ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளைத் தீவிர வலதுசாரி அமைப்புகளாகப் பட்டியலிடுமாறு கனடாவில் உள்ள 25 தெற்காசிய சமூகத்தினர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அக்டோபர் 30 அன்று கடிதம் எழுதியுள்ளனர்.
அக்கடிதம், தெற்காசிய மற்றும் பிற சிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு வலியுறுத்துகிறது.
2023 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கனடா நாட்டில் வசித்து வந்த காலிஸ்தான் ஆதரவு தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். இதை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது.
கனடாவின் குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாமீது குற்றம் சுமத்தும் கனடா அரசு, அதற்கான எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. கனடாவின் உள்நாட்டு அரசியல் காரணமாகவே ஹர்தீப் சிங் கொலை செய்யப்பட்டிருப்பார். அவரது கொலைக்கும், இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று இந்த சம்பவம் குறித்துத் தெரிவித்திருந்தார்.
ஆனால், தெற்காசிய சமூகங்களின் உறுப்பினர்களின் அறிக்கை “சமீபத்தில் ஆர்.சி.எம்.பி (Royal Canadian Mounted Police) எனப்படும் கனடா நாட்டு போலீஸ் கனடாவில் கடுமையான குற்றச் செயல்களில் இந்திய அரசாங்கத்தின் ஏஜென்சிகள் ஈடுபட்டது குறித்தும், கொலைகள், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பிற குற்றவியல் வன்முறைச் செயல்களில் தனிநபர்கள் சிலர் நேரடியாக ஈடுபட்டது குறித்தும் விசாரணை செய்து வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
மேலும், கடந்த ஆண்டு கனட சீக்கியத் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது, இந்தியாவின் இந்து தேசியவாத அரசாங்கத்தின் இதுபோன்ற செயல்பாடுகளுக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு மட்டுமே” என்று கூறுகிறது.
படிக்க: வெளிநாடுகளில் மர்ம கொலைகள் செய்கிறதா இந்தியா? || அறம் இணைய இதழ்
“இந்தியாவின் தேசம் கடந்த வன்முறை மற்றும் துன்புறுத்தல் குறித்த குற்றச்சாட்டுகள் கனடாவில் மட்டுமல்ல, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானிலும் வெளிவந்துள்ளன. அங்குள்ள முக்கிய சீக்கிய ஆர்வலர்கள் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறுகின்றனர்” என்று தி கார்டியன் அறிக்கை கூறுகிறது.
கனடாவில் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவாருடன் தொடர்புப்படுத்தி கனேடிய முஸ்லிம்களின் தேசிய கவுன்சில் (National Council of Canadian Muslims) வெளியிட்ட 2023 ஆம் ஆண்டு அறிக்கையை இந்த அறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது.
“சங் பரிவார் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொடர்பான குழுக்களின் இருப்பு கனடாவில் இந்து மேலாதிக்கவாத பிரச்சாரங்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான பல்வேறு சம்பவங்களுடன் பொருந்திப் போகிறது” என்று 2023 அறிக்கை கூறுகிறது.
ஐரோப்பிய பாசிசத்தால் ஈர்க்கப்பட்ட “இந்துத்துவா” அல்லது இந்து தேசியவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு துணை இராணுவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-இன் அரசியல் அங்கம் பாஜக என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
“ஆர்.எஸ்.எஸ் நிறுவனர்கள் வெளிப்படையாகப் பாசிச சித்தாந்தத்தை ஆதரித்தனர். இந்தியாவில் பா.ஜ.க-வின் பத்தாண்டுக் கால ஆட்சியில், 20 கோடி முஸ்லீம் மக்கள் மற்றும் சீக்கியர்கள், தலித்துகள், ஆதிவாசிகள் (பழங்குடி மக்கள்), கிறிஸ்தவர்கள் ஆகியோர் இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கப்படுகிறார்கள். பல்வேறு சிறுபான்மை மக்களைக் கொண்ட நாட்டை ஒரு இந்து தேசியவாத நாடாக மாற்றுவதற்கான அவர்களின் இலக்கை நோக்கி இந்தியாவை அழைத்துச் செல்கிறார்கள். இதற்கான பல நிகழ்வுகளை நாம் கண்டிருக்கிறோம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் செல்வாக்கு
இந்த இந்து தேசியவாத அரசாங்கத்தின் கீழ், இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான அட்டூழியங்கள் பயமின்றி பெரும்பாலும் அரசின் உடந்தையுடன் நடத்தப்படுகின்றன. மேலும், இந்த தீவிரவாத குழுக்களின் நெட்வொர்க் சீக்கியர்கள் மற்றும் பிற புலம்பெயர்ந்த இந்திய சிறுபான்மை சமூகங்கள், கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள ஆர்வலர்களைக் குறிவைத்து வருவதாக சமீபத்திய சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.
கனடா மற்றும் உலகெங்கிலும் உள்ள இந்து தேசியவாதிகள் மற்றும் அவர்களது துணை அமைப்புகளின் விரிவான நெட்வொர்க்குகள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது கனடாவில் உள்ள இந்த நெட்வொர்க் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், கொடிய வன்முறையில் ஈடுபட்டுள்ளது என்பதை நாம் அறிவோம்.
தெற்காசியர்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்களுக்குப் பாதுகாப்பை வழங்கவும், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் செல்வாக்குகளை விசாரிக்கவும், கனடாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளைத் தீவிர வலதுசாரிக் குழுக்களாகப் பட்டியலிடவும் கனேடிய அரசாங்கத்தை அறிக்கை வலியுறுத்துகிறது.
இந்துத்துவா கூட்டணி அமைப்புகளான எச்.எஸ்.எஸ் (Hindu Swayamsevak Sangh)-கனடா, வி.எச்.பி (Vishwa Hindu Parishad)-கனடா, வட அமெரிக்காவின் இந்துக்களின் கூட்டணி (Coalition of Hindus of North America – CoHNA)-கனடா
மற்றும் இந்து பாரம்பரியக் கல்விக்கான கனடியன் அமைப்பு (Canadian Organization for Hindu Heritage Education – COHHE), சேவா இண்டர்நேசனல் (SEWA International) ஆகிய அமைப்புகள் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை இந்துபோபியா (என்ற பொய்யான கருத்தாக்கத்தின் மூலம்) திசை திருப்புகின்றன. இது ஏற்கெனவே அம்பலப்படுத்தப்பட்டுவிட்டது. இவ்வாறு அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
நன்றி: தி வயர்
தினேஷ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram