தொடக்கநிலை வாசகர்களை மனதில்கொண்டு தோழர். கே.என்.சிவராமனால் எழுதப்பட்ட “சிவந்த மண்” என்ற நூல், மார்க்சியம் மீதும் வாசிப்பின் மீதும் காதலை ஏற்படுத்தி அவர்களின் தேடலை அதிகரிக்கச் செய்கிறது.
மகத்தான ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டையொட்டி “தினகரன் வசந்தம்” இணைப்பிதழில் தொடராக வெளிவந்து ஆயிரக்கணக்கான வாசகர்களை சென்றடைந்தது. பின்னாளில் சூரியன் பதிப்பகத்தால் நூலாக பதிப்பிக்கப்பட்டு இன்னும் பலரை சென்று சேர்ந்துகொண்டிருக்கிறது.
சிவந்த மண் நூலானது தமிழில் மார்க்சியத்திற்கான அறிமுக நூலாக அமைகிறது. கம்யூனிசத்தை நேசிக்கும் சக்திகள், குறிப்பாக இளைஞர்கள், இந்நூலை கட்டாயம் வாங்கிப் படித்து தமது நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும். தற்போது நடந்துகொண்டிருக்கும் 48-வது சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்குவதற்கு இந்நூல் சிறந்த தேர்வாக இருக்கும்.
இந்நூல் குறித்து வாசகர்கள் மேலும் அறிந்துகொள்ளும் பொருட்டு, இந்நூலின் ஆசிரியர் கே.என்.சிவராமனால் எழுதப்பட்ட நூல் அறிமுகத்தை இங்கே பதிவிடுகிறோம்.
நிலமென்னும் நல்லாள்
ஆம், கம்யூனிச சித்தாந்தம் தோற்றுவிட்டதாக ‘கருத்து’ பரவியிருக்கும் நேரத்தில்தான் இத்தொடர் எழுதப்பட்டது.
இன்று நிலவும் அனைத்து அரசியல் கருத்துகளுக்கும், அரசு உருவாக்கத்துக்கும், அரசாங்க நடைமுறைக்கும் குறைந்தது இரண்டாயிரமாண்டு வரலாறுகள் இருக்கின்றன.
எண்ணற்ற தவறுகள் நிகழ்ந்திருக்கின்றன; நிகழ்த்தப்பட்டும் வருகின்றன. என்றாலும் ‘வெளியில் தெரியும்’ தவறுகளை சரி செய்தபடியே தன்னை இக்கருத்துகளும், அரசும், அரசமைப்பும், அரசாங்கமும் புனரமைத்துக் கொண்டே இருக்கின்றன. கோமா நிலையில் இருந்தாலும் வாழ்கின்றன.
மறுக்கவில்லை. அன்றைய அரசு இன்றில்லை. ஆனால், அப்போதைய அரசின் வளர்ச்சிதான் இப்போதைய சூழல், அளவு மாற்றம் பண்பு மாற்றமாகி இருக்கிறது.
இதனுடன் ஒப்பிடுகையில் சோஷலிச அரசு சர்வநிச்சயமாக பச்சக் குழந்தைதான். ஜனித்து வெறும் நூறாண்டுதான் ஆகிறது. தங்களுக்கு முன்னோடி என யாரும் இல்லாத நிலையில் தத்தித்தத்திதான் நடைபயின்றது. ஆகவே இப்போது சோஷலிசம் வீழ்ந்துவிட்டது என்று சொல்வதை விட மீண்டும் எழுந்து நின்று விழாமல் இருக்க முயற்சி செய்யும் என கருதுவதே சரியாக இருக்கும்.
இதற்கு வலுசேர்த்தது, உலகிலேயே முதன்முதலாக ஒடுக்கப்பட்ட மக்கள் அணிதிரண்டு புரட்சி செய்து தங்களுக்கான அரசைத் தாங்களே 1917ம் ஆண்டு ரஷ்யாவில் உருவாக்கிக் கொண்டார்கள் என்ற உண்மை; இதனை தொடர்ந்து சீனாவில் விவசாயிகளும் தொழிலாளர்களும் கைகோர்த்து ஆட்சியைக் கைப்பற்றினார்கள் என்ற நிஜம்.
இவ்விரு நாடுகளும் பரப்பளவில் பெரியவை. மன்னராட்சி முறைக்கு பெயர் போனவை. வேர்க்கால்களில் கொடுங்கோன்மை ஊறியவை.
அப்படியிருக்க எப்படி இந்தப் புரட்சிகள் சாத்தியமாயின? எந்த நம்பிக்கையில் விவசாயிகளும் தொழிலாளர்களும் சோஷலிச சித்தாந்தத்தின் பக்கம் அணிதிரண்டார்கள்?
இக்கேள்விகளுக்கான விடைதான் இந்தப் புத்தகம்.
அடிப்படையில் இதை எழுதியவர் மார்க்சியவாதி அல்ல. அப்படிச் சொல்வது உண்மையிலேயே மார்க்சிய லெனினிய சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களை அவமதிப்பதற்கு சமம். எனவே தன்னை பிழைப்புவாதி – நுகர்வோன் – நுனிப்புல் மேய்பவன் என்று அழைத்துக் கொள்ளவே நூலாசிரியர் விரும்புகிறார்.
அதனாலேயே இது முழுமையான நூல் அல்ல என உரக்கச் சொல்கிறார்.
ஏராளமான பிழைகளுடனேயே ரஷ்ய, சீனப் புரட்சிகளின் வரலாறு இப்புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. போலவே ஒவ்வொரு அத்தியாயத்திலும் இடம்பெற்றிருக்கும் மார்க்சிய கோட்பாடுகள் குறித்த அறிமுகமும் மேலோட்டமானவையே.
இதற்கு காரணம் எழுதியவரின் போதாமைதான்.
இதையும் மீறி ஓரளவாவது இப்புத்தகத்தில் ‘நேர்மை’ தென்பட்டால் அதற்குக் காரணம், இருவர்.
ஒருவர், ‘வினவு’ தோழர்கள். அடுத்தவர் ‘தமிழ்த் தேசக் குடியரசுக் கட்சி’யை சேர்ந்த தோழர் பாஸ்கர். எப்போதும் போல் இப்போதும் இத்தோழர்களுக்கு நன்றி. புரட்சிகர வாழ்த்துகள்.
‘தினகரன் வசந்தம்’ இணைப்பிதழில் இத்தொடர் வெளிவர முழுக்க முழுக்க எங்கள் எம்டி திரு ஆர்.எம்.ஆர்.ரமேஷ் அவர்கள்தான் காரணம். 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் எதேச்சையாக அவருடன் பேசும்போது, ‘ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டு வருகிறது. இதையொட்டி அப்புரட்சியின் வரலாற்றை எழுதட்டுமா?’ என்று கேட்டபோது எவ்வித மறுப்பும் சொல்லாமல் உடனடியாக சம்மதித்து மறுவாரமே தொடரை ஆரம்பிக்கச் சொன்னார்.
மட்டுமல்ல, எழுதுவதற்கு முழு சுதந்திரமும் அளித்தார். ‘எதை எழுத வேண்டும்’ என்றோ, ‘எதையெல்லாம் எழுதக்கூடாது’ என்றோ அவர் கட்டளையிடவே இல்லை. தொடர் முடிந்ததுமே ‘உடனே ‘சூரியன் பதிப்பகம்’ வழியா நூலா கொண்டு வாங்க…’ என துரிதப்படுத்தினார். அவர் இல்லையென்றால் இந்நூல் சாத்தியமாகி இருக்காது.
என் வாழ்க்கையின் அனைத்து ஏற்றங்களுக்கும் காரணமாகவும் உந்து சக்தியாகவும் இருக்கும் எங்கள் எம்டியை எல்லா தருணங்களையும்போல் இந்த நிமிடமும் நினைத்துக் கொள்கிறேன். நன்றி சார்.
போலவே நண்பர் யுவகிருஷ்ணாவுக்கும். ஏனெனில் இத்தொடர் வெளியாகும்போது ‘தினகரன் வசந்தம்’ இணைப்பிதழின் ஆசிரியராக அவர்தான் இருந்தார்; இருக்கிறார். எந்த சூழலிலும் ‘ஹெவி சப்ஜெக்ட்… யார் படிப்பாங்கனு தெரியலை…’ என்றோ ‘எப்போது முடிப்பீர்கள்’ என்றோ அவர் கேட்டதேயில்லை. 24 பக்கங்களில் முழுமையாக மூன்று பக்கங்களை இத்தொடருக்காக வாரம்தோறும் ஒதுக்கிய அவருக்கு நன்றி.
ஒருவகையில் இத்தொடர், தொகுப்புதான். தமிழில் பல தோழர்கள் உதிரி உதிரியாக ஆங்காங்கே எழுதியவற்றை எல்லாம் தொகுத்திருக்கிறேன்.
தோழர்கள் இரா.ஜவஹர், அருணன், மருதன், புதிய ஜீவா, அ.கா. ஈஸ்வரன் உள்ளிட்டவர்களுக்கும்; ‘கீழைக்காற்று’, ‘பாரதி புத்தகாலயம்’, ‘நியூ சென்சுரி புக் ஹவுஸ்’, ‘அலைகள்’, ‘விடியல்’, ‘சென்னை புக்ஸ்’, ‘சிந்தன் புக்ஸ்’ பதிப்பகங்களுக்கும்; ‘மக்கள் கலை இலக்கியக் கழகம்’, “புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி’, ‘புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி’ மற்றும் வெகுஜன மக்கள் திரளை நம்பி இயங்கும் அனைத்து மார்க்சிய லெனினிய குழுக்களுக்கும்; இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கும் நன்றி. இவர்கள் அனைவரது படைப்புகளும், வலைப்பதிவுகளும், நூல்களும், பிரசுரங்களும் இந்நூலில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
நூலாக்கத்துக்கு துணைபுரிந்த பக்க வடிவமைப்பாளர்கள், பிழை திருத்துபவர்கள், அச்சகத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியும் அன்பும்.
ஆரம்பகட்ட வாசகர்களை மனதில் வைத்து இத்தொடர் எழுதப்பட்டிருக்கிறது. நூலும் அப்படியே உருவாகி இருக்கிறது. எனவே இப்புத்தகத்தை படிப்பவர்கள் இதை தொடக்க நிலையாக மட்டுமே கொள்ளவும்.
தோழமையுடன்
கே.என்.சிவராமன்
sivaraman71@gmail.com
9840907375
நூலின் பெயர்: சிவந்த மண்
ஆசிரியர்: கே.என். சிவராமன்
பக்கங்கள்: 680
விலை: ரூ400
வெளியீடு: சூரியன் பதிப்பகம்
தொலைபேசி: 044 42209191
மின்னஞ்சல்: webads@dinakaran.com
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram