ஹிண்டன்பர்க் இந்தியாவை அவமதித்துவிட்டது. காங்கிரசுடன் கைகோர்த்துக்கொண்டு இந்தியப் பங்குச் சந்தையை அழிக்க முயல்கிறது. மோடியின் தலைமையில் இந்தியா முன்னேறுவதை விரும்பாத, இளவரசர் ராகுல் காந்தி இந்தக் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இருக்கிறார்.
இதெல்லாம் கடந்த நான்கு நாட்களாக பிஜேபி சொல்லி வருபவை.
ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டு என்ன?
Tax Haven என்று அழைக்கபபடக் கூடிய மொரீஷியஸ், பார்படாஸ் போன்ற நாடுகளின் வழியாக பணத்தைக் கொண்டு வந்து பங்குச் சந்தையில் கொட்டி, செயற்கையான ஏற்றத்தை உருவாக்கி, மிகப்பெரிய ஊழலில் ஈடுபடுகிறது அதானி நிறுவனம் என்பது ஹிண்டன்பர்க்கின் பழைய குற்றச்சாட்டு. வழக்கு நீதிமன்றம் போகவும், அதை சிபிஐ போன்ற ஏஜென்சிகள் விசாரிக்கவேண்டியதில்லை. பங்குச்சந்தையை நிர்வகிக்கும் அமைப்பான செபி விசாரித்து அறிக்கை அளிக்கும் என்றது உச்சநீதிமன்றம்.
இப்போது, எந்த ஊழலை செபி விசாரித்துக்கொண்டிருக்கிறதோ அதில் தொடர்புடைய நிறுவனங்கள் எந்த வழிமுறையில் இந்த ஊழலைச் செய்தனவோ, அதே வழியாக செபியின் தலைவரும் பணத்தை முதலீடு செய்திருக்கிறார் என்பதுதான் ஹிண்டன்பர்க்கின் இரண்டாவது குற்றச்சாட்டு.
தன்னுடைய விளக்கத்தில், நானோ என் கணவரோ எந்த முதலீடும் செய்யவில்லை என்று செபியின் தலைவராக இருக்கிற மாதபி புச் மறுக்கவில்லை. இந்த ஒப்புகையைத்தான் conflict of interest என்கிறது ஹிண்டன்பர்க். செபியின் தலைவர் பதவி விலகவேண்டும், பாராளுமன்ற கூட்டு விசாரணைக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோருகிறது காங்கிரஸ். காங்கிரசின் கோரிக்கையில் எல்லா நியாயமும் உண்டு.
படிக்க: மீண்டும் ஹிண்டன்பர்க் அறிக்கை: அதானியின் கைப்பாவையாக செபியின் தலைவர்
நான், இதில் பிஜேபியே நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கும் என்று சந்தேகப்படுகிறேன். மாதபி புச்சின் நியமனம், அதானிக்கும் மோடிக்கும் உள்ள உறவு, அதானிக்கும் மதாபிக்கும் உள்ள உறவு எல்லாமே சந்தேகப்படும்படும்படியாக இருக்கிறது.
இன்று ஒரு முக்கியமான செய்தி. அதானிக்கு சொந்தமான 1600 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையம் ஜார்கண்டில் இருக்கிறது. அதில் பெறப்படும் மின்சாரம் நூறுசதமும் வங்கதேசத்துக்கு விற்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த ஆகஸ்ட் பன்னிரண்டு முதல், அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை இந்தியாவிற்குள்ளும் விற்கலாம் என்று அனுமதி அளித்து புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது அரசு.
இதன் பொருள் என்ன?
வங்கதேசத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லை. அது பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும். இந்தியாவின் செல்லப்பிள்ளையாக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு துரத்தப்பட்டிருக்கிறார். இதெல்லாம் அதானியின் மின் வியாபாரத்தை பாதிக்கும். நம் அரசு எவ்வளவு விரைவாக, அதானியின் நலனைக் காப்பாற்றும் பொருட்டு களத்தில் இறங்கி, அதானி தயாரிக்கும் மின்சாரத்துக்கு அவசர அவசரமாக நமது சந்தையைத் திறந்துவிடுகிறது பாருங்கள். அதுதான் எனக்கு வியப்பூட்டுகிறது.
இலங்கை பொருளாதாரச் சிக்கலில் இருந்தபோது அதற்கு இந்தியா உதவியது. அப்போது, அதானியின் முதலீடுகளை இலங்கையில் அனுமதிக்கவேண்டும் என்று இந்திய அரசே அழுத்தம் கொடுத்தது என்று இலங்கை அரசில் முக்கியமான பொறுப்பில் இருந்தவரே குற்றம் சாட்டினார்.
அதானிக்கு ஒன்று என்றால் ஒட்டுமொத்த பிஜேபி நிர்வாகமும் களத்துக்கு வருகிறார்கள். எந்த லெவலுக்கும் இறங்கி எதிர்க்கட்சியினர் மீது குற்றம் சுமத்துகிறார்கள். ஆனால் ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுக்கு இதுவரை எந்த நேரடியான, நேர்மையான பதிலையும் மத்திய அரசு சொல்லவில்லை.
இன்றைய இந்தியச் சூழலைப் பொறுத்தவரை பிஜேபி, மோடி, அதானி இம்மூவரும் வேறு வேறல்ல. எதிர்க்கட்சிகள் இன்னும் ஒற்றுமையுடன் வலுவாகக் களத்திற்கு வருவதைத் தவிர வேறு வழியில்லை என்பதே நிலவரம்.
ஜி. கார்ல் மார்க்ஸ்
14.08.2024
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram