கடந்த 2023-ஆம் ஆண்டு குஜராத் தேர்வு வாரியம் வெளியிட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளின் அறிக்கை ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் பலரால் பகிரப்பட்டு வருகின்றது. இது குஜராத் மாடலின் போலித்தனத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு குஜராத் இடைநிலை மற்றும் மேல்நிலை கல்வி வாரியத்தால் (Gujatat Secondary Education Board – GSEB) 10-ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்பட்டன. அதன் முடிவுகள் மே 25-ஆம் தேதி வெளியிடப்பட்டது. பகுதி வாரியாக தேர்வு முடிவுகளை ஆய்வு செய்து “குஜராத் வாரிய முடிவுகள் : 10-ஆம் வகுப்பில் 157 பள்ளிகளில் ஒருவர்கூட தேர்ச்சி பெறவில்லை“ என்கிற தலைப்பில் டி.என்.ஏ (DNA) என்கிற இணையதளம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் 272 பள்ளிகளில் 100 சதவிகித தேர்ச்சியும், 184 பள்ளிகள் 30 சதவிகிதத்திற்கும் குறைவான தேர்ச்சியும், 157 பள்ளிகளில் பூஜ்ஜிய தேர்ச்சியும் மாணவர்கள் பெற்றுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்தமாக, குஜராத் கல்வி வாரியத்தின் தேர்ச்சி விகிதம் 64.62 சதவிகிதம் ஆகும். அதில், 76 சதவிகித தேர்ச்சி விகிதத்துடன் சூரத் முதலிடத்தில் உள்ளது. 40.75 சதவிகித தேர்ச்சி வீதத்துடன் தாஹோத் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.
தேர்வில் தோல்வியடைந்து மீண்டும் தேர்வு எழுதிய 1,65,690 மாணவர்களில் 27,446 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக “ஆஜ் தெக்” என்கிற இந்திய செய்தி நிறுவனம் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதில், குறிப்பாக தாய்மொழி குஜராத்திலேயே 96,000 மாணவர்கள் தோல்வியடைந்திருப்பது அம்மாநில அரசின் கல்வி கட்டமைப்பு எந்த அளவிற்குச் சீர்குலைந்துள்ளது என்பதை அம்பலப்படுத்துகிறது. முக்கியமாக, கணிதப் பாடத்தில் 2.94 லட்சம் மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
படிக்க: போலிகளை உருவாக்கும் குஜராத் மாடல்!
இந்நிலையில், 2023-ஆம் ஆண்டு வெளியான டி.என்.ஏ செய்தி நிறுவன அறிக்கையின் “ஸ்க்ரீன் ஷாட்” (Screenshot) தற்போது சமூகவலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. இதன் மூலம் மோடியின் குஜராத் மாடலின் கல்வி கட்டமைப்பு எவ்வாறு சீரழிக்கப்பட்டுள்ளது என்பது மீண்டும் ஒருமுறை அம்பலப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளையும், பள்ளிகள் இல்லாத கிராமத்தையும் உருவாக்குவதுதான் பாசிச கும்பல் கூறும் வளர்ச்சியின் உண்மை முகம் என்பது குஜராத்தின் கல்வி கட்டமைப்பைப் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும். இந்த நிலையை நாடு முழுவதும் ஏற்படுத்துவதற்குத்தான், தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிற மாநிலங்களுக்கான கல்வி நிதியைத் தராமல் தொடர்ந்து வஞ்சித்து வருவது பாசிச மோடி அரசு.
எனவே, மோடி கும்பலின் இந்த பாசிச சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராகப் போராடாமல் இருந்தால் தற்போது குஜராத்தில் கல்வி கட்டமைப்பு சிதைக்கப்பட்டுள்ளது போலவே, ஒட்டுமொத்த அரசு கல்வி கட்டமைப்பும் சிதைக்கப்படும்.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram