தூத்துக்குடி – வெம்பூர்: “வேண்டாம் சிப்காட்; வேண்டும் விவசாயம்”

”சுமார் 17 நீர்நிலைகள் அழிக்கப்படும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு அரசு உதவ வேண்டுமே தவிர, இப்படி அவர்களிடம் உள்ள ஒன்று அல்லது இரண்டு ஏக்கர் நிலங்களைப் பறிப்பது நியாயம் கிடையாது.”

கருத்துக் கேட்புக் கூட்டம் எனும் அரசின் கபட நாடகமும்,
”வேண்டாம் சிப்காட்; வேண்டும் விவசாயம்”
எனும் மக்களின் உறுதியான கருத்தும்!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்டம் வெம்பூரில் சுமார் 2,700 ஏக்கரில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்காக வெம்பூர், மேலக்கரந்தை, கீழக்கரந்தை, விளாத்திகுளம் வட்டம் பட்டிதேவன்பட்டி ஆகிய கிராமங்களின் மானாவாரி நிலங்களைக் கையகப்படுத்தப்படும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மக்களின் 2,700 ஏக்கர் விவசாய நிலத்தைப் பிடுங்கி முதலாளிகள் தொழில் செய்ய சிப்காட் அமைக்கும் திட்டத்தை முடிவு செய்து, எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதற்காகவே தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு, சுமார் 11 வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டு சிப்காட் தொழில் பூங்காவுக்குரிய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான அலுவலகம் சார்ந்த பணிகள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு மாடியிலும் சில கிராமங்களின் பெயர்கள் எழுதப்பட்டு அதன்படி பிரித்தொதுக்கி பணிகள் நடைபெற்று வருகிறது.

சிப்காட் அமைக்கும் பணி தொடங்கப்படும் என்கிற செய்தியை இதற்கு முன்னர் கேள்விப்பட்டு மக்கள் வந்த போது ”யார் சொன்னார்கள் சிப்காட் வருகிறது என்று. இதுபோல் தவறான தகவலுடன் வந்தால் வழக்குப் போடுவோம்” என மிரட்டியது அதிகார வர்க்கம். இன்று அதே அலுவலகம் மக்களின் நிலங்களைக் கையகப்படுத்த மாஃபியா கும்பல்களைப் போல வேலை செய்து கொண்டிருக்கிறது.

இதற்கிடையே, சிப்காட் தொழில் பூங்காவுக்குத் தனியார் தரிசு நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்களைக் கையகப்படுத்திச் செயல்படுத்த வேண்டும். மானாவாரி நிலங்களைக் கையகப்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நிலம் கொடுப்பதற்கு ஆட்சேபனை தெரிவித்த விவசாயிகளிடம் 28/02/2025 அன்று கருத்துக் கேட்பு கூட்டம் எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்டது.

இதில், பங்கேற்க வெம்பூர், இராமசாமி புரம், பட்டிதேவன்பட்டி, மேலக்கரந்தை, கீழக்கரந்தை உள்ளிட்ட கிராமங்களிலிருந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் டிராக்டரில் திரண்டு வந்தனர். சிப்காட் தொழில் பூங்காவுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி பாரதி மணிமண்டபத்திலிருந்து ஊர்வலமாக கோசமிட்டவாறு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.

தொடர்ந்து நடந்த கூட்டத்துக்கு தனி மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) ரேவதி தலைமை வகித்தார். கோட்டாட்சியர் மகாலட்சுமி, டி.எஸ்.பி. அசோகன், வட்டாட்சியர் சுபா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கலந்து கொண்ட விவசாயிகள் பேசுகையில், “எங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் மானாவாரி நிலங்களே போதும். சிப்காட் தொழில் பூங்கா தேவையில்லை. மேலும், சிப்காட் அமைக்க மானாவாரி நிலங்களைக் கையகப்படுத்தும்போது, அதனருகே உள்ள நீரோடைகளும் அழிக்கப்படும்.

விவசாயம் பாழாவது மட்டுமின்றி நிலத்தடி நீரும் இல்லாமல் போய்விடும். கால்நடைகளும் தண்ணீர் இன்றி மடியும் நிலை ஏற்படும். அதனால் எங்களுக்கு சிப்காட் தொழில் பூங்கா வேண்டாம்” என்றனர்.

மேலும், தங்களது கோரிக்கை தொடர்பான மனுவையும் வழங்கினர்.

மக்களின் கருத்துகளைக் கேட்ட டி.ஆர்.ஓ. ரேவதி, “உங்களது கருத்துகள், மனுக்களை வாங்கியுள்ளோம். அடுத்து என்ன செய்யலாம் எனப் பார்த்துவிட்டுக் கூறுகிறோம். அனைவரது உணர்வுகளையும் நாங்கள் புரிந்துள்ளோம்” என்றார்.

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன் கூறும்போது, “வெம்பூரில் சிப்காட் அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மக்கள் குறைதீர்க்கும் நாளில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம். ’காலம் காலமாக விவசாயம் செய்து, அதில் எந்தவித பலனையும் நீங்கள் பார்த்து இல்லை. விவசாயிகளின் சந்ததியினருக்கு உதவும் நோக்கில், வெம்பூரில் சிப்காட் அமைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதனால் சுற்றுவட்டார இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இந்த பகுதி தொழில் வளர்ச்சி அடையும் என்ற நோக்கிலேயே அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அதனால், விவசாயிகளாகிய நீங்கள் உங்களது நிலத்தைக் கொடுத்தால் உங்கள் சந்ததியினருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது’ என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். அதற்கு விவசாயிகள் கடந்த 2020-ஆம் ஆண்டு மேலக்கரந்தையில் காற்றாலை உதிரிப் பாகம் தயாரிப்பு நிறுவனம் சுமார் ரூ.300 கோடி திட்ட மதிப்பீட்டில் கொண்டு வரப்பட்டது. இதில், முத்துலாபுரம் குறுவட்டத்துக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு முன்னுரிமையில் அடிப்படையில் சுமார் 1,300 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், இப்பகுதி வளர்ச்சி அடையும் எனக் காற்றாலை உதிரிப் பாகம் தொடங்கும் போது அப்போதைய அரசு தெரிவித்தது. இதனை நம்பி சுமார் 800 ஏக்கர் விவசாய நிலங்கள் கொடுக்கப்பட்டன.

ஆனால், இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு இந்த 4 ஆண்டுகளில் முத்துலாபுரம் குறுவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களில் ஒருவருக்கு கூட வேலை வாய்ப்பு அளிக்கவில்லை. இங்கு வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களே பணிபுரிகின்றனர். இந்த நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்காகச் சென்றால், வெளிமாநிலங்களில் உள்ள தங்களது நிறுவனத்தில் வேலை இருப்பதாகக் கூறுகின்றனர். இதே போல் தான் தற்போது சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்காக வாக்குறுதி அளிக்கப்படுகிறது. அரசின் மாயாஜால வாக்குறுதிகளை நம்புவதற்கு விவசாயிகள் தயாராக இல்லை” என்று அவர் கூறினார்.

த.மா.கா வடக்கு மாவட்ட தலைவர் என்.பி.ராஜகோபால் கூறுகையில், “கடந்த 2020-ஆம் ஆண்டு வெம்பூரில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க அப்போதைய அரசு நடவடிக்கை எடுத்தது. விவசாயிகள் எதிர்ப்பு காரணமாக சிப்காட் வேம்பார் பகுதிக்கு இடம் மாற்றப்பட்டது. வேம்பாரில் 1,200 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அதில் சிப்காட் அமைக்க நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் தற்போது மீண்டும் வெம்பூர் பகுதியில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தொழில் வளர்ச்சியை நாங்கள் தடுக்கவில்லை. அதற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். வெம்பூர் பகுதியிலேயே ஏராளமான கார்பரேட் கம்பெனிகளின் தரிசு நிலங்கள் உள்ளன. அரசு புறம்போக்கு நிலங்களும் உள்ளன. அவற்றை விடுத்து விவசாய நிலங்களைக் கையகப்படுத்தப் போகிறோம் என்பது விவசாயத்தை அழிக்கும் செயலாகத் தான் பார்க்க முடிகிறது.

இதில், சுமார் 17 நீர்நிலைகள் அழிக்கப்படும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு அரசு உதவ வேண்டுமே தவிர, இப்படி அவர்களிடம் உள்ள ஒன்று அல்லது இரண்டு ஏக்கர் நிலங்களைப் பறிப்பது நியாயம் கிடையாது. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். எதிர்ப்பை மீறி இத்திட்டம் செயல்படுத்த முயன்றால், விவசாயிகள், அனைத்து இயக்கங்கள், ஜனநாயக சக்திகளைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார்.

கருத்துக் கேட்புக் கூட்டம் எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தின் 2-வது மாடியில் நடத்தப்பட்டது. கூட்டம் நடக்கும் இடத்துக்கு ஏறிச் செல்ல விவசாயிகள், பெண்கள் சிரமப்பட்டனர். மேலும், 2-வது மாடியிலிருந்த அறையும் சிறியதாகவே இருந்தது. இதனால் சிலர் அடுத்துள்ள அறையில் அமர வைக்கப்பட்டனர். பல பேர் நின்று கொண்டிருந்தனர். மைக் வேலை செய்யவில்லை, தண்ணீர் கிடையாது.

திட்டம் மக்களின் நலனுக்காக என்றால் விவசாயிகளிடம் கருத்துக் கேட்க வேண்டும் என்றால் அதை அம்மக்கள் வசிக்கும் கிராமங்களில் சென்று கேட்க வேண்டும். பல கிலோமீட்டர் மக்களை வரவழைத்து மனுவை வாங்கிக் கொண்டு மேலோட்டமான, ”பரிசீலிக்கிறோம்” என்ற பதிலைச் சொல்லி மக்களை அனுப்பி வைக்கிறது அதிகார வர்க்கம். ஆனால் மக்கள் எச்சரித்து விட்டுத்தான் திரும்பியுள்ளனர்.

மக்கள் கம்பீரமாக டிராக்டரில் வட்டாட்சியர் அலுவலகம் நோக்கி வருவதைப் பார்க்கையில், டெல்லியில் விவசாயிகளின்  டிராக்டர் பேரணி நடத்தியதன் மினியேச்சர் வடிவத்தைப் பார்ப்பது போல் இருந்தது.

அதிகார வர்க்கம் போலீசை குவித்து வைத்திருந்தாலும், மக்களின் முதுகில் குத்துவதற்குச் சதி செய்தாலும் அதை முறியடிக்க மக்கள் கையிலெடுக்கும் ஆயுதம் ”போராட்டம்”.  அந்த களப் போராட்டத்தின் முன்னோட்டமான குரல் பதிவே, ”எங்களுக்கு சிப்காட் வேண்டாம்; விவசாயம் வேண்டும்” என்பதாகும்.

பதிவு
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram