பாரதியார் பல்கலைக்கழகம்:
இரண்டு ஆண்டுகளாக நியமிக்கப்படாத துணைவேந்தர்
முறைகேடுகளும், மாணவர்கள் சந்திக்கும் கல்விச் சிக்கல்களும்!
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த காளிராஜ் ஓய்வு பெற்ற நிலையில், 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதியிலிருந்து தற்போது வரையிலும் துணைவேந்தர் பணியிடம் நிரப்பப்படவில்லை.
இது மாணவர்கள், ஆய்வு மாணவர்கள், பேராசிரியர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கோவையில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள 134 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன.
பாரதியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க புள்ளிவிவரங்களின்படி இங்கு மொத்தம் 41 துறைகளில் 240 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 3 ஆயிரத்துக்கும் அதிகமான முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் படிக்கின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, துணைவேந்தர் பொறுப்பை, துணைவேந்தர் குழு கவனித்து வருகிறது, இதன் ஒருங்கிணைப்பாளராக (Convenor) தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையின் செயலாளர் கோபாலகிருஷணன் இருக்கிறார். பல்கலைக்கழக நியமனமாக பேராசிரியர் லவ்லினா லிட்டில் பிளவர், ஆளுநரின் நியமனமாக கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலாளர் வாசுகி, தமிழ்நாடு அரசின் நியமனமாக தமிழ்நாடு சுயநிதிக் கல்லூரிகள் சங்கத்தின் தலைவர் அஜித்லால் மோகன் என மூன்று பேர் இந்த குழுவில் உள்ளனர்.
அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மூலம் நியமிக்கப்பட்ட C.A.வாசுகி என்பவர் ஆர்.எஸ்.எஸ் சார்புள்ள நபர். கொங்குநாடு கலை அறிவியல் வளாகத்தினுள் ஆர்.எஸ்.எஸ் சாகா பயிற்சியும், முகாம்களும் நடத்துவதற்கு அனுமதி அளித்து, ஆர்.எஸ்.எஸ்-க்கு பின்தளமாக இருப்பவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
***
பாரதியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் (BHUTA) வசந்த், “குழு உறுப்பினர்கள் கோவையிலும், ஒருங்கிணைப்பாளர் சென்னையிலும் உள்ளனர். இதனால் சிறிய நிர்வாக முடிவுகளை எடுப்பதில் கூட தாமதம் ஏற்படுகிறது. தமிழக அரசின் நிதியில் ரூ.40 கோடி மதிப்பில், புதிதாக 6 கட்டிடங்கள் கட்டப்பட்டு, பல மாதங்களாகத் திறக்கப்படாமல் இருந்தது. நாங்கள் பல முறை முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியதன் விளைவாக, சென்ற ஆகஸ்ட் 12 ஆம் தேதி அவை திறக்கப்பட்டன” என்கிறார்.
‘‘இந்த ஆண்டில் இளங்கலை ஆங்கிலம் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பகுதி II ஆங்கிலம் I பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டதை நம்பி, சில கல்லூரிகளில் இரண்டு யூனிட் பாடங்களை எடுத்து ஒரு தேர்வும் நடத்திவிட்டார்கள். ஆனால், இப்போது பழைய பாடத்திட்டமே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது இங்கு நடக்கும் குளறுபடிக்கு ஒரு சிறந்த உதாரணம்’’ என்கிறார் வசந்த்.
காலிப் பணியிடங்கள்!
துணைவேந்தர் பணியிடம் மட்டுமல்லாமல் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து எட்டு ஆண்டுகளாக, பதிவாளர் பணியிடமும் காலியாக இருக்கிறது. இதைத்தவிர, 70 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆசிரியரல்லாத பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களைச் சுட்டிக்காட்டிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் (AUT) துணைத் தலைவர் திருநாவுக்கரசு, “தொலைதூர கல்வி இயக்குநர் பணியிடம், 2015 ஆகஸ்ட் 20 ஆம் தேதியிலிருந்தும், கூடுதல் இயக்குநர் பணியிடம், 2009 ஆகஸ்ட்19-ம் தேதியிலிருந்தும் காலியாக இருக்கின்றன. ஆசிரியரல்லாத பணியிடங்களில், பல்கலைக்கழகத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 458 பணியிடங்களில் தற்போது வரை 354 பணியிடங்களும், 12 விரிவுரையாளர் பணியிடங்களும் காலியாக இருக்கின்றன” என்று பட்டியலிடுகிறார்.
“ஒரே நபரிடம் மூன்று பொறுப்புகள் தரப்பட்டுள்ளன. இதனால் பணிகளின் தரம் குறைவதுடன், தாமதம் ஏற்படுகிறது. பல்கலைக்கழகத்தில் உள்ள 12 விடுதிகளிலும் காப்பாளர் பணியிடங்கள், ஐந்திலிருந்து பத்தாண்டுகள் வரை காலியாகவுள்ளன.’’ என்கிறார் பேராசிரியர் வசந்த்.
துணைவேந்தர் குழுவில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள லவ்லினா, வேண்டுமென்றே ஏராளமான கோப்புகளைக் கையெழுத்திடாமல் வைத்துள்ளார் என்று வசந்த் குற்றம்சாட்டுகிறார்.
“துணைவேந்தர் குழுவின் ஒருங்கிணைப்பாளரான உயர்கல்வித்துறையின் செயலர் ஒப்புதலின்றியே பல விவகாரங்களை லவ்லினா கையாண்டுள்ளார். தகுதியற்ற உதவி பேராசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கியது, அதிகாரத்தை மீறி 28 சுயநிதிக் கல்லூரிகளில் முதல்வர் நியமனத்தை அனுமதித்தது, தனிப்பட்ட முறையில் சில பேராசிரியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்தது என்று 11 விதமான புகார்கள் உள்ளன. இதுபற்றி முதலமைச்சருக்கு நாங்கள் புகார் அனுப்பி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவரை நியமித்து விசாரணையும் நடத்தப்பட்டுவிட்டது. ஆனால், நடவடிக்கை மட்டும் இதுவரை எடுக்கப்படவில்லை” என்கிறார் வசந்த்.
***
முதலமைச்சரைப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக அங்கீகரிக்கக்கோரி, 2022 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்துள்ளது.
இதுகுறித்து திருநாவுக்கரசு கூறுகையில், ‘‘இப்போதுள்ள முறைப்படி, துணைவேந்தர் நியமனக் குழுவில் செனட் உறுப்பினர் ஒருவர், சிண்டிகேட் உறுப்பினர் ஒருவர், அரசு நியமன உறுப்பினர் ஒருவர் என மூன்று பேர் இருக்கிறார்கள்.
ஆனால், பல்கலைக்கழக மானியக்குழுவிலிருந்து (UGC) அதில் கூடுதலாக ஒருவரை நியமிக்க வேண்டுமென்று ஆளுநர் சொல்கிறார். ஆனால், பாரதியார் பல்கலைக்கழக சட்டம், சென்னைப் பல்கலைக்கழகச் சட்டம் ஆகியவற்றின்படி, அப்படிச் செய்ய முடியாது” என்றார்.
இது மாநில பல்கலைக்கழகங்களை ஆளுநர் மூலம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுசெல்லும் நடவடிக்கையின் ஒரு அங்கமாகும்.
துணைவேந்தர் நியமனம் தாமதமாவதற்கு அரசுதான் காரணம் என்று ஒரு தரப்பினரும், ஆளுநர்தான் காரணமென்றும் மற்றொரு தரப்பினரும் வாதங்களை முன்வைக்கின்றனர்.
ஆனால், ஆளுநர் மூலமாக மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் நோக்கில் துணைவேந்தர் நியமனம் செய்வதில் தாமதம் செய்யப்படுகிறது என்றே நாம் பார்க்க வேண்டியுள்ளது.
படிக்க: பாரதியார் பல்கலைக்கழகம்: தொடரும் சாதிய அடக்குமுறைகளும், நிர்வாகத்தின் முறைகேடுகளும்!
‘‘பாரதியார் பல்கலைக்கழகத்தில் நான்கு துணைவேந்தர்கள், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் சிக்கியுள்ளனர். அதிலும் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நேரடியாக லஞ்சம் வாங்கி கைதான சம்பவமும் நிகழ்ந்துள்ளது”.
இதற்கிடையில், பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்குப் பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில், செப்டம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. “அரசியல் தலையீடு இல்லாமல் தகுதியான நபரையே தேர்வு செய்ய வேண்டும். ஏற்கெனவே 90 சதவிகிதப் பணியாளர்கள் இல்லை’’ என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்துகின்றன.
காலி பணியிடங்கள் நிரப்பப்படாததால் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக விரிவுரையாளர்கள், ஆய்வு மாணவர்கள் என பல தரப்பினரும் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர். கடந்த மாதம் பட்டமளிப்பு விழாவின் போது ஆளுநரிடம் ஒரு மாணவர் பல்கலைக்கழகங்களில் நிலவும் பிரச்சனைகள், முறைகேடுகள் மற்றும் சாதிய அடக்குமுறைகள் பற்றி கடிதம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
எனவே,
- உடனடியாக பல்கலைக்கழகத்திற்குத் துணை வேந்தர் நியமிக்கப்பட வேண்டும்!
- 70 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கும் காலிப் பணியிடங்களுக்கு உடனடியாக நியமனங்கள் செய்யப்பட வேண்டும்!
- ஆசிரியர் சங்கங்கள், ஆய்வு மாணவர்கள், மாணவர்கள் கோரிக்கைகள் கேட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும்!
- கல்வியைக் காவிமயமாக்கும் ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், சனாதன ஆதரவு பேச்சுகளுக்கு எதிராகவும், மாநில உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள் குரல் எழுப்ப வேண்டும்!
மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்
94889 02202
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram