2024-25 ஆம் ஆண்டில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 14 படிப்புகள், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் 2 படிப்புகள், மீன்வள பல்கலைக்கழகத்தின் கீழ் 9 படிப்புகளுடன் மூன்று விதமான டிப்ளமோ படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் ஏராளமான மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.
அதேபோல், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலகம் 11 தொகுப்பு கல்லூரிகளில் 33 முதுகலை மற்றும் 28 முனைவர் பட்டப்படிப்பை வழங்குகிறது. இதற்காக இந்த ஆண்டு முதுநிலை படிப்புகளுக்கு 2,330 மாணவர்களும் முனைவர் பட்டப் படிப்புகளுக்கு 380 மாணவர்களும் தங்களின் பாட விருப்பத்தின்படி பல்வேறு திட்டங்களுக்கு விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கு ஜூன் 23 அன்று நுழைவுத் தேர்வு நடைபெற்றது.
இளநிலை மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான தர வரிசையில் பட்டியல் வெளியிடப்பட்டு செப்டம்பர் மாதத்தோடு மாணவர் சேர்க்கை முடிவடைய வேண்டும். அந்த மாதத்தின் இறுதியில் முதுநிலை படிப்புக்கான வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். எனவே, நுழைவுத் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருந்தனர் மாணவர்கள்.
இந்நிலையில் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி மின்னஞ்சல் மூலம் அனுப்பிய தகவல் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. அவர் அனுப்பிய மின்னஞ்சலில் “மறு தேர்வுக்கான தேதி குறித்து பத்து நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும். ஏற்கெனவே பெறப்பட்ட நுழைவுத் தேர்வு கட்டணம் திருப்பி வழங்கப்படும்” என்று கூறப்பட்டிருந்தது பேரிடியாக அமைந்தது.
படிக்க: இந்தியாவில் வேகமாக வேளாண் நிலப்பரப்பு குறைந்திருப்பதற்கான காரணம் என்ன?
தமிழ்நாட்டில் இரண்டே இரண்டு பல்கலைக்கழகங்கள் தான் ஒன்றிய அரசின் பல்கலைக்கழகங்கள். ஆனால், மாநிலப் பல்கலைக்கழகங்கள் 22 உள்ளன. இதில் ஒன்றுதான் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம். இது முழுக்க முழுக்க மாநில அரசின் நிதியில் இயங்கும் பல்கலைக்கழகமாகும்.
இருப்பினும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எந்தத் தகவலையும் பெற முடியாத சூழ்நிலை உள்ளது. பொதுப் பட்டியலில் கல்வி இருக்கிறது என்கின்ற ஒரே காரணத்திற்காக இதன் செயல்பாடுகள் அனைத்தையும் ஒன்றிய அரசு கையில் எடுத்துக் கொண்டுள்ளது. இந்த பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநில அரசிடம் ஊதியம் பெற்றாலும் வேந்தர் ஆளுநர் என்பதால் அவரது கட்டுப்பாட்டுக்குள் உள்ளனர்.
“தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் நடப்பு கல்வி ஆண்டுக்கான முதுகலை மாணவர் நுழைவுத் தேர்வை துணை வேந்தர் ரத்து செய்தது எப்படி?”, “அவருக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்?” என ஏராளமான கேள்விகள் எழுந்துள்ளன. அதுமட்டுமல்ல, துணை வேந்தர் கீதா லட்சுமி விருப்ப ஓய்வு அடிப்படையில் பணி ஓய்வு பெற்று அதற்கான பணப் பலன்கள் அனைத்தையும் பெற்றுக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும், துணை வேந்தராக நீடிப்பதற்கு காரணம் யார்? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
மேலும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு வெளியிட்ட பட்டியலில் மாணவர்களின் பெயர், எந்த ஊர் என்பது மட்டுமே இடம்பெற்றுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் எவ்வளவு? கட் ஆப் என்ன? தேர்வான மாணவர்கள் விபரம் என எதிலும் வெளிப்படைத்தன்மை இல்லை.
படிக்க: தமிழ் விரோத போக்கை கடைப்பிடிக்கும் பாரதியார் பல்கலைக்கழகம்!
இதற்குக் காரணம், இடைத்தரகர்கள் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் முதல் பேராசிரியர்கள் வரை தங்களுக்கு வேண்டிய நபர்கள் உறவினர்கள் மற்றும் ‘அரசியல் பலம்’ படைத்தவர்களிடம் இலட்சக்கணக்கில் பணத்தை கையூட்டு பெற்றுக் கொண்டு சீட் வழங்குவதால் நேர்மையாக தேர்வு எழுதும் பலருக்கும் இடம் கிடைப்பதில்லை என்றும் புகார்கள் உள்ளன.
இவற்றையெல்லாம் மூடி மறைப்பதற்கு தொழில்நுட்பக் கோளாறு என்று கூறி, தேர்வை ரத்து செய்துள்ளார்கள். இதனால் அதிர்ச்சியில் உறைந்திருக்கும் மாணவர் மற்றும் பெற்றோர் தங்களது உள்ள குமுறல்களை வெளிப்படுத்துகின்றனர்.
வேந்தர் என்ற பெயரில் ஆளுநர் மேற்கொள்ளும் அராஜக முடிவுகளால் பல்கலைக்கழக நிர்வாகங்களில் பல்வேறு குளறுபடிகள் நடக்கின்றன. இதன் ஒரு பகுதிதான், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் நுழைவுத் தேர்வு ரத்து. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செய்தி ஆதாரம்: தீக்கதிர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube