மதுரை வலையங்குளத்தைச் சேர்ந்த தோழர். பழனிக்குமார் கடந்த 05/01/2025 காலை 8 மணியளவில் உயிரிழந்தார். தோழர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக 8 வருடமாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக வாரம் இருமுறை டயாலிசிஸ் சிகிச்சையைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்த நிலையில் சமீப நாட்களாக நெஞ்சுவலி, மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். தோழருடைய இழப்பு புரட்சிகர அமைப்பிற்கும் மக்களுக்கும் பேரிழப்பாகும்.
தோழர். பழனிக்குமார் இளம் வயதிலேயே சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு புரட்சிகர அரசியலை ஏற்றுச் செயல்பட்டவர். ஆரம்பத்தில் அவர் பெரியாரிய சிந்தனை பின்புலத்துடன் நம் தோழரிடம் அறிமுகமானார். சாதியக் கட்டமைப்பு, தீண்டாமை, ஒடுக்குமுறை மற்றும் சமூகத்தில் ஏற்படும் அரசியல் பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்றவற்றை நமது தோழர்களிடம் அதிகம் விவாதிப்பார். சமூக மாற்றம், வர்க்க ஏற்றத்தாழ்வு இல்லாமை, உழைக்கும் மக்களுக்கான அரசாங்கம், அதற்கான மாற்று அரசியல் பொருளாதாரம் போன்றவற்றுக்கான தீர்வு மார்க்சிய லெனினிய அரசியலில் இருக்கிறது என்பதை உணர்ந்த தோழர் பழனிக்குமார் மா.லெ அரசியலில் ஈர்க்கப்படுகிறார். நமது அமைப்புடன் இணைகிறார். எது சரி தவறு எனப் பிரித்தறிந்து பார்க்கும் பண்பு தோழரிடம் இயல்பாகவே உள்ளது. இதுதான் 2020-ல் ஏற்பட்ட அமைப்பு பிளவின் போது சரியான முடிவை எடுக்க உதவியது.
தோழர் நமது அமைப்புக்கு வந்த பிறகு அவரது பகுதியில் நமது அரசியல் ஏடான புதிய ஜனநாயகம் அதிகளவு மக்களிடம் சென்றடைந்தது. புதிய ஜனநாயகம் கையில் கிடைத்தவுடன் அதனை உடனே படித்து கருத்துச் சொல்வதில் ஆர்வமாக இருப்பார். தான் புரிந்து கொண்ட அரசியலை எளிய மக்களுக்குப் புரியும் விதமாக எளிமையாக எடுத்துரைப்பதில் வல்லமை படைத்தவர். இதனாலேயே புதிய ஜனநாயகத்திற்கான வாசகர்கள் அதிகளவில் பெருகினர். பகுதியில் மட்டுமல்லாமல் விருதுநகர் மாவட்டம் மாங்குளம் வரைக்கும் சென்று புதிய ஜனநாயகத்தை விற்பனை செய்வதன் மூலம் நமது அரசியல் ஏட்டை அறிமுகப்படுத்தி வாசகர் வட்டத்தை விரிவுபடுத்தியதில் தோழருடைய பங்களிப்பு அதிகம். மேலும் பகுதியளவில் வாசகர் வட்டம் நடத்துவது, அரசியல் வகுப்பு எடுப்பது போன்றவற்றையும் தோழர் செய்தார்.
மக்களுக்கு ஒரு பிரச்சனை என அறிந்தால் உடனே அதில் தலையிடுவது என்பது கம்யூனிஸ்டுகளுக்கு உரித்தான பண்பு.
அந்த விதத்தில் நமது தோழர் பகுதி மக்கள் பிரச்சனைகளைக் கண்டறிந்து அதனைத் தீர்க்கும் விதமாகப் போராட்டத்தைக் கட்டியமைத்து மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் களப்பணி அதிகம் செய்துள்ளார்.
குறிப்பாக
- வலையங்குளம் பகுதியில் அமைய இருந்த சிப்காட்டுக்கு எதிராக அங்குள்ள மக்களிடம் இதனால் ஏற்படும் பாதிப்பை எடுத்துரைத்து மக்களைத் திரட்டி போராட்டத்தைக் கட்டியமைப்பதில் பங்காற்றினார். இதனால் சிப்காட் வர விடாமல் விரட்டியடிக்கப்பட்டது.
- இதே போன்று புதிதாக அமைக்க இருந்த டாஸ்மாக்கை விரட்டியடிக்கவும் மக்கள் போராட்டத்தைக் கட்டியமைத்ததில் பங்காற்றினார்
- தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தனது பகுதியில் உள்ள மக்களை அணிதிரட்டி சாலை மறியல் செய்ததிலும் பங்காற்றினார்
இதுமட்டுமல்ல கோகோ கோலா எதிர்ப்பு போராட்டம், தமிழ் மக்கள் இசை விழா, விவசாயிகளை வாழவிடு, காவி கார்ப்பரேட் பாசிசம் எதிர்த்து நில், தற்போது நடைபெற்ற சுற்றி வளைக்குது பாசிசப்படை “வீழாது தமிழ்நாடு துவளாது போராடு” போன்ற அரசியல் மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பது மட்டுமல்லாமல் பகுதி மக்களைத் திரளாக அணிதிரட்டி அழைத்து வந்ததிலும் தோழரின் பங்கு குறிப்பிடத்தக்கது.
அமைப்பு பிளவின் போது எந்தவொரு பிரபலம், கவர்ச்சிக்கும் ஆட்படாமல் கூர்மையாக அரசியல் விமர்சன பார்வையுடன் நவீன கலைப்பு வாதிகளை இனங்கண்டு கலைப்புவாதத்தை முறியடித்து மார்க்சிய லெனினிய அரசியலை உயர்த்திப் பிடித்தார்.
தன்னுடைய இறுதி நாள் வரை நமது அமைப்பின் செயல்பாட்டை வளர்ச்சியை ஆர்வமாகக் கவனித்து வந்தார். குறிப்பாக தற்போது நடைபெற்ற ”கம்யூனிஸ்ட் கட்சி 100 ஆம் ஆண்டு துவக்க விழா” நிகழ்ச்சியை உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலும் வினவு வலைத்தளத்தில் பார்த்துவிட்டு மிகச் சிறப்பாக உள்ளது என்று அவர் இறப்பதற்கு முந்தைய நாள் நமது தோழரிடம் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இதுவே தோழருடைய இறுதிக் கருத்தாக இருந்தது. இதற்குப் பிறகு அவருக்குத் தொடர்ந்து நெஞ்சுவலி, மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
தோழர் இறுதி வரை சுயமரியாதையுடன் வாழ்ந்தவர். சக தோழரிடமும் மக்களிடமும் எளிதில் பழகக் கூடியவராக இருந்தார். மேலும் பெரியார் சிந்தனை கொண்ட தனது தந்தையிடம் ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும் என அடிக்கடி உணர்த்தி அவரை அரசியல் படுத்த போராடியுள்ளார். எந்த இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தாதவர்.
இப்படிப்பட்ட தோழரின் நற்பண்புகளை நாம் அவரிடம் இருந்து வரித்துக் கொண்டு தோழர் விட்டுச் சென்ற பணிகளை நாம் தொடர்வோம். இதுவே நாம் நமது தோழர் பழனி குமார் அவர்களுக்குச் செலுத்தும் அஞ்சலி ஆகும்.
தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram