09.12.2024
பழங்குடியின மக்கள் போராளி ஸ்டேன் சுவாமி பயங்கரவாதியா?
பாசிச பாஜகவின் கருத்தை வாந்தி எடுக்கும் திமுக அரசு!
கண்டன அறிக்கை
பாசிச பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வரும் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் தனக்கு சொந்தமான தோட்டத்தில் பழங்குடியின மக்களின் போராளி ஸ்டேன் சுவாமி அவர்களின் சிலையை வைக்க முயன்றதை தடுத்துள்ளது தமிழ்நாடு போலீசு.
இதற்கு எதிராக அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணையின் போது, ஸ்டேன் சுவாமி நக்சல்பாரிகளுடனும் மாவோஸ்டுகளிடமும் தொடர்பு கொண்டவரென்றும் அவர் சிலையை நிறுவினால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது .
மேலும் தருமபுரியில் சமீபத்தில் பழங்குடி கிராமங்கள் அரசின் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் எதிர்க்கும் சமூக விரோதிகளுக்கான சொர்க்கபுரியாக மாறி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
ஒருவர் தனக்கு சொந்தமான நிலத்தில் எந்த ஒரு சிலையையும் வைக்க யாருடைய அனுமதியையும் வாங்க தேவையில்லை. அந்த ஒரு சிறிய உரிமையை கூட மறுத்த திமுக அரசு, மேற்கண்ட படி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
குற்றம் நிரூபிக்கப்படாத ஒருவரை நக்சல் தொடர்பில் இருந்தவர் என்று கூறக்கூடாது என்று தெரிவித்த நீதிமன்றம், சிலை வைப்பதற்கான அனுமதியைக் கொடுத்துள்ளது.
பழங்குடியின மக்களுக்காகப் போராடிய அறிவுஜீவிகளை பொய்யாக பீமா கோரேகான் வழக்கில் கைது செய்து, நடுக்கு வாத நோயால் பாதிக்கப்பட்டு தண்ணீரைக்கூட உறிஞ்சிக் குடிக்க முடியாத முதியவரான அவருக்கு பிணைக் கொடுக்காமலே உயிர்ப்பலி வாங்கியது மோடி அரசு .
ஆனந்த் தெல்தும்டே, சுதாபரத்வாஜ் , வரவர ராவ் போன்ற மக்களுக்காக போராடிய அறிவுஜீவிகளை சிறையில் அடைத்து மருத்துவ உதவிகள் எதுவும் வழங்காமல் சித்திரவதை செய்தது பாசிச மோடி அரசு.
இப்பிரச்சனையில், ஸ்டேன் சுவாமியை பயங்கரவாதி என்று முத்திரை குத்தி பிணை கொடுக்க மறுத்த பாசிச பிஜேபியின் அரசுக்கும் ஸ்டேன் சாமியை பயங்கரவாதி என்று நீதிமன்றத்தில் உரைத்த திமுக அரசுக்கும் என்ன வேறுபாடு உள்ளது?
ஊழல்வாதிகளுக்கும் மக்கள் விரோதிகளுக்கும் ஆதிக்கச் சாதி வெறியர்களுக்கும் சிலை வைக்க அனுமதி மறுக்காத தமிழ்நாடு அரசு ஸ்டேன் சுவாமி சிலைக்கு அனுமதி மறுத்தது என்பது தமிழ்நாட்டின் பாசிச பா.ஜ.கவுக்கு எதிரான உணர்வை சிதைப்பதாகும். மேலும் பாசிச பாஜக அரசுக்கு ஆதரவான செயல்பாடும் ஆகும்.
திமுக அரசின் இந்த நடவடிக்கையை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் ஸ்டேன்சுவாமி போன்ற மக்களுக்காக போராடியவர்களுக்கான உரிய மரியாதையை தமிழ்நாடு அரசு அளிக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
சிறப்பு!