திருவாரூர் ஆனைத் தென்பாதி: மக்கள் போராட்டத்திற்குப் பணிந்து பட்டா வழங்க அரசு உத்தரவாதம்

அரசு நடத்திய சமாதான பேச்சுவார்த்தையில் ஆனைத்தென்பாதி மக்கள் 41 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் ஊராட்சிக்கு உட்பட்ட ஆனைத் தென்பாதி என்ற கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக தாங்கள் குடியிருக்கும் நிலத்திற்கு வீட்டு குடிமனை பட்டா கேட்டு போராடி வருகின்றனர். அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் வீட்டு குடிமனை பட்டா கேட்டு பல முறை மனு கொடுத்துள்ள போதும், அரசு இதுவரை‌ இவர்களுக்கு வீட்டு குடிமனை பட்டா வழங்காமல் ஏமாற்றி வருகிறது. அன்றாடம் கூலி வேலைக்கு சென்று வாழ்க்கை நடத்தி வரும் இவர்கள் குடிமனை பட்டா இல்லாததால் அரசின் இலவச வீடு திட்டத்தில் கூட பயன்பெற முடியாமல் மழைக்கும், வெயிலுக்கும் பயந்து குடிசை வீட்டிலே தார்பாய் போட்டு நீண்ட நாட்களாக வாழ்ந்து வருகின்றனர்.

அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனுக்கள் கொடுத்து சோர்ந்து போன மக்கள் பட்டா வழங்காத அரசைக் கண்டித்து மக்கள் அதிகாரம் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவாரூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று (01.08 2024) மாலை 4 மணியளவில் திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் வருவாய் கோட்ட அலுவலர், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர், வருவாய் ஆய்வாளர், காவல் ஆய்வாளர் கொரடாச்சேரி, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உட்கோட்ட நிர்வாக நீதிபதி அவர்கள் தலைமையில் பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் M.முரளி மாவட்ட பொருளாளர் மக்கள் அதிகாரம், M.ஆசாத் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மக்கள் அதிகாரம், K.லெனின் இணை ஒருங்கிணைப்பாளர், மற்றும் ஊர் கிராமவாசிகள் A.காத்தமுத்து, A.சந்திரமோகன், M.முருகராஜ், A.சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரசு நடத்திய சமாதான பேச்சுவார்த்தையில் ஆனைத்தென்பாதி மக்கள் 41 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. சென்னை நில அளவைத்துறை இயக்குநர் அலுவலகத்தில் மாறுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், அரசு தரப்பில் ஒரு மாத காலத்தில் இணைய வழி பட்டாவாக வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்டதின் அடிப்படையில் காத்திருப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக போராட்டக்குழுவினர் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.


தகவல்
தோழர் லெனின்,
இணை ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
திருவாரூர்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க