குழந்தைகளைக் கொன்று குவிக்கும் இனவெறி இஸ்ரேல்!

“இஸ்ரேல் குழந்தைகளைக் கொல்வதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது, இந்த தாக்குதலில் தப்பித்து உயிர் பிழைக்கின்ற குழந்தைகளும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்"

னவெறி பிடித்த இஸ்ரேலின் கொடிய மனிதாபிமானமற்ற தாக்குதலினால் காசாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு குழந்தை கொல்லப்படுகிறது என்ற அதிர்ச்சிகர தகவலை பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ. நா அமைப்பின் தலைவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 8-ஆம் தேதி முதல் இனவெறி இஸ்ரேலானது அகதிகள் முகாம்கள், மருத்துவமனைகள், மக்கள் நெருக்கமாக வாழும் குடியிருப்புகள் ஆகியவற்றின் மீது மனிதாபிமானமற்ற கொடிய தாக்குதலை நடத்தி வருகிறது. குறிப்பாக அதிகளவில் பெண்களையும், குழந்தைகளையும் படுகொலை செய்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் போரில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்காகவும், வீடுகளை இழந்த மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காகவும், பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ. நா அமைப்பு (United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East – UNRWA) காசா, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை, ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அந்த அமைப்பின் தலைவர் லஸ்ஸாரிணி (Lazzarini) 24-ஆம் தேதி அன்று தனது எக்ஸ் (Twitter) பக்கத்தில், “இஸ்ரேலின் தாக்குதலினால் காசாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு குழந்தை கொல்லப்படுகிறது. காசாவில் போர் தொடங்கியது முதல் தற்போது வரை 14,500 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். இவை எண்கள் அல்ல கொல்லப்பட்ட குழந்தைகளின் உயிர்கள்” என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் தன்னுடைய பதிவில் “இஸ்ரேல் குழந்தைகளைக் கொல்வதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது, இந்த தாக்குதலில் தப்பித்து உயிர் பிழைக்கின்ற குழந்தைகளும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தங்கள் வாழ்க்கையின் எதிர்காலத்தையும், முக்கியமாக தங்களின் நம்பிக்கையையும் இழக்கிறார்கள்” என்பதை மேற்கோள்காட்டிப் பதிவிட்டுள்ளார்.

அதேபோல் இவ்வாண்டின் துவக்கத்தில் ஆக்ஸ்பாம் இண்டர்நேசனல் அமைப்பின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா இயக்குநர் (Middle East and North Africa Director) சாலி அபி கலீல் (Sally Abi Khalil), “இந்த அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் திகிலூட்டுவதாகவும் இதயத்தை உடைக்கும் வகையிலும் உள்ளன. சர்வதேச சமூகத்தில் செல்வாக்குமிக்க நாடுகள் இஸ்ரேலைத் தடுக்கத் தவறியது மட்டுமல்லாமல், நிபந்தனையின்றி ஆயுதங்கள் வழங்குவதன் மூலம் இஸ்ரேலின் இன அழிப்புக்கு உடந்தையாக உள்ளன” என்றும், “இந்தப் போரின் அழிவுகரமான தாக்கத்திலிருந்து மீள்வதற்குப் பல தலைமுறைகள் ஆகும். இருந்த போதிலும் இன்னும் போர் நிறுத்தத்திற்கான எந்த முயற்சியும் இல்லை” என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


படிக்க: மனித உரிமை நாள் தேவையா? கேள்வியெழுப்பும் காசாவின் கொடூரங்கள் | தோழர் மாறன்


போரினால் பாதிக்கப்பட்டுள்ள காசா மற்றும் மேற்கு கரையில் உள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்ற பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ. நா அமைப்பு, அடுத்த ஆண்டு முதல் காசா மற்றும் மேற்கு கரையில் செயல்படுவதற்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளது.

ஏற்கெனவே மக்களுக்குத் தேவையான உணவு, மருத்துவப் பொருட்கள் போன்றவற்றை வழங்காமல் ஆயிரக்கணக்கான மக்களைப் படுகொலை செய்துவந்த இஸ்ரேல், தற்போது ஐ.நா-வின் அகதிகள் அமைப்பைத் தடை செய்து பட்டினியாலும், நோய்களாலும் மக்களைப் படுகொலை செய்யத் திட்டமிட்டுள்ளது.

பாசிச இஸ்ரேல் கடந்த ஆண்டு முதல் தற்போது வரை காசா மீது நடத்திய இனப்படுகொலைப் போரினால் 45,338-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். மேலும் 1,07,764-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்ற தகவலைப் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் இனவெறி போருக்கு எதிராக உலகம் முழுவதும் நடைபெறுகின்ற மக்கள் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அதன் மூலமே பாசிச இஸ்ரேலைப் பணியவைக்க முடியும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க