தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டத்தில் உள்ளது பொட்டலூரணி கிராமம். இந்த ஊரைச் சுற்றியுள்ள மானாவாரி விவசாய நிலங்களில் கழிவு மீன்களை மூலப்பொருளாகக் கொண்டு இயங்கும் மூன்று நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உற்பத்தி நடக்கும் நேரங்களில் மக்கள் வாழ முடியாத அளவிற்குக் கொடிய நாற்றம் வீசுகிறது; இரவு நேரத்தில் தூங்கவே முடியாது. நிலம் நீர் காற்று மாசுபடுகின்றன. கழிவு நீரை, டேங்கர் லாரிகளில் கொண்டுவந்து இரவு நேரங்களில் ரவுடிகளின் துணையோடு குளங்களிலும் விவசாய நிலங்களிலும் ஊற்றிவிடுகின்றனர். முதலில் தொடங்கப்பட்ட நிறுவனத்தை மூடச்சொல்லும் மக்கள் கோரிக்கை நிலுவையில் இருக்கும்போதே, மக்களிடம் எந்தக் கருத்துக் கேட்பும் நடத்தாமல் மற்ற இரு நிறுவனங்களுக்கும் அரசு அலுவலர்கள் அனுமதி கொடுத்துள்ளனர். சுற்றுச்சூழலைக் கெடுத்துவரும் இந்த மூன்று கழிவுமீன் நிறுவனங்களையும் மூடக் கோரி நான்கு ஆண்டுகாலமாகப் பல்வேறு வகையான போராட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றனர்.
இந்தப் பொட்டலூரணி கிராமம் எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமமாகும். எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சியில், எல்லைநாயக்கன்பட்டி, தெய்வச்செயல்புரம், செட்டிமல்லன்பட்டி, பொட்டலூரணி என்ற நான்கு கிராமங்கள் உள்ளன. இந்த நான்கு கிராமங்களில் பொட்டலூரணி மட்டுமே சரிபாதி மக்கள்தொகையைக் கொண்ட கிராமமாகும். இவ்வளவு பெரிய கிராமமாக இருந்தபோதிலும் பொட்டலூரணியில் கிராமசபைக் கூட்டத்தை நடத்தாமல் இன்றளவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் உள்ளாட்சித் துறையினரும் புறக்கணித்து வருகின்றனர். பொட்டலூரணியில் கிராமசபைக் கூட்டத்தை நடத்தினால் கழிவுமீன் நிறுவனங்களை மூடச் சொல்லும் தீர்மானத்தைக் கொண்டுவந்து தீர்மானப் பதிவேட்டில் பதியச் சொல்வார்கள் என்பதால் இன்றளவும் புறக்கணித்துவருகின்றனர்.
பொட்டலூரணியில் கிராமசபைக் கூட்டத்தை நடத்தச் சொல்லி ஆட்சியர் முதல் தலைமைச் செயலாளர், முதலமைச்சர் வரை பலமுறை கோரிக்கை வைத்தும், பொட்டலூரணியின் ஒட்டுமொத்த ஊராட்சி உறுப்பினர்களும் ராஜினாமா செய்தும் கண்டுகொள்ளவில்லை. அனைவரும் கழிவுமீன் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் மக்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றனர். பொட்டலூரணி மக்கள் எவ்வளவோ கேட்டும் குடியரசு தினமான இன்று நடக்கும் கிராமசபைக் கூட்டத்தையும் செட்டிமல்லன்பட்டியில் வைத்துள்ளனர்.
எனவே பொட்டலூரணியில் கிராம சபைக் கூட்டம் நடத்துவதைப் புறக்கணித்துவரும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும் பாராமுகமாக இருந்துவரும் தமிழ்நாட்டரசைக் கண்டித்தும் பொட்டலூரணி கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும் சுவரொட்டி ஒட்டியும் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
தொடர்பிற்கு:
ஈ. சங்கரநாராயணன்,
9965866114

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
Super