Monday, September 16, 2024
முகப்புசெய்திதமிழ்நாடுகள்ளிக்குடி: கோழிக்கழிவுகளை மக்கச் செய்யும் ஆலையை நிரந்தரமாக மூடு!

கள்ளிக்குடி: கோழிக்கழிவுகளை மக்கச் செய்யும் ஆலையை நிரந்தரமாக மூடு!

கடந்த நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஆறு கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டம் நடத்தி உள்ளனர். குறிப்பாக நச்சு வாயுவின் தாக்கம் அதிகமாக உள்ள சென்னம்பட்டி, பேய்குளம் ஆகிய கிராமங்களில் ஒரு ஓட்டு கூட செலுத்தவில்லை.

-

துரை அருகே உள்ள கள்ளிக்குடியை சுற்றியுள்ள 6 கிராமங்களுக்கு மையமாக கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு எர்த் வைஸ் ஆர்கானிக் என்ற பெயரில் கோழி கழிவுகளை உரமாக மாற்றக்கூடிய தொழிற்சாலை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சு வாயுவால் மேய்ச்சல் ஆடுகள் உயிரிழப்பது, ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயத்தில் ஈடுபடக்கூடிய மக்களுக்கு உடல் உபாதைகள், வாந்தி, மயக்கம், தலை சுற்றல் ஏற்படுவதாகவும், அருகிலுள்ள கண்மாய் நீர் விவசாயத்திற்கும் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளின் தாகம் தீர்ப்பதற்கும் பயன்படுகிறது. தற்போது கண்மாய் நீரும் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.

சோளப்பட்டி, ஓடைப்பட்டி, மேலப்பட்டி, சென்னம்பட்டி, பேய்குளம், உன்னி பட்டி, ஆவல்சூரன்பட்டி ஆகிய கிராமங்களில் பத்தாயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கே மானாவரி விவசாயம் மற்றும் கால்நடைகள் வளர்ப்பைப் பிரதான தொழிலாக மக்கள் செய்து வருகின்றனர். கோடைக்காலம் என்பதால் வயல்கள் அனைத்தும் வறண்டு காட்சியளிக்கின்றன. சில விவசாயிகள் தங்களின் நிலத்தை விவசாயப் பணிகளுக்காக தயார் செய்து வந்தனர். ஆனால் தற்போது ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு வாயுவிற்கு அஞ்சி மக்கள் யாரும் விவசாய நிலங்களுக்கு, வேலைக்கு செல்வதில்லை இதனால் மக்களின் இயல்பான வாழ்க்கையும் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.

இதற்கு எதிராக சென்னம்பட்டி கிராம பொதுமக்கள் 2000 பேர் கூடி கழிவுகளை ஏற்றி செல்லும் வாகனத்தை வழிமறித்து இரண்டு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் மற்றும் போலீசு வாகனத்தில் இருந்த கோழிக்கழிவுகளில் இருந்து வெளியேறும் நச்சு வாயுவின் தாக்கம் அதிகம் இருந்ததால் மக்களிடம் நெருங்கி பேச்சுவார்த்தை நடத்தாமல் தூரத்தில் இருந்து இதற்கு தக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் இப்போது கலைந்து செல்லுங்கள் என்றும் கூறிவிட்டு கழிவு ஏற்றி வந்த வாகனத்தை தொழிற்சாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து கடந்த நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஆறு கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டம் நடத்தி உள்ளனர். குறிப்பாக நச்சு வாயுவின் தாக்கம் அதிகமாக உள்ள சென்னம்பட்டி, பேய்குளம் ஆகிய கிராமங்களில் ஒரு ஓட்டு கூட செலுத்தவில்லை. தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை. ஆனால் இப்பொழுது தற்காலிகமாக மட்டுமே மூடப்பட்டுள்ளது.


படிக்க: எண்ணெய் கழிவு: நிர்கதியாக்கப்பட்ட எண்ணூர் மக்கள்


சோளப்பட்டியில் 20 நாட்களுக்கு முன்பாக இரவு 8 மணிக்கு மேல் திடீரென நச்சு வாயு கிராமம் முழுவதும் பரவியுள்ளது. என்னவென்று தெரியாமல் அருகில் உள்ள காட்டு பகுதி கிணறுகளில் பிணம் கிடக்குமோ என்று தேடி உள்ளனர். வீட்டிற்குள்ளும் நச்சு வாயு பரவியதால் ஊரில் உள்ள அனைவரும் வெளியில் வந்தனர். இதில் குழந்தைகள், பெண்களுக்கு வாந்தி மற்றும் தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது. பச்சிளம் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளை அருகில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள். அன்று இரவு ஊரின் வெளியே சென்று சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அங்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கொடுத்ததையடுத்து சோளப்பட்டி கிராம மக்கள் கலைந்து சென்றுள்ளனர்.

