தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட அரியநாயகிபுரம் கிராமத்தில் செங்கல் சூலையில் வேலை செய்யும் தங்க கணேஷ், மாலதி தம்பதியின் மூத்த மகனான தேவேந்திரராஜா பாளையங்கோட்டை அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று (10/03/25) காலை 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத அரியநாயகி புரத்தில் இருந்து பேருந்தில் சென்ற பறையர் சாதியைச் சேர்ந்த தேவேந்திரராஜாவை பக்கத்து ஊரான கெட்டியம்மாள்புரம் கிராமத்தில் உள்ள தேவர் சாதியைச் சேர்ந்த மூன்று பேர் (18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள்) கெட்டியம்மாள்புரம் கிராமத்தில் பேருந்து நிற்கும் போது பேருந்திலிருந்து இறக்கி, அருகிலிருந்த பேருந்து நிறுத்தம் அருகே கூட்டிச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் தலையில் பலத்த காயமும், முதுகில் பல இடங்களில் வெட்டப்பட்டும், இடது கையில் 3 விரல்கள் துண்டிக்கப்பட்டும், வலது கை மணிக்கட்டில் வெட்டப்பட்டும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தேவேந்திரராஜா அனுமதிக்கப்பட்டார். தற்போது ஆபரேஷன் முடிந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நடந்த சம்பவம் கேள்விப்பட்டு மக்கள் அதிகாரம் சார்பாக தோழர் கின்ஷன் மற்றும் தோழர்கள் மருத்துவமனைக்குச் சென்று, தேவேந்திர ராஜாவின் அப்பா தங்க கணேஷ் அவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தோம்.
கடந்த மாதம் நடைபெற்ற கபடி போட்டியில் கெட்டியம்மாள்புரம் அணியை, அரியநாயகிபுரம் அணி வென்றுள்ளது. கபடி விளையாட்டில் ஆர்வமுடைய தேவேந்திரராஜா இந்த போட்டியில் கலந்து கொண்டார். வெற்றியைக் கொண்டாடியுள்ளார். இதனை சாதி ரீதியாகப் பார்த்த, ஆதிக்கச் சாதி வெறி தலைக்கேறிய மேற்கண்ட மூவரும் இன்று தேவேந்திரராஜாவை பைக்கில் பின்தொடர்ந்து சென்று வெட்டியுள்ளனர்.
தென்மாவட்டங்களில் சாதி வெறி தாக்குதல்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. நாங்குநேரி சின்னதுரை வெட்டப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்வை உண்டாக்கியது. ஆனால் கைது, மருத்துவ சிகிச்சை ஆகியவற்றைத் தாண்டி அரசு நிர்வாகம், சாதிவெறியைத் தடுக்க இப்பகுதியில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இதுபோன்ற சாதிவெறித் தாக்குதல்கள் தற்போதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.
இந்த சாதிவெறி தாக்குதலுக்கு எதிரான அரசின் நடவடிக்கையும் பத்தோடு பதினொன்றாக நடந்து முடிந்து விடும் என்பதாகவே நிகழ்வுகள் காட்டுகின்றன. இதைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு எடுப்பதாகத் தெரியவில்லை. பாதிக்கப்பட்டோர், ஜனநாயக சக்திகள், போராடும் அமைப்புகள் ஓரணியில் திரண்டு களமிறங்கி, முற்றிலும் சாதிரீதியான வன்கொடுமைகள் நடப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.
பதிவு
மக்கள் அதிகாரம்
நெல்லை மண்டலம்
93853 53605
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram