சமூக ஆர்வலர் ஜகபர் அலி மாஃபியா கும்பலால் படுகொலை

சமீபத்தில் வரம்பற்றமுறையில் கனிமவளங்களை ஒரே இடத்தில் குவித்து வைத்திருந்த கனிமவள கொள்ளையர்களுக்கு எதிராக ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் செய்து போராடி வந்தார் தோழர் ஜகபர் அலி.

புதுக்கோட்டை மாவட்டத்தின் தன்னிறகற்ற சூழலியல் செயற்பாட்டாளர்
ஜகபர் அலிக்கு வீரவணக்கம்

அவரின் படுகொலைக்கு நீதிகேட்டு  போராடுவோம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் காட்டுபாவா பள்ளிவாசல் அருகில் உள்ள வெங்களூர் என்ற கிராமத்தை சார்ந்தவர் ஜகபர் அலி.

சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டவர். தொடர்ச்சியாக கனிமவளக்கொள்ளைக்கு எதிராக போராடி வந்தவர். காட்டுபாவா பள்ளிவாசல் அருகில் உள்ள மெய்யப்புரத்தில் விதிமீறி செயல்பட்ட கல்குவாரியால் வீடுகள், தேவாலயம் பாதிக்கப்பட்டதை அடுத்து பெண்கள் போராட்டத்தில் இறங்கினர். பல கட்ட போராட்டங்களுக்குப்பிறகு அந்த கல்குவாரி செயல்பட அதிகாரிகள் தடைவிதித்தனர்.

மெய்யப்புர போராட்டத்தில்  பெண்களை வழிநடத்தியவர் தோழர் ஜகபர் அலியாவார். அதேபோல அருகில் உள்ள லட்சுமிபுரத்தில் சட்டவிதிகளை காற்றில் பறக்கவிட்டு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய கல்குவாரிக்கு எதிராக நீதிமன்ற படிக்கட்டுகளை தட்டி ஒட்டுமொத்தமாக புதுக்கோட்டையில் செயல்பட்ட கல்குவாரிகளுக்கு தடை உத்தரவு பிறப்பிக்க காரணமாக இருந்ததால் தோழர் ஜகபர் அலி கல்குவாரி மாபியாக்களின் கோபத்திற்கு ஆளானார்.

சமீபத்தில் வரம்பற்றமுறையில் கனிமவளங்களை ஒரே இடத்தில் குவித்து வைத்திருந்த கனிமவள கொள்ளையர்களுக்கு எதிராக ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் செய்து போராடி வந்தார்.

இந்நிலையிலேயே  17.01.25 வியாழனன்று  தொழுகை முடித்து தமது இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த தோழர் ஜகுபர் அலி மீது மணல் ஜல்லி உள்ளிட்ட கனிம வளங்களை ஏற்ற பயன்படுத்தப்படும் டிப்பர் லாரியை  வைத்தே  அதிவேகமாக மோதி அவரை படுகொலை செய்துள்ளனர்.

சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டு அவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற   மனிதகுலத்திற்கான பணியில் இறுதிவரை போராடி தன் உயிரையே தியாகம் செய்துள்ளார் தோழர் ஜகபர் அலி.

தோழர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த  கல்குவாரி கருத்துக்கேட்பு கூட்டங்களிலும், லஞ்சம்பெற்றுக்கொண்டு கல்குவாரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கும் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை சியா  அலுவலக அதிகாரிகளை கண்டித்து  நடைபெற்ற  முற்றுகை போராட்டத்திலும் நம்முடன் இணைந்து பங்குகொண்டுள்ளார். அவர் தியாகம் அளப்பறியது. அவருக்கு வீரவணக்கம் செய்வோம். அவரை படுகொலை செய்தவர்கள் மீது குண்டர்சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்வரை வீதிகளில் இறங்கி போராடுவோம்.

-கம்பூர் செல்வராஜ்,
கனிமவளக்கொள்ளைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு மற்றும்
இயற்கைவள பாதுகாப்பு இயக்கம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க