எண்ணெய் கழிவு: நிர்கதியாக்கப்பட்ட எண்ணூர் மக்கள்

வடசென்னையை பொறுத்தவரை பல ஆண்டுகளாகவே ‘வளர்ச்சி’ திட்டங்கள் என்ற பெயரில் பாரத்மாலா, சாகர்மாலா போன்ற நாசகர திட்டங்கள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகின்றன.

எண்ணெய் கழிவு:
நிர்கதியாக்கப்பட்ட எண்ணூர் மக்கள்
மீளாத் துயரத்தில் வடசென்னை

சென்னை மிக்ஜாம் புயலில் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் வடசென்னை மற்றும் தென்சென்னை பகுதிகள் முக்கியமானவை. குறிப்பாக, சென்னையின் பூர்வகுடி மக்கள் வாழும் எண்ணூர் பகுதியில் கடலில் எண்ணெய் கழிவுகள் வெளியேற்றப்பட்டதாலும் அவை வெள்ளநீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததாலும் எண்ணூர் சுற்றுவட்டார மீனவ கிராம மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதியாக்கப்பட்டுள்ளனர்; குழந்தைகள் உட்பட பலரும் உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். லாபவெறிப்பிடித்த சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சி.பி.சி.எல்.) உள்ளிட்ட பெருநிறுவனங்களின் இக்கொடூர செயலினால் வடசென்னையின் பெரும்பான்மை பகுதிகள் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன.

டிசம்பர் நான்காம் தேதி மிக்ஜாம் புயலின்போது, ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல்., தன்னுடைய நிறுவனத்தில் தேக்கி வைத்திருந்த டன் கணக்கான எண்ணெய் கழிவுகளை பக்கிங்காம் கால்வாயில் திருட்டுத்தனமாக வெளியேற்றியது. இதனை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமும் உறுதி செய்துள்ளது.

எண்ணூர் கழிமுகத்தில் உள்ள நீரை ஆய்வுசெய்த பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பிரபாகரன், நீரில் பென்சீன் (benzene),டொலுயீன் (toluene) போன்ற அபாயகரமான ரசாயனங்கள் அனுமதிக்கப்படும் அளவைவிட 40 மடங்கு அதிகமாக இருக்கிறது எனவும் அத்தகைய ஆபத்தான எண்ணெய் கலந்த நீரில் 40 கிராம மக்கள் ஐந்து நாட்கள் வாழ்ந்திருப்பதாகவும், இதன் விளைவாக அம்மக்களுக்கு பல உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலைக் கூறுகிறார்.

“வழக்கமா சென்னைல மழை பேஞ்சா ஆத்துல தண்ணி அதிகமாகும். பளபளன்னு கண்ணாடி மாதிரி வரும். ஆனா 5-ஆம் தேதி வந்த தண்ணி கறுப்பு நிறத்துல சாக்கடை மாதிரி இருந்துச்சு. ஊரெல்லாம் ஒரே ஆயில் நாத்தம். கண்ணெல்லாம் எரியத் தொடங்கிடுச்சு. நிறைய பேருக்கு வீசிங் வந்துடுச்சு. அப்பப்போ தண்ணியில ஆயில் மிதக்கும். ஆனா இது விபரீதமா இருந்துச்சு. அஞ்சு நாளு இந்த கருமத்துக்குள்ளேயே கெடந்தோம்” என்று தங்களுக்கு நேர்ந்த கொடூரத்தை விவரிக்கிறார், நெட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்.


படிக்க: அச்சத்தில் எண்ணூர் மக்கள் – அமோனியா கசிவால் மூச்சு திணறல் | தோழர் மருது


இத்தகைய அபாயகரமான எண்ணெய் கழிவுகளை புயலின்போது பக்கிங்காம் கால்வாயில் வெளியேற்றினால், கழிவுகள் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் புகும்; மக்களின் உடல்நலம் பாதிக்கப்படும்; வாழ்வாதாரம் அழிக்கப்படும் என்பதெல்லாம் சி.பி.சி.எல். நிறுவனத்திற்கு தெரியாமல் இல்லை. தெரிந்தேதான் எண்ணெய் கழிவுகளை வெளியேற்றி இருக்கிறது. சி.பி.சி.எல். நிறுவனத்தின் இந்நடவடிக்கை ஒரு பயங்கரவாத நடவடிக்கையாகும்.

