Saturday, September 14, 2024
முகப்புசெய்திதமிழ்நாடுதாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கும் ஆதிக்க சாதிவெறியர்கள்

தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கும் ஆதிக்க சாதிவெறியர்கள்

இத்தனை ஆண்டுகளாகத் தங்களுக்குள் எந்தப் பிரச்னையும் வந்ததில்லை என்றும் ஆதிக்க சாதி இளைஞர்கள் தற்போது தான் எங்களை கோவிலுக்குள் வரவிடாமல் தடுக்கின்றனர்.

-

சேலம் மாவட்டம் காடையம்பட்டி தாலுகா அருகே தீவட்டிப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களின் 500 குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்திற்கு மிக அருகிலுள்ள நாச்சினம்பட்டியில் 200 தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் உள்ளன.

தீவட்டிப்பட்டி மற்றும் நாச்சினம்பட்டி கிராமங்களுக்கு மத்தியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மாரியம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் இந்தாண்டுக்கான திருவிழா சில நாட்களுக்கு முன்பு துவங்கியது.

அப்போது தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலில் நுழையக்கூடாது என்று ஆதிக்க சாதி வெறியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திருவிழா பாதியில் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோயிலும் மூடப்பட்டது.

இந்த பிரச்னை தொடர்பாக மே 2 அன்று காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருதரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்த அதிகாரிகள், “கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் வரக்கூடாது என தடை விதிக்க முடியாது. அனைவரும் சென்று வழிபடும் வகையில்தான் அரசு வழி வகுத்துள்ளது”என்றனர்.

தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் அனுமதிப்பதை அரசு தடுக்காது என்பதை அறிந்த ஆதிக்க சாதி வெறியர்கள், திட்டமிட்டு மே 3 அன்று கலவரத்தை ஏற்படுத்தினார்கள். இதில் தீவட்டிப்பட்டியில் உள்ள பல கடைகள் எரிக்கப்பட்டும் அடித்து நொறுக்கப்பட்டும் சேதம் அடைந்துள்ளன. அப்போது, அப்பகுதியில் இருந்த நகைக்கடை, காய்கறிக்கடை என 5 கடைகள் தீக்கிரையாகின.


படிக்க: சேலம்: ஓமலூர் தீவட்டிப்பட்டியில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலில் நுழையத் தடை! | மக்கள் அதிகாரம்


தீக்கிரையாகிய நகைக்கடைக்கு அருகே பூக்கடை நடத்தி வரும் சரஸ்வதி என்பவர் “இந்தக் கட்டிடத்தில் ஆதிக்க சாதி, தாழ்த்தப்பட்ட சாதி எனப் பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்களும் கடை வைத்துள்ளனர். தீ பிடித்ததில் இருதரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த, (03-05-2024) அன்று மதியம் 1:00 மணிக்கு மேல் திடீரென இப்பகுதியில் பல இளைஞர்கள் கற்களை வீசித் தாக்கிக் கொண்டு இருந்தனர்,” என விவரித்தார்.

இத்தனை ஆண்டுகளாகத் தங்களுக்குள் எந்தப் பிரச்னையும் வந்ததில்லை என்றும் ஆதிக்க சாதி இளைஞர்கள் தற்போது தான் தங்களை கோவிலுக்குள் வரவிடாமல் தடுக்கின்றனர் என்றும் தெரிவித்தார் நாச்சினம்பட்டி தங்காய்.

எனக்கு 63 வயதாகிறது. பல ஆண்டுகளாக நாங்கள் மாரியம்மன் கோவிலுக்கு உள்ளே சென்று வழிபாடு நடத்தி வருகிறோம். எங்கள் பகுதியில் மாரியம்மனை வைத்து பூஜை செய்து கோவிலுக்கு அழைத்துச் சென்றுதான் திருவிழா நடத்துவார்கள். அங்குள்ள சாதியினரும் நாங்களும் ஒன்றாகத்தான் இருந்து வந்தோம்.

ஆனால், இந்த ஆண்டு “தாழ்த்தப்பட்ட சாதியினர் கோவிலுக்குள் வரக்கூடாது” என்று பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் கூறியதோடு, சாதிப் பெயரை வைத்து மிக மோசமாக திட்டினார்கள்.

“தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தால் என்ன? நாங்களும் மனிதர்கள்தானே, எங்களுக்கும் கோவிலுக்குள் சென்று வழிபட உரிமை உள்ளது. நாங்கள் எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம், எங்களை கோவிலுக்குள் வழிபட அனுமதிக்க வேண்டும், மீண்டும் நாங்கள் பிரச்சினையின்றி வாழ வேண்டும்” என்றார் நாச்சினம்பட்டி தங்காய்.


படிக்க: சேலம் மாவட்டம் – வடகுமரை தலித் மக்களின் ஆலய நுழைவுப் போராட்டம் ! அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் ஆதரிப்போம் !


மேலும் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மீது ஆதிக்க சாதியினர் கற்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனால் தாழ்த்தப்பட்ட மக்களில் பலரும் மண்டை உடைந்து படுகாயமடைந்துள்ளனர்.

நாச்சினம்பட்டியில் பல வருடங்களாக தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒன்றாக சேர்ந்து மாரியம்மன் கோவிலுக்கு உள்ளே சென்று வழிபாடு நடத்தி வந்துள்ளனர். ஆனால் தற்போது தான் அவர்களிடையே கலவரம் நடந்துள்ளது. அப்பகுதியில் உள்ள ஆதிக்க சாதிவெறியர்கள் ஒன்றிணைந்து நடத்திய இந்தக் கலவரம் என்பது திட்டமிட்ட ஒன்றாகும். இதற்குக் காரணமான ஆதிக்க சாதி வெறியர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் அடைக்கப்பட வேண்டும்.

கலவரம் முடிந்ததும், நாச்சினம்பட்டிக்கு சென்ற போலீசு அங்கிருந்த தாழ்த்தப்பட்ட மக்களை கடுமையாகத் தாக்கி, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளது. வீடு புகுந்து அங்கிருந்த பெண்களையும் தாக்கியுள்ளது.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்திய போலீஸை கைது செய்து விசாரிக்க வேண்டும். ஆதிக்க சாதி வெறியை தூண்டிவிட்டு வயிறு வளர்க்கும் ஆதிக்க சாதிவெறி சங்கங்களை தமிழ்நாடு அரசு முற்றாக தடை செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபடுவதற்கான உரிமையை மீட்டுத் தர வேண்டும்.

செய்தி ஆதாரம்- பிபிசி தமிழ்


ஆதன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க