பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போர் தொடங்கி ஓராண்டாகிவிட்டது. பெண்கள் குழந்தைகள் உட்பட இதுவரை 42,000-க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 97,000-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

தற்போது, இஸ்ரேலின் போர்வெறி லெபனானையும் அழிக்கத் தொடங்கியுள்ளது. பாலஸ்தீன மக்கள் கொன்றொழிப்பதற்கு எதிராகப் போராடிவந்த ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ருல்லாவை படுகொலை செய்தது; பொதுமக்கள் பயன்படுத்தும் “பேஜர்”, “வாக்கி-டாக்கி”- களை வெடிக்கச் செய்து கொலை செய்தது; ஏவுகணை தாக்குதல் நடத்துவது என லெபனானிலும் ஆயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்து வருகிறது, இனவெறி இஸ்ரேல் அரசு.

ஒருபுறம், மேற்கத்திய ஏகாதிபத்தியங்களும் ஊடகங்களும் இஸ்ரேலை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் இஸ்ரேலின் இனஅழிப்பு போருக்கு முன்னின்று உதவிக் கொண்டிருப்பதாலேயே இப்போர் ஓராண்டாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அதிலும், சரிந்துவரும் தனது ஒற்றைத் துருவ மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக உலகம் முழுவதும் போர் முனைகளை தீவிரப்படுத்திவரும் அமெரிக்கா, இஸ்ரேலின் இனஅழிப்பு போரை மூன்றாம் உலகப்போராக உருவாக்குவதற்கான வேலைகளை திட்டமிட்டு செய்து வருகிறது. இதன் பின்னணியில் இருந்துதான், இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு ஐ.நா. மன்றத்திலேயே லெபனான், ஈரான் உள்ளிட்ட நாடுகளை ஒழித்துக் கட்டுவோம் என பகிரங்கமாக அறிவிக்கிறார். எனவே, இஸ்ரேலின் இன அழிப்பு போரை இனியும் தொடர அனுமதித்தால், அது ஒட்டுமொத்த உலக மக்களையும் பேரழிவை நோக்கி இட்டு செல்வதற்கே வழிவகுக்கும்.

இன்னொருபுறம், “அக்டோபர் 7” பாலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்பு போரின் ஓராண்டு நிறைவையொட்டி, உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் பாலஸ்தீன கொடிகளை கையில் ஏந்தி பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இப்போராட்டங்களில் “காசா மீதான போரை முடிவுக்கு கொண்டு வா!” என்ற முழக்கங்கள் விண்ணைப் பிளக்கின்றன. உண்மையில் இப்போராட்டங்கள்தான் பாசிச இஸ்ரேலையும் அதற்கு துணைநிற்கும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களையும் குலைநடுங்கச் செய்கின்றன. இப்போராட்டங்களை இஸ்ரேலின் இன அழிப்பு போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் வளர்த்தெடுக்க வேண்டும்.

குறிப்பாக, இஸ்ரேலின் இன அழிப்பு போருக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்து உதவிக் கொண்டிருக்கும் பாசிச மோடி அரசை எதிர்த்து இந்திய உழைக்கும் மக்கள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டியுள்ளது.


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க