சத்தீஸ்கர்: தொடர்கதையாகும் புல்டோசர் பயங்கரவாதம்

சத்தீஸ்கரிலும் பாசிச பா.ஜ.க. கும்பல் ஆட்சியைக் கைப்பற்றியது முதல் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

டந்த ஜனவரி 20-ஆம் தேதி பா.ஜ.க. ஆளும் சத்தீஸ்கர் மாநிலம் குர்ஜா மாவட்டத்தின் அம்பிகாபூர் பகுதியில் வனநிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி அறுபது இஸ்லாமிய மக்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளியுள்ளது காவி கும்பல்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்லாமியத் தலைவர் குலாம் முஸ்தபா, “வன நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டது என்று கடந்த ஜனவரி 17-ஆம் தேதி மாலை அறுபது வீடுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நாங்கள் வீடுகளை இடிப்பதற்குத் தடை கோரி உயர்நீதிமன்றத்தை நாடினோம். ஆனால், ஜனவரி 20-ஆம் தேதி வரை அதனை எங்களால் பெற முடியவில்லை அதனால் எங்கள் வீடுகள் இடிக்கப்பட்டுவிட்டன” என்று தெரிவித்துள்ளார்.

வீடுகளை இடிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ஆளும் பா.ஜ.க-வைச் சேர்ந்த மாநில வனத்துறை அமைச்சர் கேதார் காஷ்யப் சுர்குஜா குர்ஜா மாவட்டத்திற்குச் சென்று வனநிலத்தை ஆக்கிரமித்துள்ள வீடுகள் அகற்றப்படும் என்று தெரிவித்த பிறகே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் இரண்டு பத்தாண்டுகளுக்கு முன்பாக ஜார்கண்ட், பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து வாழ்வாதாரத்திற்காக வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆவர்.

இதுகுறித்து முஸ்தபா என்பவர் கூறுகையில் “ஆக்கிரமிப்பு என்கிற பெயரில் இடிக்கப்பட்ட வீடுகள் அனைத்தும் இஸ்லாமிய மக்களின் வீடுகள் ஆகும். அப்பகுதிக்கு மேலே சென்றால் தலித்துகள் மற்றும் பிற சமூகத்தினர் வசிக்கின்றனர். ஆனால் இஸ்லாமிய மக்களின் வீடுகள் மட்டுமே இடிக்கப்பட்டன” என்று தெரிவித்திருப்பது சிறுபான்மை மக்கள் மீதான பாசிச கும்பலின் அடக்குமுறைகளை அம்பலப்படுத்துகிறது.

வீடுகள் இடிக்கப்பட்ட நிலம் வனப்பகுதிக்குச் சொந்தமானது என்பதை இஸ்லாமியத் தலைவர்கள் ஒப்புக்கொண்டாலும், மற்ற ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்காமல், இஸ்லாமிய மக்களின் வீடுகளை மட்டும் ஏன் நிர்வாகம் இடித்தது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனையடுத்து, வீடு இடிக்கப்பட்ட மறுநாளான ஜனவரி 21 அன்று, உள்ளூர் இஸ்லாமியக் குழுவான ராசா ஒற்றுமை அறக்கட்டளை, குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் உள்பட வீடற்ற மக்களுக்குத் தங்குமிடம், உணவு, தண்ணீர் மற்றும் தற்காலிக ஏற்பாடுகளைச் செய்யக்கோரி சர்குஜா மாவட்ட ஆட்சியருக்கு குறிப்பாணையை அனுப்பியது. அதில் “சமீபத்திய புல்டோசர் நடவடிக்கை பல ஏழைக் குடும்பங்களை வீடற்றவர்களாக ஆக்கியுள்ளது என்பதை நாங்கள் கவனத்தில் கொள்ள விரும்புகிறோம். இந்த குடும்பங்களில் அப்பாவி குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், பெண்கள் உள்ளனர். இந்த குளிர்ந்த குளிர்காலத்தில் அவர்கள் திறந்தவெளியில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அம்மக்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குவது நிர்வாகத்தின் பொறுப்பாகும். மேலும், பெண்கள் குழந்தைகளை சமூக மையங்களில் தங்க அனுமதிக்க வேண்டும்” என்று அந்த குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மாநில பா.ஜ.க. அமைச்சர் ஓ.பி. சவுத்ரி, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வங்காள மொழி பேசுவதாகக் கூறி தற்போதும் இஸ்லாமிய மக்களின் மீது வெறுப்பைக் கக்கியுள்ளார்.


படிக்க: வேங்கைவயல் ஆர்ப்பாட்ட அனுமதி மறுப்பு – திமுக-வின் சாதியப் போக்கு


இருப்பினும் காங்கிரஸ் தலைவர் ஷபி அகமது, “ஒன்றியத்திலும் மாநிலத்திலும் பா.ஜ.க. ஆட்சி இருக்கும்போது வங்கதேச ஊடுருவல்காரர்கள் எப்படி நுழைந்தார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “‘ரோஹிங்கியா’ என்று கூறப்படும் இஸ்லாமியக் குடியிருப்பாளர்கள் மீதான குற்றச்சாட்டுகள் மீது ஒரு விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், அக்குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. எனவே, இந்த குடியிருப்பாளர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து நிர்வாகம் மீண்டும் விசாரணை நடத்தவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பாசிச கும்பல் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது முதல் சிறுபான்மை மக்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மசூதிகள் இந்து கோவில்களை இடித்துக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி வழக்கு தொடர்வது; ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இஸ்லாமிய மக்களின் வீடுகளை இடிப்பது; பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இஸ்லாமிய மக்களின் வீடுகள் மீது தொடர்ச்சியான புல்டோசரை ஏவுவது; பசுவைக் கொன்றதாகப் பொய்யான குற்றச்சாட்டுகளின் மூலம் முஸ்லீம் மக்களைப் படுகொலை செய்வது என இஸ்லாமிய மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவையெல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு புல்டோசர் ராஜ்ஜியத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அதேபோல் சத்தீஸ்கரிலும் பாசிச பா.ஜ.க. கும்பல் ஆட்சியைக் கைப்பற்றியது முதல் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. மறுபுறம் கார்ப்பரேட்களின் கனிமவள கொள்ளைக்காக மாவோயிஸ்ட்கள் என்கிற பெயரில் பழங்குடி மக்களைப் படுகொலை செய்து வருவதும் இங்கே கவனிக்கத்தக்கது. எனவே பாசிச கும்பலுக்கு எதிராகச் சிறுபான்மை மக்கள், பழங்குடியின மக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டியுள்ளது. அதன்மூலமே பாசிச கும்பலை வீழ்த்தி உழைக்கும் மக்களுக்கான அரசை உருவாக்க முடியும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க