ஆம், அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் கனிம வளங்களை சூறையாட காடுகளிலிருந்தும் மலைகளிலிருந்தும் பழங்குடியின மக்கள் விரட்டியடிக்கப்படுவதைப் போல, இதுவும் மீன்பிடி தொழிலை நம்பி வாழும் மீனவ மக்கள் மீது தொடுக்கப்பட்ட பயங்கரவாத நடவடிக்கையாகும்.

வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதியான மீனவ மக்கள்

கொசஸ்தலை ஆறு கடலில் கலக்கும் எண்ணூர் கழிமுகத்தைச் சுற்றி தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், எண்ணூர் குப்பம் உள்ளிட்ட எட்டு மீனவ கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் உள்ள சுமார் 30,000 மீனவ மக்கள் ஆழ்கடலுக்கு செல்லாமல், கட்டுமரத்தை ஒத்த சிறிய அளவிலான படகுகளை கொண்டு கழிமுகத்தில் குறைந்த அளவிலான மீன்களை பிடிப்பதையே தங்கள் வாழ்வாதரமாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், எண்ணூர் கழிமுகத்தில் எண்ணெய் கழிவுகள் வெளியேற்றப்பட்டுள்ளதால் எட்டு கிராம மீனவ மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. மீனவர்களின் படகுகள், வலைகள், என்ஜீன்கள் மீது எண்ணெய் கழிவுகள் படிந்து மீண்டும் பயன்படுத்த முடியாத அளவிற்கு நாசமாகி கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு மாதத்திற்கு மேலாக மீன்பிடிக்க செல்ல முடியாமல் மீனவர்கள் வறுமையில் வாடிவருகின்றனர்.வெளியேற்றப்பட்ட எண்ணெய் கழிவு பழவேற்காடு ஏரிவரை பரவியுள்ளதால் அங்குள்ள மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நெட்டுக்குப்பம் கிராம மீனவர்கள் வினவு களச் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “சாவுற நிலமையில இருக்கிறோம். கிராமத்துல அரிசி கொடுத்தாங்க. அதை வைத்துதான் கஞ்சி குடிச்சிக்கிட்டு இருக்கிறோம். போர் பம்பில் தண்ணீர் அடித்தால் ஆயில் கலந்த தண்ணீர் வருகிறது. அதை எப்படி குடிக்க முடியும். ஒரு கேன் வாங்குனா 20 ரூபாய். அதை வாங்ககூட வழியில்ல” என்று தங்களின் அவலநிலையை வெளிப்படுத்துகின்றனர்.

மேலும், எண்ணூர் கழிமுகம் மீன், இறால் போன்ற பல கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கான இடமாக உள்ளது. வஞ்சிரம் போன்ற பல மீன்கள் இங்கு உற்பத்தியாகித்தான் கடலுக்குள் செல்கின்றன. இத்தகைய சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை எண்ணெய் கழிவுகள் சிதைத்து சின்னாபின்னமாக்கி இருக்கின்றன. மீன்கள் செத்து கரை ஒதுங்கியுள்ளன.

“இனிமே இந்த ஆத்த நம்பி ஒன்னுமே செய்ய முடியாது சார். மேலே மிதக்குற ஆயில் அப்படியே பூமியில படிஞ்சுடும். மீன் இனப் பெருக்கத்துக்கான வாய்ப்பே இல்லாமல் போய்விடும்” என குமுறுகின்றனர் பாதிக்கபட்ட மீனவர்கள்.

ஏற்கனவே, எண்ணூர் மீன் என்றாலே எண்ணெய் நாற்றம் அடிக்கும் என்ற மனநிலை பொதுமக்கள் மத்தியில் உள்ளது. இதனால் ஆழ்கடலுக்குள் சென்று மீன்பிடித்து வந்தாலும் மக்கள் வாங்க மறுக்கின்றனர் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், தற்போது எண்ணெய் கழிவுகள் கலந்துள்ளதால் மீனவர்களின் வாழ்க்கை மேலும் மோசமடைந்துள்ளது.

இவையன்றி, பாதிக்கப்பட்டுள்ள கிராம மக்கள் தோல்நோய், கண்ணெரிச்சல், சுவாசக்கோளாறு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகளுக்குள்ளாகி உள்ளனர். பகுதி முழுக்க எண்ணெய் கழிவுகள் கலக்கப்பட்டுள்ளதால் மக்கள் சமைப்பதற்கு அடுப்பு பற்றவைக்க கூட அஞ்சுகின்றனர். மண்ணை தோண்டினால் நீருக்கு பதில் எண்ணெய் கழிவுகள் சுரக்கும் அளவிற்கு அப்பகுதி நாசமடைந்துள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வெள்ள நீர் வடிந்த பிறகும் எண்ணெய் கழிவுகள் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. அக்கழிவுகள் மீது சூரிய வெளிச்சம் பட்டால் துர்நாற்றம் வீசுவதாகவும் அதை சுவாசிப்பதால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் ஏற்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இன்றுவரை தி.மு.க. அரசு அதை சுத்தம் செய்வதற்கான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்பது குறித்தும் தி.மு.க. வாயை திறக்கவில்லை. சொல்லப்போனால், மக்களை மீட்பது குறித்து தி.மு.க-விடம் எந்த திட்டமும் இல்லை. சி.பி.சி.எல். நிறுவனத்தை எவ்வாறு காப்பாற்றுவது என்பதில் மட்டுமே தி.மு.க. கவனம் செலுத்தி வருகிறது.

மீனவ மக்களை வஞ்சிக்கும் தி.மு.. அரசு

எண்ணெய் கழிவுகள் வெளியேற்றப்பட்ட இவ்விவகாரத்தில் தி.மு.க. அரசானது, ஆரம்பம் முதலே சி.பி.சி.எல். நிறுவனத்துக்கு ஆதரவாகவும் மீனவ மக்களுக்கு விரோதமாகவுமே செயல்பட்டுவந்தது. எண்ணெய் கழிவுகள் ஐந்து நாட்களாக மக்கள் குடியிருப்புகளுக்குள் சூழ்ந்திருந்த போதும், தி.மு.க. அரசின் அதிகாரிகளும் அமைச்சர்களும் அப்பகுதி மக்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இவ்விவகாரம் பொதுவெளியில் பேசுபொருளான பிறகுதான் அப்பகுதிகளை பார்வையிட சென்றனர்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வுசெய்த தமிழ்நாடு அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம், “அதிகப்படியான மழையால் சி.பி.சி.எல். தனது ஆலையைக் காப்பாற்ற மழைநீரை வெளியேற்றியது. அந்த நீருடன் எண்ணெய் தடயங்கள் வெளியேறின” என அயோக்கியத்தனமாக கூறியது. நீர்நிலைகளில் 5 கி.மீ. நீளத்துக்கு மேல் தடிமனான எண்ணெய்பொருள் மிதந்தது என்பதனை நீர்வள ஆதாரத்துறையே அம்பலப்படுத்திய பிறகும் சி.பி.சி.எல். நிறுவனமே சொல்லத் துணியாத பொய்யை தமிழ்நாடு அரசு கூறியது.


படிக்க: எண்ணூர் எண்ணெய் கசிவு – பாதிக்கப்படும் 6 கிராமங்கள் | தோழர் அமிர்தா


மேலும், சி.பி.சி.எல். நிறுவனத்துடன் இணைந்து எண்ணெய் கழிவுகளை அகற்றுமாறு தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிடும்வரை தி.மு.க. அரசு கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொள்ளவே இல்லை. பணிகளை தொடங்கியபோதும் சி.பி.சி.எல். நிறுவனத்தை இப்பணியில் ஈடுபடுத்தாமல் அப்பாவி மீனவ மக்களை வைத்து கழிவுகளை அகற்ற வைத்தது. கடலுக்கு அருகே சென்றாலே மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டபோதும் தங்களுடைய வாழ்வாதாரத்துக்கு அடிப்படையான நீர்நிலைகளை காப்பதற்காக, மீனவர்கள் இந்த ஆபத்தான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே பொதுமக்கள், சூழலியல் ஆர்வலர்கள் கொடுத்த அழுத்தத்தின்பேரில் எண்ணெய் கழிவுகளை அகற்ற சி.பி.சி.எல். நிறுவனத்திற்கு தி.மு.க. அரசு உத்தரவிட்டது. ஆனால், எண்ணெய் கழிவுகளை அகற்ற ஒரு டிரமுக்கு ரூ.1000 தருவதாக கூறி மீனவர்களின் கையறு நிலையை நயவஞ்சகமாக பயன்படுத்திக்கொண்டது, சி.பி.சி.எல். நிறுவனம். மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு உள்ள சூழலில் அரசின் துணையின்றி அந்நிறுவனத்தால் இத்தகைய செயலை செய்யமுடியாது.

மேலும், கழிவுகளை அகற்றுவதற்கு எண்ணெயை  உறிஞ்சும் நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசின் அறிக்கைகள் கூறிவந்தது. ஆனால், எந்த பாதுகாப்பு உபகரணங்களுமின்றி மீனவர்கள் பேரல், ஜக்கு, புனல், பேப்பர்களைக்கொண்டு கழிவுகளை அகற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி தி.மு.க. அரசை அம்பலப்படுத்தின.

கார்ப்பரேட்டுகளை விரட்டியடிப்போம்

வடசென்னையை பொறுத்தவரை பல ஆண்டுகளாகவே ‘வளர்ச்சி’ திட்டங்கள் என்ற பெயரில் பாரத்மாலா, சாகர்மாலா போன்ற நாசகர திட்டங்கள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகின்றன.

ஏனெனில், சி.பி.சி.எல். நிறுவனம் எண்ணெய் கழிவுகளை திறந்துவிடுவது இது முதன்முறை அல்ல, இதற்கு முன்னர் பலமுறை திறந்துவிட்டிருக்கிறது. அப்பகுதியில் அமைந்துள்ள மற்ற தொழிற்சாலைகளும் நீர்நிலைகளில் அபாயகரமான கழிவுகளை பல ஆண்டுகளாக திறந்துவிட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

இப்பகுதிகளில் மட்டும் அனல்மின் நிலையங்கள், உரத் தொழிற்சாலைகள், பெட்ரோலிய சுத்திகரிப்பு மையங்கள் என மிகக் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 43 சிவப்புநிற வகைப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் (Red Category Industries) உள்ளன. இந்த ஆலைகளிலிருந்து நச்சுத்தன்மை வாய்ந்த சல்ஃபர் டை ஆக்ஸைடு (SO2), நைட்ரஜன் ஆக்ஸைடு (NOx) ஆகிய வாயுக்களும் பல நுண் துகள்களும் காற்று மண்டலத்தில் விதிமுறைகளை மீறி வெளியிடப்படுவதால் கடுமையான காற்றுமாசு ஏற்படுகிறது. அனல்மின் நிலையங்கள், திறந்தவெளியில் சாம்பல் கழிவுகளைக் கொட்டி வைத்திருப்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

இத்தகைய அபாயகரமான கழிவுகள் வெளியேற்றத்தால் எண்ணூர், எர்ணாவூர், மணலி ஆகிய பகுதிகள் வாழத் தகுதியற்றவையாக மாறிவருகின்றன. இங்குள்ள நாசகர தொழிற்சாலைகளால் தங்கள் உயிருக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற ஒருவித அச்ச உணர்விலேயே இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

மத்தியில், மோடி ஆட்சிக்கு வந்தபிறகு இப்பகுதிகளில் கார்ப்பரேட் சுரண்டல் தீவிரமாக்கப்பட்டு, இந்நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. தி.மு.க. அரசும் இவ்விவகாரத்தில் பா.ஜ.க-வுடன் கூட்டு சேர்ந்துகொண்டு மக்கள் விரோதமாக கார்ப்பரேட் சேவை செய்கிறது. ஓ.என்.ஜி.சி. நிறுவனம் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ-கார்பன் எடுப்பது, அதானி துறைமுக விரிவாக்கம் வரிசையில் சி.பி.சி.எல். எண்ணெய் கழிவு வெளியேற்றத்தில் இது மீண்டும் அம்பலமாகியுள்ளது.

அரசு-கார்ப்பரேட் கூட்டின் இந்த அபாயமிக்க நாசகர திட்டங்களை தடுத்து, மக்களையும் இயற்கை வளங்களையும் அழிவிலிருந்து காக்க வேண்டுமெனில், மீனவ மக்களுடன் இணைந்து வடசென்னையில் உள்ள அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களையும் வெளியேற வைக்கும் வகையிலான போராட்டத்தை கட்டியமைக்க வேண்டும். இதனை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தைப் போல மாபெரும் மக்கள்திரள் போராட்டமாக வளர்த்தெடுக்க வேண்டும்.


சிவராமன்

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க