“மக்களின் நிலைமையோ மோசமாக இருக்கும் இப்படிப்பட்ட சூழலில் ”

RTO அதிகாரி இடம் பேச்சுவார்த்தை நடத்திய போது பேய்குளம் கிராம மக்கள் நிரந்தரமாக தொழிற்சாலை மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். தற்காலிகமாக மூடுவதற்கு மட்டும் உறுதியளிக்கிறேன். நிரந்தரமாக மூடுவதற்கு என்னால் உறுதியளிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளை ஆய்வு நடத்த மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கியதை அடுத்து. அதன் பேரில் ஆலையில் நடத்தப்பட்ட சோதனையில் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆலை இயங்கி வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


படிக்க: மதுரை: விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் அழிக்க வரும் மூன்று கிரானைட் குவாரிகள்!


“இந்த ஆலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து கோழிக் கழிவுளை வாகனங்களில் சேகரித்து அதை உரமாகத் தயாரித்து அது தாவரங்களுக்கு ஊட்டச்சத்து தரும் வகையில் மாற்றப்படுகிறது. அதன் கழிவு நீர் மீண்டும் சுத்திகரிப்பு செய்யப்பட்டு தொழிற்சாலையினுள் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து எந்த விதமான சுற்றுச்சூழலுக்கு கேடான வாயுக்களும் வெளியே வரவில்லை,” என்றும்

“தொழிற்சாலை பகுதியிலிருந்து மக்கள் வசிக்கும் பகுதி இரண்டு கிலோமீட்டருக்கு வெளியில்தான் இருக்கிறது. மேலும், அவரது சொந்த இடத்தில் அரசிடமிருந்து உரிய அனுமதிகளை வாங்கி ஆலையை நடத்தி வருகின்றனர்.” என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா கூறியிருப்பது தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சுவாயுவால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் தீவிரத்தை உணராமலும் ஆறு கிராம மக்கள் மற்றும் கால்நடைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் தொழிற்சாலையின் உரிமையாளருக்கு ஆதரவாக இருக்கிறது. மக்கள் மத்தியில் அரசு அதிகாரிகளின் மீது அவநம்பிக்கை உருவாகி இருப்பதை பற்றி வினவு தோழர்களின் களஆய்வின் போது தெரிய வந்தது .

சோளம், சோளக்கருது, பாசிப்பயிறு, உளுந்து, சீனி, அவரைக்காய், மிளகாய்,மூலிகை வேர், விவசாய வேலைகளுக்கும், ஆடு, மாடு மேய்ச்சலுக்கும் செல்ல முடியவில்லை இதனால் வேற பகுதிகளுக்கு வேலைக்கு செல்கின்றோம். ஆடி மாதத்தில் நச்சு வாயுவின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சொல்கின்றனர். இந்த தொழிற்சாலையினால் சுற்றுச்சூழலும் எங்களது வாழ்வாதாரமும் ஆரோக்கியமும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. தற்போது தற்காலிகமாக மூடப்பட்டிருந்தாலும் அதை நிரந்தரமாக மூடுவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஆறு கிராம மக்களும் போராடுவதற்கு தயாராக உள்ளோம் இதில் எந்த ஒரு சமரசமும் இல்லை போராடியும் தீர்வு இல்லை என்றால் அடித்து உடைப்பதற்கும் தயாராக உள்ளோம் என்று மக்கள் கருத்து தெரிவித்தனர்.

சுற்றுச்சூழலையும், மக்களின் ஆரோக்கியத்தையும் சீர்கெடுக்கும் இது போன்ற தொழிற்சாலைகளுக்கு அரசு அனுமதி வழங்குவதை நிறுத்த வேண்டும். தற்போது இதுபோன்று செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை நிரந்தரமாக மூடி அதன் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

மக்கள் கலை இலக்கிய கழகம்,
மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க