பாசிசக் கும்பலை விரட்டி அடித்த ஹரியானா மக்கள்!

முதல்வர் சைனி தனது சொந்த தொகுதியான கர்னலின் லட்வா பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது ஹரியானா மக்கள் “இங்கே எதற்கு வந்தீர்கள்” எனக் கேள்வி எழுப்பியதோடு கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனிக்கு கருப்பு கொடி மூலம் மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அதோடு பாஜக வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்குச் செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் அவர்களை விரட்டியடித்து வருகின்றனர்.

ஹரியானாவில் வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி 90 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பல கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த வெள்ளியன்று (செப்டம்பர் 20) அம்மாநில முதல்வர் சைனி தனது சொந்த தொகுதியான கர்னலின் லட்வா பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது ஹரியானா மக்கள் “இங்கே எதற்கு வந்தீர்கள்” எனக் கேள்வி எழுப்பியதோடு கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சைனி தனது பிரச்சாரக் கூட்டத்தை விரைவிலேயே முடித்துக் கொண்டு சண்டிகருக்கு ஓடியுள்ளார்.

இதே போன்று அம்பாலாவில் நடைபெற இருந்த முன்னாள் உள்துறை அமைச்சரும் பா.ஜ.க வேட்பாளருமான அனில் விஜினின் பிரச்சாரக் கூட்டத்திற்கு விவசாயிகள் கருப்புக் கொடியுடன் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அனில் விஜினின் பிரச்சாரக் கூட்டம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.

ஏற்கெனவே சிர்சா சட்டமன்றத் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளரை விவசாயிகள் விரட்டியடித்ததால் மாநிலத்தின் பஞ்சாப் எல்லைப் பகுதிகளான சிரிசா, பாட்டியாபாத், தோஹாணா, கைதால், அம்பாலா, சண்டிகர் மண்டலப் பகுதிகளில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்குப் பிரச்சாரத்திற்குச் செல்லவே பாசிசக் கும்பல் அஞ்சி நடுங்குகிறது.


படிக்க: பஸ்தர்: பழங்குடியினர் மீது பயங்கரவாத தாக்குதல்களை ஏவும் ராணுவ முகாம்கள்


ஏனென்றால் கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி எல்லையில் உற்பத்தி செய்யக்கூடிய பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கக் கோரி விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் பஞ்சாப் மாநிலத்தின் இளம் விவசாயி சுப்கரன் சிங்கை பாசிச கும்பல் சுட்டுக் கொன்றது. பல விவசாயிகள் மீது கொடூரமான தாக்குதலை நடத்தியது.

மேலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் துறையாக இருந்த ராணுவத் துறையை “அக்னி பாதை” திட்டத்தின் மூலம் கார்ப்பரேட் மயமாக்கியது. அதனால் ஏற்பட்ட வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது; ஹரியானாவின் மகளான வினேஷ் போகத் மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிராகப் போராடியது முதல் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் வஞ்சிக்கப்பட்டது போன்ற பாசிசக் கும்பலின் நடவடிக்கைகளை நடைமுறை மூலம் உணர்ந்த மக்கள் பாசிசக் கும்பலுக்கு எதிராகத் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். அதனாலே நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச கும்பலை விரட்டியடித்தது போல் சட்டமன்றத் தேர்தலிலும் விரட்டியடித்து வருகின்றனர்.

பாசிசக் கும்பலைக் களத்தில் எதிர்கொள்வது என்பது பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஹரியானா மக்களைப் போன்று நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பாசிசக் கும்பலை மக்கள் விரட்டியடிக்க வேண்டும்.


இன்குலாப்

நன்றி: தீக்கதிர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க