என் கழுத்துக்கு மேலே ஆலிவ் இலைகளை வரையுங்கள்… | பாலஸ்தீன கவிதை

உலகின் செவிகளுக்கு நாங்கள் உணர்த்த விரும்புவது எங்கள் மரண ஓலத்தை அல்ல.. விடுதலை முழக்கத்தை!

என் கழுத்துக்கு மேலே ஆலிவ் இலைகளை வரையுங்கள்…

இதோ…
இவ்வுலகை விட்டு பறந்து சென்று கொண்டிருக்கிறேன்
தலையில்லாத முண்டமாய் பறப்பதால்
உங்களுக்கு என்னை அடையாளம் தெரியாமல் இருக்கலாம்.
அதற்காக நீங்கள் வருந்த வேண்டாம்..

என் அப்பா-அம்மாவே
என்னை உடனடியாக அடையாளம் காண முடியாமல்
சற்று தவித்துதான் போனார்கள்…

முண்டமாக என்னை பார்ப்பதில்
உங்களுக்கு ஏதேனும் சங்கடம் இருந்தால்
என் கழுத்துக்கு மேலே
ஏதாவது வரைந்து கொள்ளுங்கள்…

அது தர்பூசணி பழமாகவோ
ஆலிவ் இலைகளாகவோ இருந்தால்
நான் நிச்சயம் மகிழ்ச்சியடைவேன்

அல்லது என் உருவத்தில் ஒரு ஹண்டாலா வரையுங்கள்
திரும்பி நிற்கும் அந்த சித்திரத்திற்கு
என் முகம் தேவை இல்லை அல்லவா?

எளிமையாக ஏதேனும் வரைய எண்ணினால்
என் கழுத்துக்கு மேலே பாலஸ்தீன கொடியை வரையுங்கள்
பாலஸ்தீன விடுதலையின்
இன்னுமொரு அடையாளமாய் மாறிப் போகிறேன்.

இவை எதுவும் வரையாமல்
நான் முண்டமாகவே காட்சியளித்தாலும்
அதில் குறையேதும் இல்லை

கோரமான அந்த காட்சி
யூத இனவெறி ஓநாய்களின்
தூக்கத்தை கலைக்கும் என்று
நான் உறுதியாக நம்புகிறேன்

ஏனெனில், குறிவைத்து கொன்றுவிட்டு
அதனை ‘துயரமான தவறு’ என்று ‘கடந்து செல்லும்’
அந்த பாசிச கூட்டத்திற்கு
என்னை அடையாளம் தெரியாமல் போக
வாய்ப்பில்லை அல்லவா?

எங்களின் பாலஸ்தீன கொடியை போல
நானும் இந்நேரம்
அவர்களுக்கு கொடுங்கனவாய் மாறியிருப்பேன் என்பதில்
எனக்கு துளியும் சந்தேகம் இல்லை

ஓ அமெரிக்க-இஸ்ரேல் போர்வெறி ஓநாய்களே…
என்ன நினைத்தீர்கள்?
தலைகளை துண்டாக்கினால்
எங்களின் ஓலங்களை
உலகம் கேட்காமல் செய்துவிடலாம் என்றா?

பாசிஸ்டுகள் பயங்கொல்லி முட்டாள்கள் என்பதை
மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டீர்கள்…

உலகத்தின் ஒட்டுமொத்த கண்களும்
தற்போது ரஃபாவின் எல்லைகளை உற்று நோக்கியிருப்பதையும்
உலக மக்கள் முன்னிலையில் நீங்கள் தண்டிக்கப்படும் நாள்
வெகு தொலைவில் இல்லை என்பதையும்
இன்னுமா நீங்கள் உணரவில்லை?

தலையை துண்டாக்கி முண்டமாக்கினாலும்
உடலை சிதைத்து உருக்குலைத்தாலும்
எங்களது குரல் உலக மக்களை சென்றடைவதை
உங்களால் ஒருபோதும் தடுக்க முடியாது.

ஏனெனில், உலகின் செவிகளுக்கு
நாங்கள் உணர்த்த விரும்புவது
எங்கள் மரண ஓலத்தை அல்ல..
விடுதலை முழக்கத்தை!

உடல் சிதைந்து உயிர் பிரிந்தாலும்
நாங்கள் விட்டுசென்ற சுவாசக் காற்று
எங்கள் விடுதலைக்கு தூது செல்லும்!


துலிபா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க