திருவாரூர்: சிப்காட் அமைவதை எதிர்க்கும் மக்கள்

தங்கள் விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டால் தங்கள் வாழ்வாதாரம் முழுவதும் பறிக்கப்படும் என்பதை உணர்ந்து கொண்ட மக்கள், சிப்காட் தொழிற் பூங்காக்கள் அமைவதற்கு எதிராகப் போராடத் தொடங்கிவிட்டனர்.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் கரையாபாலையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கட்டளை, கல்லுக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சுமார் 150 ஏக்கர் விவசாய விளை நிலங்களில் சிப்காட் தொழிற் பூங்காக்கள் அமைக்கத் தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 27-ம் தேதி தொழில்துறை அமைச்சர் டி.ஆர். பி ராஜா மற்றும் திருவாரூர் எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ ஆகியோர் சிப்காட் அமையவிருக்கும் இடத்தைப் பார்வையிடச் சென்ற போதும் அவர்களின் வாகனத்தை வழிமறித்து கிராம மக்கள் சிப்காட் தொழிற்சாலை எங்களுக்கு வேண்டாம் என்று கோஷங்களையும் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் சிப்காட் அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்ய வந்த அமைச்சரை அங்குள்ள மக்கள் கேள்வி கேட்ட போது மக்களைச் சமாளிப்பதற்காக தற்போது இந்த இடத்தில் சிப்காட் வரப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

ஆனால் அதன் பிறகும் சிப்காட் அமைப்பதற்கான வேலைகளை அரசு அதிகாரிகள் மறைமுகமாகச் செய்து வந்ததை அறிந்து கொண்ட ஊர் பொதுமக்கள், வியாழக்கிழமை (29-08-2024) அன்று அனைவரும் தங்கள் ஊருக்கு சிப்காட் தொழிற்சாலை வேண்டாம் என மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

சிப்காட் அமைய இருக்கும் இடமானது திருவாரூர் தியாகராஜ கோயில் மற்றும் தருமபுரம் ஆதீனம் ஆகிய இரு கோவில்களுக்கும் சொந்தமான இடமாகும். அந்த நிலத்தில் தான் 75 ஆண்டு காலமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் குத்தகை அடிப்படையில் விவசாயம் செய்து நேரடியாக ஆதினத்திற்கு வரி செலுத்தி வருகின்றனர்.

ஆனால் எந்தவொரு அறிவிப்புமின்றியும், கிராமத்து மக்களிடம்  கருத்துக் கேட்காமலும் திடீரென சிப்காட் வரப்போவதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கூறுவதைக் கேட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். தங்கள் விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டால் தங்கள் வாழ்வாதாரம் முழுவதும் பறிக்கப்படும் என்பதை உணர்ந்து கொண்ட மக்கள், சிப்காட் தொழிற் பூங்காக்கள் அமைவதற்கு எதிராகப் போராடத் தொடங்கிவிட்டனர்.


தோழர் லெனின்,
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
திருவாரூர்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க