தங்களுக்கு வழங்கப்படும் சொற்ப ஊதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி சென்னையில் போராட்டம் நடத்த வந்த “மக்களைத் தேடி மருத்துவம்” திட்ட ஊழியர்களை தமிழ்நாடு போலீசு ஜூலை 30 வளைத்து வளைத்து கைது செய்தது.
மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். 2 மணி நேர பணி என நியமிக்கப்பட்ட ஊழியர்கள், 8 மணி நேரத்திற்கு மேலாக வேலை வாங்கப்படுகின்றனர். துறை சார்ந்த பணி மட்டுமின்றி பிற துறை பணிகளையும் செய்கின்றனர். நாளொன்றுக்கு 183 ரூபாய் (மாதம் சுமார் ரூ.5500) ஊதியத்தில் பணியாற்றும் இந்த ஊழியர்கள் இதிலிருந்து உபகரண பராமரிப்பு, எழுது பொருட்கள், போக்கு வரத்து செலவுகளை செய்து கொள்ள வேண்டும்.
இந்த நிலையில், ஒன்றிய அரசு சுகாதார துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்; மாநில அரசு ஊழியர்களை பணி வரன்முறை படுத்த வேண்டும்; மாத ஊதியத்தை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்; ஊதியத்தை மகளிர் திட்டத்துடன் வழங்குவதை கை விட்டு, வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 30 அன்று சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் போராட்டம் அறிவித்திருந்தனர்.
சென்னையில் பேரணி நடத்தி அரசிடம் முறையீடு செய்ய 29.07.2024 அன்று அவரவர் ஊரில் இருந்து புறப்பட்ட பெண் ஊழியர்களை போலீசு தடுத்து நிறுத்தியுள்ளது. கும்பகோணம், தர்மபுரி, விழுப்புரம் ஆகிய நகர்களில் ரயில் நிலையத்தில் தடுத்து நிறுத்தி உள்ளனர். தேனி, திருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்தவர்களை போலீசு 30.07.2024 அன்று மறைமலை நகர், பரனூர் ஆகிய பகுதிகளில் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளது.
படிக்க: தொடக்கக் கல்வி ஆசிரியர்களை போராடவிடாமல் கைது செய்யும் திமுக அரசு
போலீசின் தடைகளை மீறி தங்களின் குழந்தைகளோடு வந்தவர்களை சென்னையில் வளைத்து வளைத்து கைது செய்தனர். இவற்றையெல்லாம் மீறி மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.கிருஷ்ண மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், “காவல்துறை அணுகுமுறையால் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறை முதல் நாள் அனுமதி தந்துவிட்டு திடீரென்று அனுமதி மறுப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார். “கடந்த 16ஆம் தேதியும் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறை இதேபோன்று நடந்து கொண்டது. இதுதொடர்ந்தால் காவல் துறையின் நடவடிக்கையை எதிர்த்து தொழிற்சங்க இயக்கம் வலுவான போராட்டம் நடத்துவது தவிர்க்க முடியாததாகிவிடும்” என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாடு போலீசின் இந்த அராஜகத்தையும் மனித உரிமை மீறலையும் சி.பி.எம்-இன் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் கண்டித்துள்ளது. தனது தீர்மானத்தில் “பெண் ஊழியர்களை போதுமான பெண் காவலர்களை கொண்டு கையாளாமல், ஆண் காவலர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்து அராஜகமாக செயல்பட்டு உள்ளனர். அதிகாலையில் குற்றவாளிகளைப் போல் பெண் ஊழியர்களை தடுத்து நிறுத்தியதும், அவர்களின் இயற்கைத் தேவை குறித்து கவலை கொள்ளாமலும், மனித உரிமையை அவமதித்து, கைது செய்தது கண்டிக்கத்தக்கது” என்று கூறியுள்ளது.
ஜூலை 29 அன்று தொடக்கக் கல்வி ஆசிரியர்களையும் இதேபோல் போராடவிடாமல் கைது செய்தது திமுக அரசு. தங்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதை எதிர்த்துப் போராடும் மக்களையும், திமுக தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு போராடுபவர்களையும் போலீசைக் கொண்டு தொடர்ந்து ஒடுக்கி வருகிறது.
செய்தி ஆதாரம்: தீக்கதிர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube