நாடு முழுவதும் நடந்த மக்கள் போராட்டத்தாலும் எதிர்ப்பினாலும் நாடாளுமன்றத் தேர்தலில் கடுமையான நெருக்கடிகளை சந்தித்த பா.ஜ.க. கும்பல், ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பையும் தனது வெற்றிக்காக பயன்படுத்தியும் கூட, ஆட்சியமைப்பதற்கு தேவையான 272 தொகுதிகளை பெற முடியவில்லை. இந்நிலையில், கூட்டணி கட்சிகள், சுயேட்சை உறுப்பினர்களையெல்லாம் இணைத்துக்கொண்டு மக்களின் உணர்வுக்கு எதிராக இன்று மாலை மோடி ஆட்சி பொறுப்பேற்க உள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மமதா பேனர்ஜி, “பா.ஜ.க. ஜனநாயக விரோதமாகவும் சட்டவிரோதமாகவும் ஆட்சி அமைக்கிறது” என்றும் “இந்த நிலையற்ற மற்றும் பலவீனமான அரசாங்கம் மத்தியில் ஆட்சியில் இருந்து தூக்கியெறியப்படுவதை கண்டு நான் மகிழ்ச்சியடைவேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், “நாட்டிற்கு மாற்றம் தேவை; நாடு மாற்றத்தை விரும்புகிறது. இந்த ஆணை (முடிவு) மாற்றத்திற்காக இருந்தது. நாங்கள் காத்திருக்கிறோம், நிலைமைகளை கண்காணித்து வருகிறோம். இந்த ஆணை நரேந்திர மோடிக்கு எதிரானது. எனவே அவர் இம்முறை பிரதமர் ஆகக்கூடாது. வேறு யாராவது பொறுப்பேற்க அனுமதிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ள மமதா, மோடியின் பதவியேற்பு விழாவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
படிக்க: சங்கிகளே, நாங்கள் உங்களை புறக்கணிக்கிறோம் | கவிதை
ஆனால், அதேசமயத்தில் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டதிலிருந்தே “இந்த தேர்தல், யார் ஆளக் கூடாது என்பதற்கான தேர்தல்”, “மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்காது” என்று பேசிவந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போதுவரை, மோடி பதவியேற்பது பெரும்பான்மை இந்திய மக்களின் உணர்வுக்கு எதிரானது என்று வாய்த் திறக்கவில்லை.
மாறாக, புதிதாக தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய அவர், “400, 370 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்று சொன்ன பா.ஜ.க. தனிபெரும்பான்மை கூட பெற முடியாத நிலைக்கு பலவீனப்பட்டுள்ளது; பலவீனமான பா.ஜ.க. அரசை நம் முழக்கங்கள் மூலம் செயல்பட வைக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.
அதாவது, எந்த பா.ஜ.க. கடந்த பத்தாண்டுகால ஆட்சியில் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் சூறையாடிக் கொண்டிருக்கிறதோ அதே பா.ஜ.க-வை நெட்டித்தள்ளி மக்களின் வாக்குறுதிகளை செயல்பட வைக்கப் போகிறாராம். ஸ்டாலினின் இப்பேச்சு, பாசிச மோடி கும்பலை எதிர்ப்பதில் தி.மு.க-வின் சந்தர்ப்பவாதத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது.
பாசிச மோடி கும்பல் நாட்டை ஆளக் கூடாது என்பதுதான் இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் உணர்வுநிலை. நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவும் அதைதான் உணர்த்தியது. தமிழ்நாடு மக்களின் உணர்வும், தொடக்கத்திலிருந்தே, பா.ஜ.க. பாசிசக் கும்பல் நாட்டை ஆளக் கூடாது என்பதாகவே இருந்து வருகிறது. ஆனால், அதனை இந்திய அளவில் பேசுபொருளாக்குவதற்கு பதிலாக மோடி நாட்டை ஆள்வதை ஏற்கவைக்கும் வேலையை தி.மு.க. செய்கிறது. திராவிட இயக்கத்தின் போர்வாள் என்று சொல்லிக்கொண்டே தமிழ்நாடு மக்களை பார்ப்பனியத்திற்கு மண்டியிட வைக்கும் வேலையை தி.மு.க. மேற்கொள்கிறது.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube