திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் ஆடு பலியிடுவதை எதிர்த்து இந்து முன்னணி-பா.ஜ.க. கும்பல், மதுரை போலீசு மேற்கொண்டுவரும் கலவர முயற்சிகளைத் தொடர்ந்து அக்கும்பலின் நடவடிக்கைகளை முறியடிக்கும் விதத்தில், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் தொடர்ச்சியாக போராடி வருகின்றன.
★ இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தைத் தடுக்கவும் மதுரையில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தியும், “மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு” சார்பாக மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, பிப்ரவரி 3-ஆம் தேதியன்று, அக்கூட்டமைப்பு சார்பாக, ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் செஞ்சட்டையுடன் எமது தோழர்கள் திரளாக கலந்துகொண்டு உரையாற்றியது ஜனநாயக சக்திகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்தது.

★ குறிப்பாக, பிப்ரவரி 4-ஆம் தேதி இந்துமதவெறிக் கும்பலின் பொய்ப் பிரச்சாரங்களை அம்பலப்படுத்தும் விதமாக, மதுரையில் இயங்கிவரும் மக்கள் கலை இலக்கியக் கழகம், மக்கள் அதிகாரம் அமைப்புகளின் சார்பாக, திருப்பரங்குன்றம் மக்களிடம் கருத்து கேட்டு வெளியிடப்பட்ட காணொளி மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. திருப்பரங்குன்றத்தில் மக்கள் மத ஒற்றுமையுடன் பழகிவரும் உண்மையைப் போட்டுடைத்தது. பல, சமூக ஊடகங்கள், இந்தக் காணொளியைத் தமது சொந்தக் காணொளியாக எடுத்துப் பரப்பின. இவை பத்து லட்சக்கணக்கான மக்களிடம் சென்று சேர்ந்தது. புரட்சிகர அமைப்புகளின் இந்த முன்முயற்சிமிக்க நடவடிக்கையானது, இந்துமதவெறிக் கும்பலின் பிரச்சாரத்தைக் கேள்விக்குள்ளாக்கியது. பிப்ரவரி 4-ஆம் தேதி எச்.ராஜா கிளப்பிய மதவெறிக் கூச்சலை இந்தப் பரப்புரை மட்டுப்படுத்தியது என்றால் அது மிகையல்ல.
இத்துடன், இந்தப் பிரச்சினையை விளக்கி, மக்கள் அதிகாரம் தோழர் சிவகாமு தமக்கேயுரிய மதுரை வட்டார வழக்கில் வெளியிட்ட காணொளி பல்லாயிரக்கணக்கான மக்களிடம் வீச்சாகப் பரவியது. தோழரின் உரையானது, மக்களின் இறைச்சி உண்ணும் உணவுப் பழக்கத்தைத் தடுக்க மார்வாடி-சேட்டுகளின் ஆதரவில் இந்து முன்னணி கும்பல் களமிறங்கியிருப்பதைக் கூர்மையாக அம்பலப்படுத்தியது.
★ சிக்கந்தர் தர்காவில் ஆடு பலியிடுவதைத் தடுத்து அந்த இடத்தை, ‘தாவா’க்குரிய இடமாக மாற்றிடும் சதி என்பது நீண்ட நாட்களாக திட்டமிட்டு நடந்த சதியாகும். அரசு அதிகாரத்தில் ஊடுருவியுள்ள அதிகாரிகள், மார்வாடி-சேட்டுகள், இந்துமுன்னணி-பா.ஜ.க. கும்பல் திட்டமிட்டு மேற்கொண்ட நடவடிக்கையாகும்.
இசுலாமிய மக்கள் தர்காவில் ஆடு பலியிட்டு வணங்கும் மரபைத் தடுத்து நிறுத்தி, பிரச்சினையைத் தொடங்கி வைத்தது, திருப்பரங்குன்றம் போலீசு ஆய்வாளர் மதுரை வீரன்; அதனை உறுதிப்படுத்தி, இந்து முன்னணி கும்பலுக்கு தீனிப்போட்டது, திருமங்கலம் கோட்டாட்சியர் கண்ணன். இந்தப் பிரச்சினையில் மதக்கலவரத்தைத் தூண்டும் விதத்தில், 144 தடை உத்தரவையும் மீறி இந்து முன்னணி-பா.ஜ.க. மதவெறி கும்பல் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஒப்புதல் கொடுத்தது, தமிழ்நாடு அரசின் தலைமைக் குற்றவியல் வழக்குரைஞர்தான்.
அரசு அதிகார வர்க்கத்தில் ஊடுருவியுள்ள இந்த அதிகாரிகளை அம்பலப்படுத்தும் விதமாக, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், “திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம்” என்று மதவெறிப் பிடித்துக் கொக்கரித்த எச்.ராஜாவைக் கைது செய்யக் கோரியும் மதுரையில் இயங்கிவரும் ம.க.இ.க., பு.மா.இ.மு., மக்கள் அதிகாரம் அமைப்புகள் தலைமையில், ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து, மதுரை போலீஸ் ஆணையரிடமும், சென்னையில் மக்கள் அதிகாரம் தலைமையில், சென்னை போலீஸ் தலைமை இயக்குநரிடமும் பிப்ரவரி 10-ஆம் தேதி மனு கொடுக்கப்பட்டது. இத்துடன், மதக்கலவரத்தைத் தூண்டும் விதத்தில் இந்து முன்னணியால் இணையத்தில் வெளியிடப்பட்ட பாடலை நீக்கக் கோரியும் முறையிடப்பட்டது.
மக்கள் அதிகாரத்தின் இந்த நடவடிக்கையானது ஜனநாயக சக்திகள் பலரும் பிரச்சினையின் பரிமாணத்தை உணர்த்துவதாக இருந்தது.
மக்கள் அதிகாரத்தின் இந்த நடவடிக்கையின் மூலமாகத்தான் ஜனநாயக சக்திகள் பலருக்கும் பிரச்சினையின் பரிமாணம் தெரியவந்தது.
★ எனினும், இந்து முன்னணி-பா.ஜ.க. கும்பலின் மதவெறிப் பிரச்சாரம் ஓயவில்லை. மேலும், மக்கள் அதிகாரத்தின் இம்முயற்சியின் விளைவாக, இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த மதவெறிப் பாடல் உடனடியாக நீக்கப்பட்டிருந்தாலும், மீண்டும் இன்னொரு மதவெறிப் பாடல் வெளியிடப்பட்டது. பா.ஜ.க-வின் மாநில பொதுச்செயலாளர் ராமசீனிவாசன் மதவெறியைத் தூண்டும் வகையில் பேசினார்.
உடனடியாக, இராமசீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மற்றொரு மதவெறிப் பாடலையும் இணையத்தில் இருந்து நீக்கக்கோரியும் பிப்ரவரி 17, 18 தேதிகளில், மதுரையிலும் சென்னையிலும் ஜனநாயக சக்திகளைத் திரட்டி மதுரை மாவட்ட ஆட்சியர், போலீஸ் தலைமை இயக்குநரிடம் மக்கள் அதிகாரம் தோழர்களின் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.
★ மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி, திருப்பரங்குன்றத்தில் பிரச்சாரம் செய்த, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்களைப் போலீசு தடுத்ததைக் கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பாக உடனடியாகக் காணொளி வெளியிடப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில், பூசாரி ஒருவர் ஆடு பலியிட்டு வணங்கியதைச் சேட்டு ஒருவன் திருட்டுத்தனமாக வீடியோ பதிவு செய்து, சமூக ஊடகங்களில் மதவெறிப் பிரச்சாரம் செய்தான். இவனது நடவடிக்கையை உடனடியாக அம்பலப்படுத்தியும், இந்த சேட்டைக் கைது செய்யக் கோரியும் மக்கள் அதிகாரம் சார்பாக காணொளி வெளியிடப்பட்டது.
★ மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை ஒட்டி மதுரை அண்ணாநகர் பகுதியில் பிரச்சாரம் செய்த ம.க.இ.க., மக்கள் அதிகாரம் தோழர்களைத் தடுக்க முயற்சித்தது, மதுரை போலீசு. போலீசின் இந்த நடவடிக்கையைத் தோழர்கள் உறுதியாக எதிர்த்துப் போராடினர். இதன்விளைவாக, அப்பகுதியில் சூழ்ந்திருந்த மக்களும் தோழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கத் தொடங்கினர். இதனால், செய்வதறியாமல் திகைத்த போலீசு பின்வாங்கிச் சென்றது. சரியான அரசியலை முன்வைத்து, உறுதியான தெளிவான போராட்டத்தை மேற்கொள்ளும் போது மக்கள் ஆதரவை வென்றெடுக்க முடியும் என்று தோழர்களின் இந்தப் போராட்ட அனுபவம் உணர்த்தியது. போலீசுடன் தோழர்கள் மேற்கொண்ட போராட்ட காணொளி சமூக ஊடகங்களில் பல்லாயிரக்கணக்கில் பரவியது மட்டுமின்றி, மக்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றது.

புரட்சிகர அமைப்புகளின் அடுத்தடுத்த இந்த நடவடிக்கைகளின் விளைவாக, இணையத்தில் இருந்த மற்றொரு மதவெறிப் பாடலும் நீக்கப்பட்டது மட்டுமின்றி, இந்து முன்னணி கும்பலின் இணையவெளி மதவெறிப் பிரச்சாரம் அடங்கியது.
★ “அரிட்டாப்பட்டியையும் ஜல்லிக்கட்டையும் மீட்டோம்! முருகனை மீட்போம்! கருப்பனைக் காப்போம்!”, “இந்து முன்னணி-பி.ஜே.பி. கும்பலை விரட்டியடிப்போம்!” ஆகிய முழக்கங்களின் கீழ் மக்கள் அதிகாரம் மற்றும் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் திட்டமிடப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக, புரட்சிகர அமைப்புகளின் தோழர்கள் விரிவான பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இந்தப் பிரச்சாரம் தொடங்கியது முதல், “முருகனை மீட்போம்! கருப்பனைக் காப்போம்!” ஆகிய முழக்கங்கள் ஜனநாயக சக்திகளிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்றன. இதுதான் இந்து முன்னணி கும்பலுக்கு சரியான பதிலடி என்று பாராட்டினர். இந்த முழக்கத்தைத் தமது சொந்த முழக்கமாகக் கருதி தோழர்களிடமிருந்து பிரசுரங்களை வாங்கி விநியோகம் செய்தனர். பலரும் தாமாக முன்வந்து நிதி உதவிகளைச் செய்தனர்.

அதேவேளையில், தமிழ்நாடு போலீசோ மதுரை, விருதாச்சலம், கோவை ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தது. மதுரையில் தடையை மீறி நடந்த ஆர்ப்பாட்டத்தில், மக்கள் அதிகாரம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள் போர்க்குணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தோழர்களுடன் ஜனநாயக சக்திகள் பலரும் கலந்துகொண்டனர். இந்த மூன்று பகுதிகளிலும் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். தோழர்கள் கைது செய்து அடைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்த ஜனநாயக சக்திகள் பலரும் தோழர்களுக்கு வாழ்த்துகளையும் போராட்டத்திற்கு தங்களது ஆதரவையும் தெரிவித்தனர்.
சென்னை, திருவாரூர் ஆகிய பகுதிகளில் போலீசு அனுமதி அளித்த வகையில், ஜனநாயக சக்திகள் பெருவாரியானோரின் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டங்கள் எழுச்சிகரமாக நடந்தன.
★ ஜனநாயக சக்திகளைத் திரட்டி புரட்சிகர அமைப்புகள் மேற்கொள்ளும் இந்தப் போராட்டங்கள் முதல் சுற்றுப் போராட்டங்களே. கலவரங்களை நடத்தி மதுரையை ஆக்கிரமிப்பது, அதன் மூலமாக, தமிழ்நாட்டை கைப்பற்றுவது, இந்த மதவெறிக் கும்பலின் நோக்கமாகும். அதற்கான துருப்புச் சீட்டுதான் திருப்பரங்குன்றமாகும்.
இந்த மதவெறிக் கும்பலை விரட்டியடிப்பது பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளின் கடமையாகும். இதற்கு, மக்கள் அதிகாரம் தலைமையில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள போராட்டங்கள் ஒரு தொடக்கமாகும்.
திருப்பரங்குன்றத்தில் இருந்து இந்து முன்னணி – பா.ஜ.க. கும்பல் விரட்டியடிக்கப்படும் வரை இந்தப் போராட்டங்கள் ஓயாது!
தகவல்:
மக்கள் அதிகாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
மதுரை.
(புதிய ஜனநாயகம் – மார்ச் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram