இந்தியப் பொருளாதாரத்தின் அனைத்து முக்கியத் துறைகளையும் தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் பிரதமர் நரேந்திர மோடியின் கூட்டுக் களவாணியான அதானி குழுமம் மற்றொரு படி முன்னேறியுள்ளது. தற்போது 5 பில்லியன் டாலர் முதலீட்டில் இந்திய நாட்டின் ஒட்டு மொத்த உலோகத் துறையையும் கைப்பற்றத் திட்டமிட்டுள்ளது.
ஏற்கெனவே விமான நிலையங்கள், துறைமுகங்கள், சிமெண்ட் ஆலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், நிலக்கரி சுரங்கங்கள், பால் உற்பத்தி, செய்தி ஊடகங்கள் என பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் அதானி குழுமம், இப்போது உலோகத் துறையிலும் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நுழைவு வெறும் வணிக விரிவாக்கம் மட்டுமல்ல. இது இந்தியப் பொருளாதாரத்தின் மீது ஓரிரண்டு பெரும் கார்ப்பரேட் குழுமங்களின் பிடியை இறுக்குவதாகவே அமைகிறது. வேதாந்தா, ஹிண் டால்கோ போன்ற பெரும் உலோக நிறுவனங்களுடன் போட்டியிட அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக, அதானி குழுமத்தின் இந்த முதலீடு அவர்களின் சொந்தப் பயன்பாட்டுக்கானது என்பதே கவலைக்குரியது. மின்சக்தி உற்பத்தி, போக்குவரத்து போன்ற தங்களது ஏனைய வணிகங்களுக்கு இந்த உலோகங்களைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். இது முழு உற்பத்தி சங்கிலியையும் ஒரே குழுமத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியாகும்.
பசுமை ஆற்றல் என்ற பெயரில் சோலார் பேனல்கள், காற்றாலை டர்பைன்கள் தயாரிப்பிலும் இந்த உலோகங்கள் பயன்படுத்தப்படும் என்கிறார்கள். ஆனால் இது வெறும் சுற்றுச்சூழல் காரணங்களுக்காக மட்டுமல்ல, மாறாக முழு ஆற்றல் துறையையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நீண்டகால திட்டத்தின் ஒரு பகுதியே.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் தாமிரத் தேவை இரட்டிப்பாகும் என்ற கணிப்பின் அடிப்படையில் இந்த முதலீடு மேற்கொள்ளப்படுகிறது. வெளிநாட்டு இறக்குமதியைக் குறைப்பது என்ற பெயரில், உள்நாட்டு உற்பத்தியை ஒரு சில பெரும் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்பது கேள்விக்குறியே.
இந்தியப் பொருளாதாரத்தின் பன்முகத் தன்மையும், போட்டித்தன்மையும் படிப்படியாகச் சிதைக்கப்படுவதை இது காட்டுகிறது. குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு இத்தகைய சில பெரும் கார்ப்பரேட் குழுமங்களின் ஆதிக்கம் பெரும் சவாலாக அமையும். சில ஆண்டுகளில், உலோகத்துறை சார்ந்த நிறுவனங்கள் அனைத்தையும் அதானி குழுமம் விழுங்கும். ஏற்கெனவே பல துறைகளில் அப்படித்தான் நடந்து கொண்டுள்ளது.
இது நீண்ட கால அடிப்படையில் நாட்டின் பொருளாதார ஜனநாயகத்துக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடும். அந்த ஆபத்தை முன்னின்று நிறைவேற்றுகிறது அதானியால் ஆதாயம் பார்க்கும் பாஜகவின் மோடி அரசு.
நன்றி: தீக்கதிர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
https://www.vinavu.com/2024/11/13/modi-govt-is-redirecting-investments-from-south-indian-states-to-gujarat/
இக்கட்டுரையையும் இணைத்துப் படிக்கவும். மாற்றுச் செயல்திட்டத்தின் அவசியத்தை கூடுதலாக உணர வாய்ப்புள்ளது
நேற்று வரை அதானி இந்திய மக்களின் பணத்தை பேங்க் மூலம் கொள்ளை அடித்து கொண்டு போக போறாங்கனு ஹின்டென்பேர்க் விவகாரத்தில் புலம்பி கொண்டுருந்திங்க. இப்போ எல்லாத்தையும் அவங்களே கண்ட்ரோல் பன்றாங்கனும் அழுவிரிங்க. எது தான் உண்மை.