உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற பசுவளைய மாநிலங்களிலும் பா.ஜ.க. கும்பல் ஆளும் மாநிலங்களிலும் இஸ்லாமிய மக்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள்; அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளார்கள்; வங்கதேசம், மியான்மர் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளார்கள் என்று பொய்யான காரணங்களைக் கூறி அவர்களின் வீடுகளும் வழிபாட்டுத் தலங்களும் அம்மாநில அரசுகளால் புல்டோசரால் இடிக்கப்படும் பயங்கரவாத நடவடிக்கைகள் கடந்த சில ஆண்டுகளாக அன்றாட நிகழ்வாகி வருகின்றன.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் புல்டோசர் நடவடிக்கைகளுக்கெதிராக ஜாமியா உலேமா இந்த் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்குகளின் மீதான விசாரணையில் செப்டம்பர் இரண்டாம் தேதி, “புல்டோசர்களை பயன்படுத்தும் விவகாரம் குறித்து அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தும் விதமாக நாடு தழுவிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். அதற்கான உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும்” என்று கருத்து தெரிவித்தது; செப்டம்பர் 17-ஆம் தேதி, “வழக்கின் அடுத்த விசாரணை வரை தன்னுடைய அனுமதி இல்லாமல் இடிப்பு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பொது சாலைகள், நடைபாதைகள், ரயில் பாதைகள், நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது” என்று கூறியும் வழக்கின் அடுத்த விசாரணையை அக்டோபர் ஒன்றாம் தேதிக்குத் தள்ளிவைத்தது.
காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் ஆங்கில செய்தி ஊடகங்களும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஜனநாயக சக்திகளில் பலரும் உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கை காலதாமதமானது என்று விமர்சனத்தை முன்வைத்துள்ள போதிலும் இத்தீர்ப்பை வரவேற்கவே செய்கின்றனர். மறுபுறம், காவிகள் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். எனவே, புல்டோசர் அரசியலுக்குப் பின்னால் உள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் நோக்கத்தையும், உச்சநீதிமன்றத்தால் பா.ஜ.க-வின் புல்டோசர் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த முடியுமா என்பது குறித்தும் இக்கட்டுரையில் சுருக்கமாக ஆராய்வோம்.
இஸ்லாமியர்களை குறிவைத்து தாக்கும் இந்துமதவெறி புல்டோசர்கள்
2017 ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராக ரௌடி சாமியாரான யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பிறகு, புல்டோசர் அரசியல் சோதனை செய்யப்படுவதற்காக அம்மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டது. அச்சோதனையில் தங்களுடைய நீண்டகால கனவான இந்துராஷ்டிரத்தை கட்டியமைப்பதற்கு புல்டோசர் அரசியல் முக்கியப் பங்காற்றுவதை உணர்ந்த இந்துமதவெறியர்கள், அதை நாட்டின் பல மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளனர். குறிப்பாக, யோகி ஆதித்யநாத்தை “புல்டோசர் பாபா” என்றும் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை “புல்டோசர் மாமா” என்றும் சங்பரிவாரக் கும்பல் ‘பெருமையாக’ அழைக்கும் அளவிற்கு அவ்விரு மாநிலங்களிலும் புல்டோசர் பயங்கரவாத நடவடிக்கைகள் கோரதாண்டவமாடுகின்றன.
மாஃபியா கும்பல்களைக் கட்டுப்படுத்துவதற்காகவும் குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்காகவும் புல்டோசர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகள் கூறினாலும், அந்நடவடிக்கைகளின் பிரதான இலக்காக இஸ்லாமிய மக்களே உள்ளனர். சான்றாக, அம்னெஸ்டி இண்டர்நேஷனல் என்ற சர்வதேச அமைப்பானது, தாங்கள் ஆய்வு மேற்கொண்ட “128 கட்டிட இடிப்புகளில் இஸ்லாமியர்கள் குறிவைக்கப்பட்டு 617 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இடிப்புகள் இஸ்லாமியர்கள் செறிவுமிகுந்து வாழும் பகுதிகளில் மேற்கொள்ளப்படுவதாகவும்” கடந்த பிப்ரவரியில் தான் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
பா.ஜ.க. மாநில அரசுகளாலும் இந்துமதவெறியர்களாலும் இஸ்லாமிய மக்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டார்கள் என அப்பட்டமாக பொய்யுரைக்கப்பட்டு அவர்களின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தி, ராம நவமி உள்ளிட்ட இந்துமதப் பண்டிகைகளிலும் பக்ரீத் உள்ளிட்ட இஸ்லாம் மதப்பண்டிகைகளிலும் காவிக் குண்டர்களே திட்டமிட்டு இஸ்லாமிய மக்கள்மீது தாக்குதல் நடத்தி கலவரத்தை தூண்டி, அதற்கு இஸ்லாமிய மக்களையே குற்றவாளியாக்கி அவர்களின் வீடுகள், கடைகள் மற்றும் வணிக கட்டடங்களை ஈவுஇரக்கமின்றி இடிக்கின்றனர். மாட்டுக்கறி வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டியும் இஸ்லாமியர்களின் வீடுகளை இடிக்கின்றனர்.
இத்தகைய இடிப்பு நடவடிக்கைகளில் பெரும்பாலானவற்றில் சங்கிகள் இஸ்லாமியர்கள் மீது குற்றச்சாட்டை எழுப்பியவுடன் அரசால் அவர்களின் வீடுகள் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறி அயோக்கியத்தனமாக இடிக்கப்படுகின்றன.
2022 ஆம் ஆண்டில் மத்தியப்பிரதேசத்தில் ராம நவமி ஊர்வலத்தின் போது மீது இரண்டு கைகளும் இல்லாதவர் கல்லெறிந்ததாகக் கூறி அவரின் வீடு இடிக்கப்பட்டிருப்பது; ஊர்வலத்தை தன்னுடைய வீட்டின் மொட்டை மாடியில் வேடிக்கை பார்த்த இஸ்லாமியர், ஊர்வலத்தின் மீது எச்சில் துப்பினார் என்று கூறி அவரது வீடும் இடிக்கப்பட்டிருப்பது; ஒன்றிய மோடி அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளும் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இடிக்கப்பட்டிருப்பது; மேலும், 2024 ஆகஸ்டில் ராஜஸ்தானில் பள்ளி மாணவர்களுக்கிடையேயான பிரச்சினைக்கு மதச்சாயம் பூசி இஸ்லாமிய மாணவரின் வீட்டை வனநிலத்தை ஆக்கிரமித்து கட்டிருப்பதாகக் கூறி இடித்திருப்பது போன்ற நடவடிக்கைகள் பா.ஜ.க-வின் புல்டோசர் அரசியல் நடவடிக்கைகள் முற்றிலும் சட்டவிரோதமானது என்பதற்கு சான்றுகளாகும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி ஒரு நபர் மீது ஏதேனும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால் அதனை விசாரித்து தண்டனை வழங்க வேண்டியது நீதிமன்றத்தின் பணி. ஆனால் இங்கு குற்ற்ச்சாட்டு சுமத்தப்பட்டாலே அவரை குற்றவாளி என முடிவுசெய்து “இந்துராஷ்டிர நீதிப்படி” அவருடைய வீடுகளை இடித்து அவருக்கு பா.ஜ.க. அரசுகளே தண்டனை வழங்குகின்றனர். மேலும், குற்றம் சுமத்தியவரின் கூற்றுப்படியே அவர் குற்றம் இழைத்திருந்தாலும் வீடுகளை இடிப்பதன் மூலம் எந்த குற்றமும் இழைக்காத அவரது குடும்ப உறுப்பினர்களையும் தண்டித்து கூட்டுத்தண்டனை வழங்குகின்றனர்.
மேலும், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் நீர்நிலைகள், ரயில்வே நிலங்கள் உள்ளிட்ட அரசு நிலங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இஸ்லாமியர்கள் குடியேறியுள்ளார்கள் என்று கூறியும் அண்டை நாடுகளான வங்கதேசம், மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய இஸ்லாமியர்கள் என்று கூறியும் அவர்களின் வீடுகளும் வழிபாட்டுத் தலங்களும் அதிக எண்ணிக்கையில் இடித்து தரைமட்டமாக்கப்படுகின்றன. உதாரணமாக, கடந்த ஜூன் 19 அன்று, லக்னோவின் அக்பர் நகரில் குக்ரைல் ஆற்றங்கரையை ஆக்கிரமித்து கட்டியுள்ளதாகக் கூறி 1,169 வீடுகள் மற்றும் 101 வணிக நிறுவனங்கள் உட்பட சுமார் 1,800 கட்டடங்களை இடித்து தள்ளியது, உத்தரப்பிரதேச பா.ஜ.க. அரசு.
இத்தகைய ‘ஆக்கிரமிப்பு’ அகற்ற நடவடிக்கைகளின் போதும் முறையான சட்டவழிமுறைகள் பா.ஜ.க. அரசுகளால் பின்பற்றப்படுவதில்லை. சட்டப்பூர்வமான நடவடிக்கைகளைக் கூட மேற்கொள்வதற்கு மக்களுக்கு கால அவகாசம் வழங்கப்படாமல் அவர்களின் வீடுகள் எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென இடிக்கப்படுகின்றன. ஆனால், ‘ஆக்கிரமிப்பு’ என்ற பெயரில் இடிக்கப்படும் இஸ்லாமிய மக்களின் வீடுகளுக்கு அருகில் உள்ள ‘இந்து’ மக்களின் வீடுகள் இடிக்கப்படாமல் இருப்பதே இந்துமதவெறியர்களின் சதித்திட்டத்தை நமக்கு திரைக்கிழிக்கிறது.
இவ்வாறு பா.ஜ.க-வின் புல்டோசர் அரசியலினால் பாதிக்கப்படுவது அன்றாடம் மூன்று வேளை உணவு உண்பதே பெரும்பாடாக இருக்கும் இஸ்லாமிய உழைக்கும் மக்களே ஆவர். இம்மக்களுடைய வீடுகளும் கடைகளும் இடிக்கப்படுவதால் இவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து நிர்கதியாகின்றனர். தாங்கள் பூர்விகமாக வாழ்ந்த இடங்களை விட்டு வெளியேறி வேறு இடங்களில் தார்பாயில் குடிசை அமைத்து தங்கும் போதும் அம்மக்கள் புல்டோசர்கள் தாக்குதலுக்கு மீண்டும் மீண்டும் உள்ளாகி சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளாகின்றனர்.
உச்சநீதிமன்றத்தால் பா.ஜ.க–வின் புல்டோசர் பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்த முடியுமா?
பா.ஜ.க-வின் புல்டோசர் நடவடிக்கைகளுக்கெதிராக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பிலும் நீர்நிலைகள் உள்ளிட்ட அரசு நில ஆக்கிரமிப்புகளை அகற்ற இத்தீர்ப்பு பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதானது ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பலுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது.
இனிவருங்காலங்களில் உச்சநீதிமன்றமானது குற்றச்செயல்களில் ஈடுபட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் வீடுகளை புல்டோசர்களை கொண்டு இடிப்பதற்கு மாநில அரசுகளுக்கு நிரந்தரத் தடை விதித்தாலும் இந்த சட்டப்பூர்வ ஓட்டையைப் பயன்படுத்திக் கொண்டு இஸ்லாமிய மக்களின் வீடுகளை பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகள் இடிக்கவே செய்யும் என்று நாம் உறுதியாக கூற முடியும். ஏனென்றால், இந்த சட்டப்பூர்வ ஓட்டையை உச்சநீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன்னாலேயே பா.ஜ.க. அரசுகள் பயன்படுத்திக் கொண்டு தான் இருந்தன.
உச்சநீதிமன்றம் வகுக்கும் வழிகாட்டுதல்களையும் பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகள் பின்பற்றப்போவதில்லை என்று நாம் அறுதியிட்டுக் கூற முடியும். தாங்கள் ஆளும் மாநிலங்களில் நடைமுறையில் உள்ள சட்டங்களை மீறியே தங்களுடைய பாசிச நோக்கத்திற்காக இஸ்லாமிய மக்களின் மீது தாக்குதலை தொடுப்பவர்கள் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை மட்டும் பின்பற்றுவார்களா என்ன? நிச்சயமாக இல்லை.
புல்டோசர் நடவடிக்கைகளுக்கெதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கும் வேளையிலும் பா.ஜ.க. அரசுகள் இஸ்லாமிய மக்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்களை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி, குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் உள்ள சையத்புரா பகுதியில் இஸ்லாமியர் விநாயகர் சிலை மீது கல்லெறிந்ததால் கலவரம் ஏற்பட்டதாகக் கூறி, அம்மாநில போலீசு அடுத்த நாளே (செப்டம்பர் 9 ஆம் தேதி) குற்றஞ்சாட்டப்பவர்களின் கட்டுமானங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகக் கூறி இடித்து தள்ளியது.
பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகள் நீதிமன்றங்களின் உத்தரவுகளை மீறி செயல்பட்டதற்கும் பல உதாரணங்கள் உள்ளன; மேலும் நீதிமன்றங்களில் வழக்குகள் நடந்து கொண்டிருக்கும் போதும் இஸ்லாமிய மக்களின் வீடுகளை இடித்துள்ளனர். சான்றாக, 2022 ஆம் ஆண்டில் ராமநவமி ஊர்வலத்தின் போது கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்று கூறி டெல்லி ஜஹாங்கிபூரில் உள்ள முஸ்லீம் மக்களின் குடியிருப்புகளை இடிப்பதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்த போதிலும் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள வடகிழக்கு டெல்லி மாநகராட்சியானது வீடுகளை புல்டோசர்களை வைத்து இடித்தது. பிருந்தா காரத், கபில் சிபில் போன்றவர்கள் புல்டோசர்களுக்கு முன்னால் போராட்டங்களில் ஈடுபட்ட பிறகுதான் இடிப்பு நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டன.
பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறி செயல்பட்டாலும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதியான உழைக்கும் மக்களால் அரசு தவறிழைத்துள்ளது என்று நீதிமன்றங்கள் சென்று நிரூபித்துவிட முடியுமா? முடியாது. நீதிமன்றங்களுக்கு சென்றாலும் நீதியை பெற முடியாது என்பதே கடந்த கால அனுபவம். கீழமை மாவட்ட நீதிமன்றங்கள் முதல் உச்சநீதிமன்றம் வரை ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவர்கள் ஊடுருவி இருப்பதால் அவர்கள் இஸ்லாமிய மக்களுக்கு விரோதமாகவே செயல்படுவர் என்பதே எதார்த்தம்.
பசுவளைய மாநிலங்களில் மொத்த அரசுக்கட்டமைப்பும் ஆர்.எஸ்.எஸ்.மயமாகியுள்ள சூழலில், அவர்களுடைய இந்துராஷ்டிர நோக்கத்திற்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் எந்த உத்தரவுகளும் நடைமுறையில் நிறைவேற்றப்படாது என்பதே எதார்த்தம். இவை எல்லாவற்றையும் மீறியும் புல்டோசர்கள் மூலம் இஸ்லாமியர்களின் வீடுகளை இடிப்பதற்கு தடங்கல் ஏற்பட்டால் தங்களுடைய பாசிச நோக்கத்திற்காக லவ் ஜிகாத், மதமாற்றம், பசுவதை தடைச் சட்டங்களை நிறைவேற்றியுள்ளதைப் போல, இந்நடவடிக்கைகளுக்கும் சட்டங்களை நிறைவேற்ற பாசிஸ்ட்டுகள் தயங்கமாட்டார்கள்.
மேலும், பா.ஜ.க-வின் புல்டோசர் அரசியலுக்கெதிரான உச்சநீதிமன்றத்தின் தற்போதைய நடவடிக்கைகளானது சடங்குத்தனமானதே ஆகும். தற்போதைய தீர்ப்பில் கடந்த ஏழு ஆண்டுகளாக சட்ட வழிமுறைகளை மீறி செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுப்பதைப் பற்றி எதுவும் பேசாதது; கடந்த ஏழு ஆண்டுகளாக புல்டோசர் நடவடிக்கைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்காமல் இருந்தது; பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகள் நீதிமன்றங்களின் உத்தரவுகளை அப்பட்டமாக மீறி செயல்பட்ட போதிலும் அவர்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது ஆகியவை அதையே நமக்கு உணர்த்துகின்றன.
இனப்படுகொலையை நோக்கி..
இஸ்லாமிய மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து அவர்களை எந்த உரிமைகளுமற்ற இரண்டாம்தரக் குடிமக்களாக்குவது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலுக்கு இந்துராஷ்டிரத்தை கட்டியமைப்பதற்கான பாதையில் உள்ள முக்கியப் பணியாகும். அந்த நோக்கத்திலிருந்துதான் தாங்கள் ஆளும் மாநிலங்களில் இஸ்லாமிய மக்களின் மத வழிபாடு, தாங்கள் விரும்பும் பகுதிகளில் வசிப்பது, வியாபாரம் செய்வது உள்ளிட்ட பல உரிமைகளை பறித்துவரும் காவிகள், புல்டோசர் நடவடிக்கைகள் மூலம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் இஸ்லாமிய மக்களின் உரிமையை பறிக்கின்றனர்.
இதன்விளைவாக, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இஸ்லாமிய மக்கள் தங்களுக்கு என்ன வேண்டுமானாலும் நிகழலாம்; தங்களின் வீடுகள் எப்பொழுது வேண்டுமானாலும் காவிகளின் புல்டோசர்களால் இடிக்கப்பட்டு தாங்கள் வாழும் பகுதிகளை விட்டு விரட்டியடிக்கப்படலாம் என்று ஒருவித அச்ச உணர்விலேயே வாழ்ந்து வருகின்றனர். அதாவது பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள இஸ்லாமிய மக்களின் மனநிலையானது பாலஸ்தீனத்தின் மீதான யூத இனவெறி இஸ்ரேல் அரசின் இன அழிப்புப் போருக்கு மத்தியில் காசாவில் வாழ்ந்துவரும் பாலஸ்தீன மக்களின் மனநிலையை ஒத்தது என்றால் மிகையாகாது
இஸ்லாமிய மக்களின் வீடுகளையும் பிற கட்டிடங்களையும் குறிவைத்து அழிப்பதன் மூலம் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளை ‘இந்து’ மக்கள் மட்டும் வசிக்கும் பகுதிகளாக உருவாக்க விழைகின்றனர். அதன்மூலம் இஸ்லாமிய மக்களை மாநிலத்திலோ அல்லது மாவட்டத்திலோ குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் வாழும் நிலையை உருவாக்க விழைகின்றனர். இதன்மூலம் பாலஸ்தீனத்தின் காசா, மேற்குகரை போன்று இஸ்லாமிய மக்களை குறிப்பிட்ட சில பகுதிகளில் வாழவைத்து அவர்களை இனப்படுகொலை செய்ய எண்ணுகின்றனர்.
புல்டோசர் பயங்கரவாத நடவடிக்கைகள் மட்டுமின்றி, குடியுரிமை திருத்தச் சட்டங்களை அமல்படுத்தி இஸ்லாமியர்களின் குடியுரிமைகளை பறித்து அவர்களை தனிமைப்படுத்தும் சிறைச்சாலைகளில் அடைப்பதை நோக்கி தங்களுடைய நடவடிக்கைகளை கட்டமைத்து வருவதும் ஜெர்மனியில் ஹிட்லர் யூதர்களை கொடூரமாக இனப்படுகொலை செய்ததைப் போல, இஸ்லாமியர்களையும் இனப்படுகொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலிருந்துதான் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், இந்துராஷ்டிரத்தை கட்டமைப்பதற்காக இஸ்லாமிய மக்கள் மீது தற்போது பாசிசத் தாக்குதல்களை தொடுத்துவரும் இந்துமதவெறியர்கள், இனிவருங்காலங்களில் இந்துராஷ்டிரத்திற்கு அடிபணிய மறுக்கும் இந்து மக்களின் மீதும் (குறிப்பாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள்) அம்பானி, அதானிகளின் நலத்திட்டங்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் மீதும் ஜனநாயக சக்திகள் மீதும் புல்டோசர்களை பாய்ச்சுவது மட்டுமின்றி, மேலும் பல பாசிச ஒடுக்குமுறைகளையும் செலுத்துவார்கள். அவர்களையும் இனப்படுகொலை செய்வார்கள். ஆகவே, இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் புல்டோசர் ஆட்சி நிறுவப்படுவது என்பது முஸ்லீம் மக்களை மட்டுமல்ல, இந்திய உழைக்கும் மக்களை எதிர்நோக்கியுள்ள பேரபாயமாகும்.
இத்தகைய சூழலிலும் எதிர்க்கட்சிகள் புல்டோசர் பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியான மக்கள்திரள் போராட்டங்களைக் கட்டியமைக்காமல் வெறும் கண்டனங்களை தெரிவிப்பதோடு நிறுத்திக்கொண்டு தங்களை பாசிச எதிர்ப்பாளர்கள் எனக் கருதி வாக்களித்த மக்களுக்கு துரோகமிழைக்கின்றன. இது இந்தியாவில் பாசிசம் அரங்கேறுவதற்கு துணைபுரியும் செயலாகும்.
எனவே, இந்துமதவெறி பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் புல்டோசர் பயங்கரவாதத்தை உச்சநீதிமன்றம் தடுத்து நிறுத்திவிடும் என்று பார்த்துக் கொண்டிருக்காமல் அந்நடவடிக்கைகளை எதிர்த்து மாபெரும் மக்கள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும்; அப்போராட்டங்களை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலை தடை செய்யும் அளவிற்கு வளர்த்தெடுக்க வேண்டும். அத்தகைய நடவடிக்கைகளே புல்டோசர் பயங்கரவாதத்தை சவக்குழி தோண்டி புதைக்கும்.
அமீர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram