தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசு!
தன்னுரிமையை கேட்காமல் தண்ணீர் ஒருபோதும் வராது!
17.07.2024
மக்கள் அதிகாரம் அறிக்கை
காவிரி நீருக்கான போராட்டம் காலம் முழுவதும் நீண்டு கொண்டே இருக்கிறது. கர்நாடகத்தில் காங்கிரசு, பாரதிய ஜனதா, ஜனதா தளம் என யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விடக்கூடாது என்பதில் மட்டும் ஒற்றுமையுடன் இனவெறியோடு செயல்படுகிறார்கள்.
கர்நாடகாவில் உள்ள எந்த ஒரு தேசிய கட்சியும் சரி, திமுக, அதிமுக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கர்நாடக இனவெறி அரசுக்கு ஆதரவாக இருப்பது மிகவும் வெட்கக்கேடானதாகும்.
கர்நாடகத்தில் இனவெறியைத் தூண்டி வரும் பாசிச பாஜகவின் மோடி அரசு ஒருபோதும் காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை பெற்று தராது.
ஒரு நீரின் மீதான முற்றுரிமை கடைமடை பகுதிக்கே என்பது உலகம் முழுவதும் உள்ள நியதி. ஆனால் இந்த உரிமையை திட்டமிட்டு கன்னட இனவெறி அரசு மீறும் போதெல்லாம் ஒன்றிய அரசு எப்பொழுதும் நடுநிலையுடன் செயல்பட்டது இல்லை. மாறாக கன்னட இனவெறி அரசுக்கு ஒத்ததூதுகின்ற வேலையை தொடர்ச்சியாக செய்தது, செய்து கொண்டும் வருகிறது.
காவிரி ஒழுங்காற்று ஆணையம், ஒரு டிஎம்சி தண்ணீர் தினமும் திறந்து விட வேண்டும் என்று கூறியபிறகும் கூட அதற்கு எதிராக கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க 2018 இல் தமிழ்நாடு மேற்கொண்ட போராட்டங்கள் நீண்டது, நெடியது.
படிக்க: காவிரி உரிமைக்காக திருவாரூரில் கடை அடைப்பு போராட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு
ஒவ்வொரு முறையும் கர்நாடகத்திடம் கெஞ்சி நம்முடைய உரிமைகளை பெற வேண்டிய அவசியம் இல்லை. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர் இனி கர்நாடகத்திலும் பேசுவதில் எவ்வித பயனும் இல்லை.
உலக நியதியையும் மதிக்க மாட்டோம், காவிரி ஒழுங்காற்று ஆணையம், மேலாண்மை வாரியம் எதையும் மதிக்க மாட்டோம் என்று இனவெறியோடு செயல்படும் கன்னட அரசு ஒன்றிய அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் காவிரி நதிநீர் உரிமை தமிழ்நாட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. அதனை ஊக்குவித்துக் கொண்டிருப்பது ஒன்றிய அரசு தான்.
இது தனிப்பட்ட தமிழ்நாடு, கர்நாடகா பிரச்சனை அல்ல. தேசிய இன பிரச்சனை. தமிழ் தேசிய இனத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்.
இதற்கான போராட்டத்தை ஆளுகின்ற திமுக அரசு ஒருபோதும் முன்னெடுக்கப் போவதில்லை.
கன்னட இனவெறிக்கு தூபம் போடும் தேசிய கட்சிகள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது என்ற சூழலை தமிழ்நாட்டு மக்களாகிய நாம் உருவாக்க வேண்டும். நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட தமிழ்நாட்டுக்கு எதிராக காவிரி நீரைத்தர முடியாது என்ற பரப்புரையை முன்னெடுத்தது பாசிச பாஜக.
ஜல் சக்தி துறை அமைச்சரை சந்திப்பது என்று தமிழ்நாடு அரசு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்திருக்கின்ற முடிவு மிகவும் கோழைத்தனமானது. காவிரி தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு நிறுவனங்கள் முடக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டுக்கு எதிராக கர்நாடகத்தில் செயல்படும் கட்சிகள் இங்கு செயல்பட முடியாத நிலையை உருவாக்க வேண்டும்.
பாசிச பாஜக, திமுகவை குற்றம் சொல்வதும், காங்கிரசை குற்றம் சொல்வதும் என்று மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சொல்வது நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. இந்த நாடகங்களை தமிழ்நாடு மக்கள் புறக்கணித்து தமிழ்நாட்டின் தன்னுரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அது தமிழ்நாட்டு மக்களின் கடமை என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube