்டத்திற்கும், பாட்டாளி வர்க்க மேம்பாட்டிற்கும், சோஷலிசத்திற்கான வெளிப்படையான போராட்டத்திற்கும் மக்களை அணி திரளச் செய்வதற்கான ஒரு சந்தர்ப்பம் ஆகும்”.

மே தின விழாக்கள் எங்ஙனம் ஒரு மாபெரும் அரசியல் ஆர்ப்பாட்டமாக மாறும் என்று பேசுகையில், 1900-ம் ஆண்டு கார்கோவ் மே தின விழா எப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக மாறியது என்ற கேள்விக்கு லெனின் பின்வருமாறு பதிலளிக்கிறார்.

“வேலை நிறுத்தத்தில் பங்கு கொண்ட பெருந்திரளான தொழிலாளர்கள், தெருக்களிலே நடந்த மாபெரும் வெகு ஜனக்கூட்டங்கள், செங்கொடிகளின் பதாகை, கோரிக்கைகள் அடங்கிய பிரசுரங்கள், அவற்றின் புரட்சித்தன்மை, எட்டு மணி நேர வேலைநாள், அரசியல் விடுதலை இவைகள்தான்”.

படிக்க : உழைப்பாளர் தினம்: முதலாளிகளை அச்சுறுத்தும் நாள்! || கவிதை

கார்கோவ் கட்சித் தலைவர்கள் 8 மணி நேர வேலை நாள் கோரிக்கையோடு சாதாரண, வெறும் பொருளாதார கோரிக்கைகளையும் சேர்த்துக் கொண்டதை லெனின் சினந்து கொண்டார். காரணம் மே தினத்தின் அரசியல் தன்மை எந்த விதத்திலும் மங்கக் கூடாது என்று விரும்பினார். அவர் இந்த முன்னுரையில் பின்வருமாறு எழுதுகிறார்.

“8 மணி நேர வேலைதான் இந்த முதல் கோரிக்கையானது உலகெங்கிலுமுள்ள பாட்டாளி மக்கள் வைத்துள்ள பொதுவான கோரிக்கையாகும். இந்த கோரிக்கையை முன் வைத்ததிலுருந்து கார்கோவின் வளர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் சர்வதேச சோசலிச தொழிலாளர் இயக்கத்தோடு தங்கள் ஐக்கியத்தை உணருகிறார்கள் என்பது தெரிகிறது.

குறிப்பாக இந்த ஒரு காரணத்திற்காகவே, இதுபோன்ற ஒரு கோரிக்கையை, மேஸ்திரி ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும், பத்து ஸென்ட் ஊதிய உயர்வு வேண்டும் போன்ற சாதாரண கோரிக்கைகளுடன் சேர்த்து வைக்கக் கூடாது. 8 மணி நேர வேலை நாள், பாட்டாளி வர்க்க முழுமைக்குமான ஒரு கோரிக்கையாகும். அது சமர்ப்பிக்கப்படுவது தனிப்பட்ட முதலாளிகளிடத்தில் அல்ல. உற்பத்திக் கருவிகளின் சொந்தக்காரர்களான முதலாளித்துவ வர்க்கத்திடம் தற்போதைய அரசியல், பொருளாதார அமைப்பின் பிரதிநிதியாக இருந்து சமர்ப்பிக்கப்படுவதாகும்.”

– அலெக்சாண்டர் ட்ராச்டென்பர்க் எழுதிய மே தின வரலாறு நூலிலிருந்து…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க