ஏ.ஜி.நூரானி: பாசிசத்தை தோலுரித்துக் காட்டிய ஆய்வாளர்!

நூரானி அரசியல் அமைப்பை நிராகரிக்கவும் இல்லை, கண்மூடித்தனமாக உயர்த்திப்பிடிக்கவும் இல்லை. அதன் பலவீனங்களைச் சரியாக அடையாளம் காட்டுகிறார். அவரது எழுத்துகள் சமகால பாசிச சூழலை அதன் உண்மையான நிறத்தில் புரிந்துகொள்ள அடிப்படையாக அமைகிறது.

டந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி ஏ.ஜி.நூரானி என்னும் அப்தும் கஃபூர் நூரானி தனது 93 ஆவது வயதில் மரணமடைந்தார். வழக்கறிஞர், அரசியல் கட்டுரையாளர், வரலாற்றாளர், ஆய்வாளர் (Scholar) போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஆளுமையான அவரது இறப்பை ஒட்டி பல பத்திரிகைகள் நினைவஞ்சலிகளை வெளியிட்டிருந்தன. அவற்றில் அவரது பல்வேறு துறை சார்ந்த பங்களிப்புகள் பற்றிய குறிப்புகள் இருந்தன.

அதிகாரப்பூர்வ அறிக்கைகள், அரசிதழ்கள் போன்ற கோப்புகளையும், காஷ்மீர் பிரச்சனை மற்றும் இந்திய வெளியுறவுக் கொள்கைகள் பற்றிய செய்தித்தாள்களின் குறிப்புகள் ஆகியவற்றையும் சேகரித்து வைப்பதில் தளராத ஊக்கமுடையவராக அவர் இருந்தார். இந்த பழக்கம்தான் கணினி, இணையம் ஆகியவை இல்லாமலே அவரது கட்டுரைகளுக்குத் தேவையான விவரங்களை அளித்து உதவியிருக்கிறது. இது ஒரு ஆளுமை சுய ஒழுங்கமைப்புடன் இயங்குவதன் முக்கியத்துவத்தை எடுப்பாகப் புரியவைக்கிறது.

மேலும் அவர் அரசியல் கருத்துகளைக் கவித்துவமாக முன்வைப்பதில் புகழ்பெற்றவர். இந்து முஸ்லீம் மோதல்களை பா.ஜ.க எப்படி வளர்க்கிறது, அதனால் எப்படி அரசியல் ஆதாயம் அடைகிறது, முஸ்லீம்களின் சமூக பங்களிப்புகள் மற்றும் வரலாற்றை எப்படி மறுத்துரைக்கிறது என்பதை விளக்கும் அத்தியாயத்தை “தோட்டத்திற்கு இரத்தம் தேவைப்பட்ட போது, எங்களின் கழுத்துகள்தாம் முதலில் வெட்டப்பட்டன. இருந்தாலும் இந்த தோட்டம் எங்களுடையது, உங்களுடையது அல்ல என்று தோட்டத்தில் இருப்பவர்கள் சொல்கிறார்கள்” என்ற கவிதையை மேற்கோள் காட்டி தொடங்குகிறார் என்பதிலிருந்து இதைப் புரிந்துகொள்ளலாம்.

2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் “காஷ்மீர் பிரச்சனைகளின் வேர்கள் (Roots of the Kashmir dipute)” என்ற தலைப்பில் ஏ.ஜி.நூரானி எழுதிய கட்டுரையை Frontline பத்திரிக்கை வெளியிட்டிருந்தது. என் வாழ்வில் நான் படித்த முதல் அரசியல் கட்டுரை அதுதான். அப்போது ஏ.ஜி.நூரானி யாரென்றே தெரியாது. காஷ்மீர் பிரச்சனை சிக்கலாக இருப்பது போலவே அதைப்பற்றிய அந்த கட்டுரையையும் சிக்கலாக, நுணுக்கமாக இருந்தது. ஒரு ஆரம்பகட்ட வாசகருக்கு என்ன புரியுமோ அதை மட்டும்தான் நான் புரிந்துகொண்டேன். ஆனால், அந்த கட்டுரை என் மீது செலுத்திய தாக்கம் அளப்பரியது.


படிக்க: ஆர்.எஸ்.எஸ். கூடாரத்திலிருந்து எட்டிப்பார்க்கும் ‘நீதி’மான்கள்


இன்று இந்திய நடுத்தர வர்க்கத்தால் அறிவுஜீவியாகக் கொண்டாடப்படும் நேரு காஷ்மீர் மக்களை எப்படி ஏமாற்றினார், காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு மாறாகக் காஷ்மீர் எப்படி இந்திய பெருந்தேசியத்தோடு வலுக்காட்டியமாக இணைக்கப்பட்டது என்பதை விரிவாக அந்த கட்டுரையில் எழுதியிருந்தார். “காஷ்மீர் மக்கள் விரும்பாவிட்டால் இந்திய இராணுவம் ஒரு நிமிடம் கூட அங்கே இருக்காது”, “காஷ்மிர் இந்தியாவோடு இணைவதா? பாக்கிஸ்தானுடன் இணைவதா? அல்லது தனித்தேசியமாக தொடர்வதா? என்பது பற்றி மக்களின் விருப்பத்தைத் தெரிந்துகொள்ள பொது வாக்கெடுப்பு நடத்தப்படும். அந்த வாக்கெடுப்பு தான் காஷ்மிரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்” என்று நேருவும் பட்லேலும் நாடாளுமன்றத்தில் சொன்ன பொய் வாக்குறுதிகளை அந்த கட்டுரையில் அம்பலப்படுத்தியிருப்பார்.

காஷ்மீரின் “அஷாதி” என்ற சொல்லின் பொருளையும், இந்திய அரசியல்வாதிகள் மற்றும் இராணுவம் காஷ்மீர் மக்கள் மீது நடத்திய கொடுமைகளையும் புரியவைத்தது, மேலும் இந்திய பெருந்தேசியம் பற்றிச் சொல்லப்படும் மரபான மிகைப்படுத்திய மாயைகளை உதறித்தள்ள உதவியது அந்த கட்டுரைதான்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மசூதி இடிக்கப்பட்டதை பற்றி ஒன்றும் சொல்லாமல், அந்த இடத்தில் கோவில் கட்டிக்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை அவர் கூர்மையாக விமர்சித்தார். அவரது விமர்சனம், அந்த தனித்த வழக்கு பற்றியோ தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் பற்றியதாகவோ குறுகிக்கொள்ளாமல், பாசிசம் அரங்கேறி வரும் சூழலில் நீதித்துறை இந்துத்துவத்தின் பக்கம் சாய்ந்துவரும் ஒரு நிகழ்வுப்போக்கை பற்றியதாக இருந்தது.

மேலும், அரசியல் சூழ்நிலைகள் மாறுவதைக் குறிப்பதாக புதிய அரசாங்கங்கள் ஆட்சிக்கு வரும் போது நீதித்துறை அதனைக் கணக்கில் கொண்டு தனது செயல்பாடுகளை அமைத்துக்கொள்கிறது என்பதை 1980ஆம் ஆண்டில் இந்திரா காந்தி மீண்டும் பதவிக்கு வந்த காலத்தில் நீதித்துறையின் தீர்ப்புகள் தலைகீழாக்கம் செய்யப்பட்டதைக் குறிப்பிட்டு விமர்சிக்கிறார். அரசியல் அழுத்தங்களை அனுசரித்துப் போவதுதான் இந்திய நீதித்துறையின் உள்ளார்ந்த இயல்பு என்பதை அவர் இங்கே குறிப்பிடுகிறார். இது அவரது சமகால அறிவுஜீவிகளிலிருந்து ஏ.ஜி.நூரானியை தனித்துக் காட்டுவதாக இருக்கிறது.


படிக்க: ஆர்.எஸ்.எஸ் : இந்திய ஆன்மாவின் மீதான ஒரு அச்சுறுத்தல் ! – ஏ.ஜி. நூரனி


அவரது ஆதரவாளர்களால் சிறந்த அரசியல் அமைப்புவாதி (Constitutionalist) என்று புகழப்பட்டாலும் இந்திய அரசியலமைப்பின் பலவீனங்களை நேர்மையாக முன்வைத்தவர் ஏ.ஜி.நூரானி.

“ஆர்.எஸ்.எஸ் இந்தியாவிற்கு அச்சுறுத்தல்” என்னும் தனது புத்தகத்தில், பாசிசம் ஏறித்தாக்குவதை, நிலவும் இந்த அரசியல் அமைப்பால் தாக்குப்பிடிக்க முடியாது என்பதை ”மதப்பெரும்பான்மை பாராளுமன்றத்தில் அரசியல் பெரும்பான்மை பெற்று கட்டுக்கடங்காத அரசு அதிகாரத்தைச் செலுத்தி வருகிறது. அரசியலமைப்புச் சட்டமும் நீதிமன்றத் தலையீடும் ஓரளவுக்குத்தான் இதைத் தடுக்க முடியும்” என்ற வரிகளின் மூலமாகத் தெளிவாக விளக்குகிறார்.

மேலும் இந்த அரசியல் அமைப்பின் பலவீனத்தையும் பாசிச போக்குகளைத் தடுக்கமுடியாமல் அது விழி பிதுங்கி நிற்பதை “இப்போதிருக்கும் அரசாங்கம் இந்தியாவை ஓர் இந்து நாடாக பிரகடனப்படுத்தும் வகையில் ஓர் அரசியல் சட்டத் திருத்தத்தை (அது நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படும் என்று தெரிந்தும்) செய்ய வேண்டிய தேவை இல்லை. அது ஓர் இந்து நாட்டை ஆள்வதைப் போன்றே ஆட்சி செய்தால் போதும். இதைத்தான் நரேந்திர மோடி குஜராத்திலும், 2014 முதல் இந்தியாவிலும் செய்கிறார்” என்று நேரடியாகவே முன்வைக்கிறார்.

இவைதான், வறட்டுத்தனமான அரசியலமைப்பு ஆதரவாளர்களிடம் இருந்து அவரை தனித்துக் காட்டுவதாக இருக்கிறது.

தேர்தல் அரசியலின் ஓட்டு வங்கிக்காகவும், நிலவும் இந்திய நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பின் அதிகாரத்தைப் பிடிக்கவும் மட்டுமே பா.ஜ.க மதவெறியைத் தூண்டிவிடுகிறது என்ற தப்பெண்ணங்களை நூரானி கொண்டிருக்கவில்லை. மாறாக, ஆட்சி அதிகாரத்திற்கும் மேலான “இந்து ராஷ்டிரம்” என்னும் கனவை நோக்கி பா.ஜ.க நடைபோடுவதை, “ஒரு மதச் சார்பற்ற நாடாக, இந்தியா” என்னும் புத்தகத்தில், பேராசிரியர். டொனால்ட் யூஜின் ஸ்மித் கூறுவதை எடுத்துக்காட்டி துல்லியமாக்க விளக்குகிறார்.


படிக்க: நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி


“உண்மையில், அரசு அதிகாரத்தின் மூலம் தன்னுடைய குறிக்கோள்களை அடைய முடியும் என்கிற கருத்தை அது (ஆர்.எஸ்.எஸ்) வெளிப்படையாக நிராகரிக்கிறது. இந்து சமுதாயத்தை மறுகட்டுமானம் செய்வதுதான் அதன் குறிக்கோள், அது அந்த சமுதாயத்திற்கு உள்ளிருந்துதான் வரவேண்டும்” என்று ஆர்.எஸ்.எஸ்-இன் முன்னோர்கள் நம்புவதாக டொனால்ட் யூஜின் ஸ்மித், தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார். இதனை எடுத்துக்காட்டி மோடி அமித்ஷா கும்பலால் வழிநடத்தப்படும் பா.ஜ.க ஆட்சியில் இந்தியாவின் “வெளியுறவுக் கொள்கை” இந்து ராஷ்ட்ர கனவிற்கு ஏற்றாற்போல மாற்றியமைக்கப்பட்டிருப்பதை நூரானி எடுத்துக்காட்டுகிறார்.

பாசிச பா.ஜ.க-வின் தாக்குதல்களுக்கு எதிராக மக்களைத் திரட்டுவதற்காகச் சரியான அரசியல் செயல் தந்திரங்களை வகுக்கவேண்டியது இன்றியமையாத கடமையாகும். ஆனால் பெரும்பாலான ஜனநாயக இயக்கங்கள் இந்த விஷயத்தில் கோட்டை விடுவதற்கான காரணம் “அரசியல் அமைப்பு சட்டம்” பற்றிய மாயைகள்தான். ஆனால், நூரானி அரசியல் அமைப்பை நிராகரிக்கவும் இல்லை, கண்மூடித்தனமாக உயர்த்திப்பிடிக்கவும் இல்லை. அதன் பலவீனங்களைச் சரியாக அடையாளம் காட்டுகிறார். அவர் அதனைச் சரிசெய்யும் மாற்றுகளை முன்வைக்கவில்லை. எனினும் அவரது எழுத்துகள் சமகால பாசிச சூழலை அதன் உண்மையான நிறத்தில் புரிந்துகொள்ள அடிப்படையாக அமைகிறது.

1930 ஆம் ஆண்டு பிறந்த அவர், ஆங்கிலேயர்களிடம் இருந்து ஆட்சி மாற்றம், இந்தியா-பாக்கிஸ்தான் பிரிவினை, வங்கதேச பிரிவினை, இந்திராவின் அவசரநிலை காலம், பாபர் மசூதி இடிப்பு, மோடியின் தற்போதைய பாசிச ஆட்சிக் காலம் என பல்வேறு அரசியல் சூழல்களை அவர் கண்ணுற்றிருக்கிறார். அவற்றைப் பற்றி தனது எழுத்துகளில் பதிவு செய்திருக்கிறார்.

ஆனால், அவரது கடைசி பத்தாண்டு எழுத்துகள் முக்கியத்துவம் பெறுவது மேற்கூறிய காரணத்தால்தான். ஏனெனில், கடந்த பத்தாண்டுக் கால பாசிச பா.ஜ.க-வின் ஆட்சியின் கீழ் பல அறிவுஜீவிகளும் பெரும்பான்மை ஊடகங்களும் விலைபோய் ஊழல் மலிந்துவிட்ட போதிலும் சமரசமில்லாமல் தான் கண்ணுற்ற உண்மைகளை எழுதியவர் ஏ.ஜி.நூரானி.


சீனிச்சாமி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க