காசாவில் இருந்து!
எங்களின் கண்ணீரெல்லாம்
கார்மேகமாகி இருந்தால்,
காணாமல் போயிருக்கும் இசுரேல்
கடலுக்குள்…
இதோ,
காசாவெங்கும்
ஆயிரமாயிரம் பிஞ்சுகளின்
பிணக் கடல்…
குண்டுவீச்சுகளில்
சிதைபவை
எங்கள் சிறுவர்களின்
சிரங்களும் கரங்களும் தான்,
சிறகடிக்க விரும்பும்
விடுதலைக் கனவுகள் அல்ல…
சிரசில்லா சிறார்களின்
சிதைந்த உடல்களைச்
சிலுவையாய்ச் சுமக்கிறோம்;
ஈரமில்லா வெறியர்களின்
கொட்டம் அடக்கிட,
மீண்டும் உயிர்த்தெழ
வேண்டியே விதைக்கிறோம்…
உரிமை மட்டுமா
இல்லை என்றார்கள்,
ஒருவேளை உணவும் கூடத்தான்…
பாலுக்கு ஏங்கும்
பிள்ளை கண்டு,
வடித்த கண்ணீர்
வற்றியது கடந்த காலம்;
இது,
பாலூட்டும் அன்னைகளின்
மார்புகளே வற்றும் காலம்!
இனி கொடுப்பதற்கும்
எடுப்பதற்கும் மிஞ்சியிருப்பது
எங்கள் ரத்தமே!
ஆனாலும்,
வற்றாது எஞ்சியிருக்கிறது,
விடுதலை வேட்கை!
ரத்தம் வடியினும்
மண்ணில் புதையினும்
உயிர் மிச்சமுள்ள வரை
ஓயாது எம் குரல்!
எமக்காய்ப் பேசாது
வாயைப் பொத்திக் கொள்வோரே,
முள்ளிவாய்க்காலை விட
முந்நூறு மடங்கு
ரத்தக் கவுச்சி
காற்றில் கலக்கலாம்,
அப்போது
மூக்கையும் பொத்திக் கொள்வீரோ?
எப்போதும்
உறங்கிக் கொண்டிருக்கும்
உங்கள் கடவுளை,
உசுப்பிட முனையும்
வேண்டுதல்களை நிறுத்துங்கள்;
இப்போதேனும்
உம் மனசாட்சியை எழுப்புங்கள்!
கொத்துக்கொத்தாய்க்
கொன்றிடும் யூத வெறியர்கள்
எம்மை மொத்தமாய்க்
கொன்றுவிடும் முன்னே…
நேற்று ஈழம்,
இன்று நாங்கள்,
நாளை நீங்கள்…
இது சத்தியம்!
வடியும் குருதி,
மடியும் மக்கள்
போதும் போதும்
போரை நிறுத்தென
போராடும் மக்களைப் பாருங்கள்,
தோள்சேருங்கள்…
அப்போது
எம் பலம் பெருகும்,
பாலஸ்தீனம் மலரும்…
அது நிச்சயம்!
ஜிப்ஸி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
✊❤️👏