19.09.2024
லெபனான் மக்கள் மற்றும் போராளிகளை திட்டமிட்டு
குறி வைத்து படுகொலை செய்த இஸ்ரேல்!
இஸ்ரேல், அமெரிக்கா மட்டுமல்ல,
பன்னாட்டு நிறுவனங்கள் இணைந்து செய்த சதி!
பாலஸ்தீன ஆதரவு இயக்கங்களை திசை திருப்பி
உலகப்போராக மாற்றும் சதி!
பத்திரிகை செய்தி
கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) லெபனான் நாட்டிலுள்ள மக்களையும் போராளிகளையும் குறிவைத்து இஸ்ரேல் உளவு படை நடத்திய வெடிகுண்டு தாக்குதல்கள் உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன.
ஹிஸ்புல்லா அமைப்பு தகவல்களை பரிமாறிக் கொள்ள தைவான் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திடம் இருந்து பெற்ற சுமார் 5,000 பேஜர் கருவிகளில் வெடிகுண்டு பொருத்தப்பட்டு, அதற்குரிய சமிக்ஞை கொடுத்து வெடிக்க வைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு அடுத்த நாள் இதே வகையில் வாக்கி டாக்கி கருவிகளும் சோலார் பேனல்களும் வெடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் பயங்கரவாத படுகொலை நடவடிக்கைகளுக்கு எதிராக உலகம் முழுவதும் மக்கள் போராடி வருகிறார்கள்.
இஸ்ரேல் பாசிச அரசின் பிரதமர் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என்றும் இஸ்ரேல் மக்களும் போராடி வருகிறார்கள்.
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஹவுதி போராளி குழுக்களும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுக்கும் இந்த நிலையில்தான் இப்படிப்பட்ட பொதுமக்கள் மீதான பயங்கரவாத தாக்குதல் நடவடிக்கையை இஸ்ரேல் அரசு மேற்கொண்டுள்ளது.
இந்த பயங்கரவாத நடவடிக்கையை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. இஸ்ரேல், அமெரிக்கா மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களும் இணைந்து இப்படிப்பட்ட பயங்கரவாத நடவடிக்கை மேற்கொண்டு இருக்க வாய்ப்பு இருக்கிறது.
பாலஸ்தீன ஆதரவு போராளி குழுக்களை ஆத்திரமூட்டி இஸ்ரேலுக்கு ஆதரவான நாடுகளின் மீது தாக்குதல் தொடுப்பதற்கான சதி வேலையும் இதுவாகும்.
பாலஸ்தீனத்துக்கு ஆதரவான மக்கள் இயக்கங்களை குலைக்கவும் திசை திருப்பவும் பாலஸ்தீனத்துக்கு எதிரான போரை உலகப்போராக மாற்றுவதற்கான சதி வேலைகளிலும் இஸ்ரேல் ஈடுபட்டிருக்கிறது.
இதற்கு எதிராக தங்கள் நாடுகள் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதற்காக உலகம் முழுவதும் மக்கள் போராட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram