தடைகளைத் தாண்டி வெற்றிகரமாக நடந்த பொட்டலூரணி மக்கள் ஆர்ப்பாட்டம்!

ஆர்ப்பாட்டத்திற்கான நீதிமன்ற உத்தரவு கைக்குக் கிடைத்த பின்னரும் தங்களைத் தாண்டி இந்த ஆர்ப்பாட்ட அனுமதியை கிராம மக்கள் நீதிமன்றத்தின் மூலமாகப் பெற்றதை போலீசால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தடைகளைத் தாண்டி வெற்றிகரமாக நடந்த
மீன் கழிவு ஆலைகளுக்கு எதிரான
பொட்டலூரணி மக்கள் ஆர்ப்பாட்டம்!

பொட்டலூரணி ஊரைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழலை நாசம் செய்யும் சட்டவிரோத கழிவு மீன் ஆலையை இழுத்து மூடு!

பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெறு! மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடு!

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தூத்துக்குடி, விவிடி சிக்னல் அருகில் ஞாயிறு (நவம்பர் 24) காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொட்டலூரணி கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மற்றும் மக்கள் அதிகாரம், மே 17 இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசிய பேரவை, நாம் தமிழர் மற்றும் ஜனநாயக சக்திகள் கலந்து கொண்டனர்.

இதுவரை ஊருக்குள்ளேயே முடக்கி வைக்கப்பட்டிருந்த, மீன் கழிவு ஆலைகளுக்கு எதிரான பொட்டலூரணி கிராம மக்களின் போராட்டம், பல தடைகளைக் கடந்து, இன்று தூத்துக்குடி நகரத்தில்,ஆர்ப்பாட்டமாக நடைபெற்றது.

மீன் கழிவு ஆலைகளை மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத் தேர்தல் புறக்கணிப்பு, கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராஜினாமா உள்ளிட்ட பல கட்டப் போராட்டங்களை பொட்டலூரணி கிராம மக்கள் மேற்கொண்டனர். ஒன்றாகக் கூடிச் சமைத்து உண்டு இந்த போராட்டத்தைத் தொடர்ச்சியாக நடத்திக் கொண்டு வந்தனர்.

ஆனால் மாவட்ட நிர்வாகமும், அரசும் இதைக் கண்டு கொள்ளவில்லை. மாறாக, போராடிய பொட்டலூரணி கிராம மக்கள் மீது வழக்குகளைப் போட்டு போராட்டங்களை ஒடுக்க நினைத்தது. இருப்பினும் மக்கள் விடாப்பிடியாக தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர். மீன் கழிவு ஆலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப் பலமுறை அனுமதி கேட்டும் போலீஸ் தரப்பிலிருந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் ஆலைக்கு ஆதரவாக போலீஸும் மாவட்ட நிர்வாகமும் நடந்து கொண்டது மக்கள் மத்தியில் அம்பலம் ஆகியது.

கடைசியாகக் கொடுத்த அனுமதிக் கடிதத்தையும் போலீஸ் மறுக்கவே மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு போராடும் மக்களுக்குச் சாதகமாக வந்தது. தீர்ப்பின் அடிப்படையில் 24/11/2024 அன்று தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதற்கிடையில் இந்தப் போராட்டத்தை வழிநடத்திய போராட்டக் குழுவைச் சேர்ந்த ஆறு பேர் மீது, பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில், ஆலையின் தூண்டுதல் காரணமாக போலீஸ் பி.சி.ஆர் வழக்குப் பதிவு செய்தது. இவ்வாறு பல வழிகளில் இந்த போராட்டத்தையும், ஆர்ப்பாட்டத்தையும் சிதைக்க போலீஸ் தன்னாலான அனைத்தையும் செய்தது.

ஆர்ப்பாட்டத்திற்கான நீதிமன்ற உத்தரவு கைக்குக் கிடைத்த பின்னரும் தங்களைத் தாண்டி இந்த ஆர்ப்பாட்ட அனுமதியை கிராம மக்கள் நீதிமன்றத்தின் மூலமாகப் பெற்றதை போலீசால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. போலீஸ் தொடர்ச்சியாக பல்வேறு வகையில் அச்சுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்து விடக்கூடாது என்று முயற்சி செய்தது, ஆனால் அதை முறியடித்து ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

போலீசின் எந்த அச்சுறுத்தலுக்கும் போராடிய பொட்டலூரணி மக்கள் அஞ்சவில்லை. மக்கள் அதிகாரம், உட்பட அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் இந்த போராட்டத்திற்கான அழைப்பு கொடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தை எப்படியாவது சிதைக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்ட ஜனநாயக சக்திகளின் வீடுகளுக்கும் போலீஸ் சென்று அவர்களை வீட்டுக் காவலில் வைத்தது. மக்கள் அதிகாரம் தோழர்களின் வீடுகளுக்கும் சென்று வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தியது. இந்த தடைகள் அனைத்தையும் தாண்டி மீன் கழிவு ஆலைகளுக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இந்த போராட்டத்தின் முக்கியத்துவம் பற்றியும், மீன் கழிவு ஆலையை அகற்றுவதன் நோக்கத்தைப் பற்றியும், மாவட்ட நிர்வாகமும், அரசும் எந்த அளவு மீன் கழிவு ஆலைக்குத் துணை போகிறது என்பதைப் பற்றியும் விளக்கிப் பேசினர். ஊர் மக்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மக்கள் அதிகாரம் தோழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய மக்கள் அதிகாரம் மாநிலச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் இந்தப் போராட்டத்தை ஆதரித்தும் இந்த போராட்டம் வெற்றி பெறும் என்றும் தன்னுடைய உரையில் பேசினார். இந்த மண்ணுக்கு மிகப்பெரிய போராட்ட அனுபவம் உண்டு. கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் நடத்தி இருக்கிறது இந்த மண். உலகமே திரும்பிப் பார்த்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் மிகப்பெரிய போராட்டத்தைக் கட்டியமைத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடி வெற்றி கண்டது இந்த மண். அந்த வழியில் இந்த மீன் கழிவு ஆலைக்கு எதிரான இந்த போராட்டமும் வெற்றி அடையும் என்பதைக் குறிப்பிட்டுப் பேசினார். போலீசு, அரசு, கலெக்டர் இவர்கள் மக்களுக்கானவர்கள் இல்லை. இந்த கட்டமைப்பு முழுவதும் கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கானது தான் என்பதைத் தோழர் தன்னுடைய உரையில் அம்பலப்படுத்திப் பேசினார்.


மக்கள் அதிகாரம்
நெல்லை மண்டலம்
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க