“புதிய மூன்று குற்றவியல் சட்டங்களைத் திரும்பப்பெறு”
மதுரை அரங்கக்கூட்டம் | செய்தி – புகைப்படம்
பாசிச மோடி அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி 31.08.2024 அன்று மாலை 5.30 மணியளவில் மதுரை மாட்டுத்தாவணி எதிர்புறம் அமைந்துள்ள ராமசுப்பு அரங்கத்தில் அரங்கக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் தலைமையை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்புக் குழு தோழர்.ரவி முன்மொழிந்தார். அந்த அடிப்படையில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் இராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார்.
தோழர் இராமலிங்கம் தனது தலைமை உரையில், 141 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எந்த விவாதமும் இன்றி அமல்படுத்தியதே பாசிச நடவடிக்கை. மதுரையில் பாசிச பிஜேபி கும்பல் இந்த சட்டத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் வழக்கறிஞர் போர்வையில் வழக்கறிஞர் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. அது மதுரை வழக்கறிஞர்களால் முறியடிக்கப்பட்டது என்பதைப் பதிவு செய்தார். பாசிச அரசு கொண்டுவந்துள்ள பாசிச சட்டங்கள் ஏராளம். அது அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும். அதற்கு ஜல்லிக்கட்டு போல் மக்கள் எழுச்சி தான் தீர்வு என பேசி முடித்தார்.
அடுத்ததாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சிகப்பு அலை கலைக்குழு சார்பாகப் பாடல் பாடப்பட்டது.
அடுத்ததாக வாழ்த்துரையில் பேசிய மதுரை வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் வழக்கறிஞர் மோகன் குமார் அவர்கள், போலீஸ் கொடும் அடக்கு முறையை ஏவுவதற்கு இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. சனாதன பிற்போக்கு கொள்கைகளை அமல்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை மக்கள் மத்தியில் தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டும். இது மக்களுக்கு எதிரான சட்டம். மக்கள் மத்தியில் தொடர்ந்து இந்த விஷயங்களைக் கொண்டு போக வேண்டும் அதற்கு வழக்கறிஞர் சங்கம் துணை நிற்கும் என்பதைப் பதிவு செய்தார். மேலும் அவர் குறிப்பிடும் போது வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராக இருந்த நெடுஞ்செழியன் அவர்கள் இந்த குற்றவியல் சட்டங்களை முறியடிக்க வேண்டும் எனத் தொடர்ந்து பல போராட்டங்களை முன்னெடுத்து வந்த சூழ்நிலையில்தான் இறந்து போனார். அவர் இந்த சட்டங்களை முறியடிக்க வேண்டும் எனத் தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தார் அவருடைய இழப்பு நமக்குப் பேரிழப்பு என்பதையும் பேசி இந்த சட்டங்களை முறியடிக்க வேண்டும் என்ற தீவிரத்தை வலியுறுத்தினார்.
அடுத்ததாகப் பேசிய வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக் குழுவின் துணைத் தலைவர் ஆனந்த முனி ராஜன் அவர்கள் பேசும்போது, இந்த சட்டங்களை ரத்து செய்ய காங்கிரஸ் வரும் என்று காத்துக் கொண்டிருக்க முடியாது. வந்தாலும் இதை அவர்கள் ரத்து செய்வார்களா என்று தெரியவில்லை. ஆனால் மக்கள் போராட்டங்களினால் தான் இத்தகைய பாசிச சட்டங்களை ரத்து செய்ய முடியும். அதற்காகப் போராடக் கூடிய அமைப்புகள் அனைவரும் மக்கள் மத்தியில் இதற்கான வேலைகளைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதை அழுத்தமாகப் பேசினார்.
அடுத்ததாகச் சிறப்புரையில் பேசிய உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் தோழர் லஜபதிராய் அவர்கள் குறிப்பிடும்போது, 2022-ல் கொண்டுவரப்பட்ட 42 சட்டத் திருத்தங்கள் ஜன் விஸ்வாஸ் என்ற பெயரில் அறிவித்தார்கள். அது உயர்தட்டு வர்க்கத்தின் கிரிமினல் தனங்களைப் பாதுகாப்பதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ளது. முன்பிருந்த தண்டனைகள் அனைத்தும் நீக்கப்பட்டு சாதாரணமான அபராதங்களாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இன்று அறிவித்து நடைமுறைக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் உழைக்கும் மக்களுக்கான தண்டனைகளை அதிகப்படுத்துகிறது. போலீசிற்கு அதிக அதிகாரம் வழங்குகிறது. காலனிய கால சட்டங்களை நீக்குவதாகக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் உண்மையில் அப்படி எதுவும் நடக்கவில்லை. காலனி சட்டங்களைப் புதுப்பித்து கைவிலங்கு போடுவது தனிமை சிறை போன்றவை எல்லாம் மீண்டும் வருகிறது. சட்டங்களை நுணுக்கமாக எப்படி மாற்றி அமைக்கிறார்கள் என்பது பற்றி விரிவாகப் பேசினார்.
இறுதியாக சிறபுரையாற்றிய மக்கள் அதிகாரத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள் குறிப்பிடும்போது, ஆதிக்கச் சாதி வெறியர்களுக்கும் இந்து மத வெறியர்களுக்கும் கார்ப்பரேட் கும்பலுக்கும் பாதுகாப்பான சட்டம். போராடக்கூடிய அனைவரையும் ஒழித்துக் கட்டுவதற்கானது இந்த சட்டம். இந்துராஷ்டத்திற்கு பொருத்தமாக இந்த சட்டங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. மக்கள் போராட்டங்கள் தான் இந்த பாசிச கும்பலைப் பின்வாங்க வைக்கும். எதிர்க்கட்சிகளும் கூட அந்தந்த மாநிலங்களில் திருத்தங்கள் கொண்டு வரப் போகிறோம் எனப் பேசுகிறார்கள். இதெல்லாம் அவர்களுக்கு ஆதரவானது மக்களை ஏமாற்றும் நயவஞ்சகம் என்பதை பல்வேறு தரவுகளுடன் அம்பலப்படுத்தி விரிவாகப் பேசினார்.
இதன் பிறகு சிவப்பு அலை கலைக்குழுவின் பாடல்கள் பாடப்பட்டன. மொத்த அரங்கிலும் பல்வேறு ஜனநாயக சக்திகளும் தோழமை அமைப்புகளும் மாணவர்களும் திரளாக வந்து கலந்து கொண்டு உற்சாகமூட்டினர்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் சங்கர் நன்றியுரை ஆற்றினார்.
எட்டு முப்பது மணி அளவில் கூட்டம் நிறைவடைந்தது. இறுதியாக ஜனநாயக சக்திகள் அனைவரும் பாசிசத்தை வீழ்த்த வேண்டிய தேவையை உணர்ந்து உற்சாகத்துடன் கலைந்து சென்றனர்.
தகவல்
மக்கள் அதிகாரம்
மதுரை மண்டலம்
97916 53200
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram