ஜன.22: போக்குவரத்துத் தொழிலாளா்கள் சிறை நிரப்பும் போராட்டம்

தி.மு.க. ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் ஆகியும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதுடன், போக்குவரத்துத்துறை கார்ப்பரேட்மயமாக்க நடவடிக்கை முன்னெப்போதும் நடந்ததை காட்டிலும் தீவிரமாக நடந்து வருகிறது.

போக்குவரத்து தொழிலாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்ற ஜனவரி 22 அன்று சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தவுள்ளதாக சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

இப்போராட்டம் குறித்து சி.ஐ.டி.யு. காரைக்குடி மண்டல பொதுச்செயலாளர் தெய்வீரபாண்டியன் கூறுகையில், “தினமும் 2.75 கோடி பேர் பயணம் செய்யும் ரயில்வேக்கு ஒன்றிய பட்ஜெட்டில் ரூ.2 லட்சம் கோடிக்கும் மேல் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தினமும் 3 லட்சம் பேர் பயணிக்கும் சென்னை மெட்ரோ ரயிலுக்கு தமிழ்நாடு அரசு ரூ.35 ஆயிரம் கோடி வழங்குகிறது.

தினமும் 1.75 கோடி பேர் பயணம் செய்யும் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு நாங்கள் ரூ.7500 கோடி இழப்புத்தொகைதான் கேட்கிறோம். அரசு ரூ.1500 கோடிதான் வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் மொத்த கடன் 8 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. 2024-இல் மட்டும் ஒரு லட்சம் கோடிக்கு மேல் கடன் பெற்றுள்ளனர்.

கடனோடு கடனாக பெற்று போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். மின் வாரியத்திற்கு கடன் பெற்று வழங்கிய அரசு, போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு மட்டும் வஞ்சனை செய்வது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியா் சம்மேளன பொதுச் செயலா் கே. ஆறுமுக நயினாா் கூறுகையில், “தமிழ்நாட்டில் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை அரசு ஈடு செய்வதில்லை. இதனால் போக்குவரத்துக் கழகங்கள் கடும் நிதி நெருக்கடியில் இருந்து வருகின்றன. பேருந்து மூலம் உத்தேசமாக ரூ.100 வசூலானால் அதில் ரூ.12-ஐ வங்கியிலிருந்து பெற்ற கடனுக்கான வட்டியாக செலுத்த வேண்டியுள்ளது. தினமும் ஒரு கோடி கி.மீ இயக்கப்பட்ட அரசு பேருந்துகள் தற்போது 80 லட்சம் கி.மீ. மட்டுமே இயக்கப்படுகின்றன. அதாவது, ஏராளமான வழித்தடங்களில் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளன. வாரிசு வேலை மறுப்பது; பேருந்து எண்ணிக்கையைக் குறைப்பது என அ.தி.மு.க. ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட எட்டு அரசாணைகளை தி.மு.க. அரசு தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது” என தி.மு.க. அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை அம்பலப்படுத்தினார்.

எனவே, போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும்; போக்குவரத்து கழகங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பதுடன், மறைமுகமாக தனியாா்மயமாக்கும் நடைமுறையைக் கைவிட வேண்டும்; பணியிலிருந்து ஊழியா்கள் ஓய்வு பெறும்போது, ஓய்வு பெறும் அன்றே ஓய்வுகால பலன், ஓய்வூதியா்களுக்கான அகவிலைப்படி உயா்வு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்; தோ்தல் வாக்குறுதி அடிப்படையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதுடன், காலிப் பணியிடங்களைப் நிரப்ப வேண்டும்; வாரிசு வேலை வழங்க வேண்டும்; ஊதிய ஒப்பந்தத்தைப் பேசி முடிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 22 அன்று தமிழ்நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டத்தை போக்குவரத்துத் தொழிலாளர்கள் நடத்த உள்ளனர்.

முன்னதாக, இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 9 அன்று போக்குவரத்துத் தொழிலாளர்கள் பல்லவன் இல்லம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்து முறை வேலைநிறுத்தப் போராட்டம், தர்ணா, உண்ணாநிலை போராட்டம், மறியல் என பல கட்ட போராட்டங்களை கடந்த பத்து வருடங்களாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் நடத்தி வருகின்றனர். ஆனால், ஆளும் அரசுகள் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை.

அ.தி.மு.க. ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட தொழிலாளர் விரோதப் போக்கையும் போக்குவரத்துத்துறை கார்ப்பரேட்மயமாக்கத்தையும் கண்டு ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-விற்கு வாக்களித்து வெற்றிபெற வைத்தனர். தி.மு.க-வும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளித்தது. ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் ஆகியும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதுடன், போக்குவரத்துத்துறை கார்ப்பரேட்மயமாக்க நடவடிக்கை முன்னெப்போதும் நடந்ததை காட்டிலும் தீவிரமாக நடந்து வருகிறது.

போக்குவரத்துத்துறையில் ஏற்படும் நட்டத்தையும் இழப்புகளையும் சரிக்கட்டுவதற்கான எந்தவித முயற்சியையும் எடுக்காமல் அதனையே காரணம்காட்டி போக்குவரத்துத்துறையை கார்ப்பரேட்மயமாக்கும் சதித்திட்டத்தை தி.மு.க. அரசு அரங்கேற்றி வருகிறது. நிதி பற்றாக்குறையை காரணம்காட்டி போக்குவரத்துத்துறையில் ஒப்பந்தமுறையை அறிமுகப்படுத்தி கார்ப்பரேட்டுகளை உள்நுழைப்பது; அரசு பேருந்துகளின் எண்ணிக்கையை திட்டமிட்டு குறைப்பது; பல வழித்தடங்களில் அரசு பேருந்துகளை நிறுத்துவது; அதேசமயம், போக்குவரத்துக் கழகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வழித்தடங்களில் ஒப்பந்தமுறையில் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதிப்பது; நடத்துனர் பணியை காண்டிராக்ட்மயமாக்கி நட்டத்தை தீவிரப்படுத்தி ஒட்டுமொத்தமாக கார்ப்ப்பரேட்டிடம் தாரைவார்ப்பது; அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக அன்றி ஒப்பந்தமுறையில் புதிய பேருந்துகளை வாங்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்துவது; ஆம்னி பேருந்துகளை ஊக்குவிப்பது ஆகியவை என தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறையை கார்ப்பரேட்மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடந்தேறி வருகின்றன.

தி.மு.க. அரசின் இப்போக்கு போக்குவரத்துத் தொழிலாளர்களை மேலும் ஆத்திரமடையச் செய்துள்ளது. இருப்பினும் கவர்ச்சிவாத வாக்குறுதிகளை அளித்து 2026 சட்டமன்றத் தேர்தலில் இத்தொழிலாளர்களின் வாக்குகளை பெற்றுவிடலாம் என தி.மு.க. கனவு காணுகிறது. ஆனால், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-விற்கு வாக்களிப்பதாக இல்லை என போக்குவரத்துத் தொழிலாளர்கள் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

உண்மையில், தி.மு.க. அரசின் மக்கள் விரோ தத் நடவடிக்கைகளும் கார்ப்பரேட் நல கொள்கையும் பா.ஜ.க. பாசிசக் கும்பலுக்கும் அ.தி.மு.க எடப்பாடி பழனிச்சாமி, த.வெ.க. விஜய் போன்ற பா.ஜ.க-வின் நரல்களுக்குமே சாதமாக அமைகின்றது. எனவே, தொழிலாளர்கள், விவசாயிகள், பரந்துபட்ட உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தராமல், அவர்களின் வாழ்வாதாரத்தைச் சூறையாடும் கார்ப்பரேட் நலத் திட்டங்களை கைவிடாமல் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று தி.மு.க. கருதுவது, பா.ஜ.க. கும்பல் கொள்ளப்புறமாக தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்பதற்கு வழியேற்படுத்தி தருவதாகவே அமையும்.


சோபியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க