10.02.2025
கிருஷ்ணகிரி: எட்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை!
அரசே முதன்மைக் குற்றவாளி!
பத்திரிகை செய்தி
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா, மத்தூர் கிராமத்தின் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி, அதே பள்ளியைச் சார்ந்த மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி, கடந்த ஒரு மாத காலமாக பள்ளிக்கு வராமல் இருந்துள்ளார். பள்ளியின் தலைமையாசிரியர் நேரடியாக மாணவியின் வீட்டிற்கு சென்று விசாரித்தபோதுதான், பள்ளி ஆசிரியர்களால் அம்மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்துள்ளது. அதன் காரணமாக அம்மாணவி கருத்தரித்து, கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பம். இவ்விசயம் வெளியில் தெரிந்தால் மானம் போய்விடும் என்று அஞ்சி வெளியில் சொல்லாமல் இருந்துள்ளனர்.
அதன் பின்னர், பாலியல் குற்றவாளிகளான பாரூரைச் சேர்ந்த சின்னசாமி (57), மத்தூரைச் சேர்ந்த ஆறுமுகம் (48), வேலம்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் (37) ஆகிய மூன்று ஆசிரியர்கள் மீதும் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது இந்த மூன்று குற்றவாளிகளும் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மக்கள் அதிகாரம் தோழர்கள் நேரில் சென்று விசாரித்தனர். அந்தவகையில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தது.
பாலியல் குற்றவாளியான சின்னசாமி குடிபோதைக்கு அடிமையானவன் என்றும், பள்ளிக்கு குடிபோதையில் வந்து வகுப்புகள் எடுப்பான் என்றும் மக்கள் கூறுகின்றனர். மற்றொரு குற்றவாளியான ஆறுமுகம் ஏற்கெனவே பணிபுரிந்துவந்த பள்ளியில் பாலியல் ரீதியான ஒரு குற்றத்திற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அதன் பின்னர் மத்தூர் நடுநிலைப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளான் என்ற அதிர்ச்சிகரமான தகவலையும் மக்கள் கூறினர்.
ஒரு ஆசிரியரால் குடித்துவிட்டு சர்வசாதாரணமாக பள்ளிக்கு வரமுடிகிறது, இன்னொருவன் ஏற்கெனவே பாலியல் குற்றமிழைத்தவன் என்றாலும், அவன் மீண்டும் ஆசிரியராக பணிபுரிய முடிகிறது என்றால், மாணவிகளின் பாதுகாப்பில் அரசு நிர்வாகம் எந்தளவிற்கு அலட்சியமாக இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.
இதனையடுத்து, சம்பத்தபட்ட மத்தூர் நடுநிலைப்பள்ளிக்கு ஆசிரியைகளை மட்டும் பணியில் நியமிக்க வேண்டும் என்று கூறி, பெற்றோர்கள் ஒருவார காலமாக தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தியுள்ளனர். குற்றவாளிகளை நீதிமன்றம் தண்டிக்கும் என்ற எந்த நம்பிக்கையும் மக்களுக்கு இல்லை. “குற்றவாளிகளை எங்களிடம் ஒப்படையுங்கள், நாங்கள் தண்டனை கொடுக்கிறோம்” என்று தங்களின் உணர்வை வெளிப்படுத்துகின்றனர்.
இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ள இத்தருணத்தில், சேலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றிவந்த சிவக்குமார் என்பவன், மாணவி ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
அதேபோல், திருச்சியில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகள் 4-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி பள்ளியை சூறையாடியுள்ளனர்.
இதே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில், பர்கூர் அருகே கந்திகுப்பம் பகுதியிலுள்ள கிங்ஸ்லி கார்டன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில், அதிகாரிகளின் உடந்தையோடு போலி என்.சி.சி. முகாம் நடத்திய நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் பல மாணவிகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய கொடூர சம்பவம் வெளிவந்து கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி, கோவை பொன்தாரணி.. என பள்ளி மாணவிகள் மீது தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் நிகழ்த்தப்படும் கொடூரங்கள் அனுதினமும் செய்திகளாக வெளிவந்து நம்மை பதபதைக்க வைக்கின்றன. மாணவர்களுக்கு அறத்தை, மனிதத்தை, ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய பள்ளிகள், இன்றைக்கு குடிகாரன்களும், பாலியல் பொறுக்கிகளும் ஆசிரியர்கள் என்ற போர்வையில் எந்தவித அச்சமுமின்றி குற்றங்கள் செய்யும் இடங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. இதற்கு அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்று விதிவிலக்கு இல்லை. இது எத்தகைய ஆபத்தான நிலைமை?
ஆனால், தி.மு.க. அரசும், அதிகாரிகளும் மெத்தனமாக உள்ளனர். ’தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக உள்ளது’ என்று கதைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒருபக்கம் குற்றத்தை தூண்டிவிடும் போதைப்பொருட்களை டார்கெட் வைத்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம், இத்தகைய கேடுகெட்ட பாலியல் வெறியர்கள் அரசுப் பதவிகளில் இருப்பவர்கள் என்பதால் இடைநீக்கம், பணியிட மாற்றம் என்ற பெயரில் அரசே காப்பாற்றி வைத்துக் கொண்டிருக்கிறது. அவர்களோ தைரியமாக குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.
இன்றைக்கு மக்கள் போராட்டங்களில் இறங்கிய பிறகு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குற்றவாளிகளின் கல்வித்தகுதி ரத்து செய்யப்படும் என்கிறார். ஆனால், இதற்கான தீர்வை நோக்கி நகர அரசு தயாராக இல்லை. இச்சம்பவங்களுக்கு பொறுப்பேற்று அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.
உண்மையில், மக்களாகிய நாம்தான் தட்டிக்கேட்க வேண்டும். ஒன்றுதிரண்டு போராட வேண்டும். இல்லாவிட்டால், ஒன்றிரண்டு நடவடிக்கைகளை பெயருக்கு எடுத்துவிட்டு அதிகார வர்க்கம் வழக்கைக் கிடப்பில் போட்டுவிடும். அவர்களுக்கு மாணவிகளின் பாதுகாப்பில் உண்மையாக அக்கறையெல்லாம் கிடையாது.
ஆபாச சினிமாக்கள், பத்திரிகைகள், இணையதளங்கள், கஞ்சா உள்ளிட்ட போதைகள் தடை செய்யப்பட வேண்டும்; டாஸ்மாக்கை மூட வேண்டும்; பள்ளி, கல்லூரி, அரசுப் பதவிகளில் வேலை செய்பவர்கள் பாலின சமத்துவம் தொடர்பான புரிதல் கொண்டவர்களாக, கண்ணியமிக்கவர்களாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் நிர்வாக அமைப்பை உருவாக்க வேண்டும்; பள்ளிகளில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்களை உள்ளடக்கிய சங்கங்களை அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் போராட்டங்களை உடனடியாக கட்டியமைக்க வேண்டிய தேவை உள்ளது.
நமது பிள்ளைகளுக்கு எந்தப் பாதுகாப்பும் இந்த அரசுக் கட்டமைப்பில் இல்லை. உண்மையில் குற்றவாளிகளுக்குத்தான் பாதுகாப்பு உள்ளது. குற்றவாளிகளை உருவாக்கும் வேலையைத்தான் இந்தக் கட்டமைப்பு செய்கிறது. அதற்கான எல்லா வாய்ப்புகளையும் இந்தக் கட்டமைப்பு உருவாக்குகிறது.
பெண்களை சகமனிதர்களாக மதிக்கின்ற, பாலின சமத்துவத்தை உணர்வுபூர்வமாக செயல்படுத்துகின்ற, அத்தகைய விழுமியங்கள் கொண்ட பண்பாட்டை சமூகத்தில் பற்றிப் பரவச் செய்கின்ற மாற்றுக் கட்டமைப்பை உருவாக்குவதே நிரந்தரமான தீர்வு.
தோழமையுடன்
தோழர் இரஞ்சித்,
கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.
8754674757
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram