திங்களன்று (நவம்பர் 25) நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் அதானி ஊழலைப் பற்றி விவாதிக்க வேண்டுமென்கிற எதிர்க்கட்சித் தலைவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

நவம்பர் 25 முதல் டிசம்பர் 20-ஆம் தேதி வரை நடைபெறுகின்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பாசிச கும்பலானது வக்பு வாரிய திருத்த மசோதா உள்பட 16 மசோதாக்களைச் சமர்ப்பிக்க உள்ளதால் இக்கூட்டமானது அனைத்துத் தரப்பினராலும் உற்று கவனிக்கப்பட்டுள்ளது.

இப்படிப் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திங்களன்று நடைபெற்ற முதல் நாள் கூட்டம் காலை 11 மணிக்குத் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்பு மணிப்பூர் வன்முறை, டெல்லி காற்று மாசுபாடு போன்றவற்றுடன் அதானி ஊழல் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன. இதனால் அவையானது 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அதானியின் கிரீன் எனர்ஜி நிறுவனம் மத்திய அரசு நிறுவனமான எஸ்.இ.சி.ஐ (Solar Energy Corporation of India Limited)-இன் சூரிய ஒலி மின் திட்ட ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக, இந்திய மின்வாரிய அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்ததை மறைத்து, அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து 20,000 கோடி முதலீடு பெற்றுள்ளது. இந்த ஊழல் குற்றச்சாட்டில் அதானி உள்பட 7 பேருக்கு நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருக்கிறது.

இந்த செய்தியானது சர்வதேச அளவில் பேசு பொருளாக மாறியதையடுத்து பல நாடுகள் அதானி நிறுவனத்துடனான ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளன. இதனைப் பற்றிப் பேசுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால்தான் கூட்டமானது ஒத்தி வைக்கப்பட்டது.


படிக்க: அதானி 2000 கோடி ஊழல் அம்பலம் | கைது செய்யுமா மோடி அரசு


பிறகு அவையானது மீண்டும் 12 மணியளவில் கூடியது. அப்போது தாங்கள் அளித்த அவை ஒத்திவைப்பு மனுவின்படி நாடாளுமன்ற அலுவலக வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு மேற்கண்ட அதானி ஊழல் விவாகரத்தைக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.

இந்த கோரிக்கைகளை மக்களவைத் தலைவர் ஏற்க மறுத்ததால் எதிர்க்கட்சி தலைவர்கள் “அதானி.. அதானி…” என்று முழக்கமிட்டனர். இதனால் கூட்டம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக ஓம் பிர்லா அறிவித்தார்.

இதேபோன்று மாநிலங்களவையிலும் அதானி ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் முழக்கமிட்டதால் அங்கேயும் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத்தலைவர் அறிவித்துள்ளார்.

குறிப்பாக நாடாளுமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய மோடி நாடாளுமன்ற அலுவலக நேரத்தை மாண்புடன் நடத்துவதில் நாட்டின் சர்வதேச மரியாதையும் உள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் அதனைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுவார்கள் என்று பேசியுள்ளார்.

இதன் மூலம் அதானியைப் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதித்தால் அது தேசத்திற்கு எதிரானது; எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரும் அதானியைப் பற்றிப் பேசவே கூடாது என்பதையே பாசிசக் கும்பல் மீண்டும் கூறியுள்ளது.

அதானிக்கு எதிராக மக்கள் மன்றத்தில் முழங்க வேண்டும் என்பதை எதிர்க்கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும். அதன்மூலமே பாசிச கும்பலைப் பணியவைக்க முடியும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க