அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!

க்கள் அதிகாரம் என்ற எமது அமைப்பின் முதலாவது மாநில மாநாடு 2022 ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்டது. அன்றிலிருந்து இந்த மூன்றாண்டுகளில், இந்திய ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் மோடி-அமித்ஷா தலைமையிலான பார்ப்பனிய-கார்ப்பரேட் பாசிசத்திற்கெதிராக எமது அமைப்பு தொடர்ச்சியாக பல போராட்டங்களை நடத்தி ஜனநாயக சக்திகளின் நம்பிக்கையைப் பெற்றது; எமது அமைப்பும் விரிவடைந்தது.

இந்த மூன்றாண்டு அனுபவங்களிலிருருந்து எமது அமைப்பின் கொள்கை அறிக்கையை செழுமைப்படுத்தியும் புதிய தோழர்களை தலைமைக்குக் கொண்டுவரும் வகையிலும் எமது அமைப்பின் இரண்டாவது மாநில மாநாடு 2025 ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி அன்று மதுரையில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

புதிய கொள்கை அறிக்கையையும் அமைப்பு விதிகளையும் வகுத்தளித்த இந்த மாநாட்டில் எமது அமைப்பானது, மக்கள் அதிகாரக் கழகம் என்ற பெயர் மாற்றத்துடன் ஓர் அரசியல் கட்சியாக தன்னை கட்டமைப்பு மாற்றம் செய்து கொண்டு பாசிசத்திற்கெதிராக மக்களைத் திரட்டிச் செயல்பட உறுதியேற்றது. புதிய செயற்குழுவும் தலைமைக் குழுவும் இம்மாநாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டது.

இம்மாநாட்டின் இறுதியில் நடைபெற்ற மாநாட்டுத் தீர்மான விளக்கக் கருத்தரங்கில் பல்வேறு ஜனநாயக சக்திகள் பங்கேற்று வாழ்த்துகளை வழங்கினர்.

இம்மாநாட்டின் தீர்மானங்கள்

28. திருப்பரங்குன்றம் தமிழரின் மலை. சிக்கந்தர் தர்காவில் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவந்த ஆடு, கோழி பலியிட்டு வழிபடும் உரிமையை ஆர்.எஸ்.எஸ் திட்டத்தின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் மதுரைவீரன், திருமங்கலம் கோட்டாட்சியர், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து தற்போதுவரை, சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு வழிபடும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினையை பயன்படுத்தி மதுரையில் மிகப்பெரிய கலவரத்தை உருவாக்க சங்கப் பரிவாரக் கும்பல் முயன்றபோது அரசின் அனைத்து துறைகளும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலுக்கு ஆதரவாகவும், ஜனநாயக – புரட்சிகர சக்திகளுக்கு எதிராகவும் செயல்பட்டுள்ளன. எனினும், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக அமைப்புகள், சங்கம் வளர்த்த மதுரை மண்ணில் மதவெறியர்களுக்கு இடமில்லை என்பதை நிலைநாட்டியுள்ளோம் என்பதை இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

29. ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலின் முதுகெலும்பாக செயல்படும் சேட்டு-மார்வாடி கும்பல் மதுரை நகர் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரப் பகுதிகளையும் முக்கிய வணிகப் பகுதிகளையும் கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றி இஸ்லாமியர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சேட்டு-மார்வாடி கும்பல் பொருளாதாரத்தில் மட்டுமல்ல, அரசு அதிகார வர்க்கத்திலும் முக்கிய பங்காற்றி வருகிறது.

ஆகவே, தமிழ்நாட்டின் மீதும் தமிழ்தேசிய இனத்தின் மீதும் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் சேட்டு-மார்வாடி கும்பலுக்கு எதிரான போராட்டத்தை தமிழ்நாடு மக்கள் முன்னெடுக்க வேண்டும் என்று இம்மாநாடு அறிவிக்கிறது.

30. பதவிக்காலம் முடிந்தும் தமிழ்நாட்டில் ஒட்டிக்கொண்டிருக்கிற பாசிச உளவாளி ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாக தமிழ்நாடு அரசு வெளியேற்ற வேண்டும். பா.ஜ.க ஆட்சியில்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் இணையாட்சி நடத்தும் பாசிச சர்வாதிகார போக்கை இம்மாநாடு கண்டிக்கிறது. மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் ஆளுநர் முறையையே ஒழித்துக் கட்டுவதற்கான போராட்டத்தைக் கட்டியமைக்க வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

31. இந்து அறநிலையத் துறையை, “தமிழர் சமய அறநிலையத் துறை” என்று பெயர் மாற்றம் செய்து, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கி, கருவறைத் தீண்டாமையை ஒழித்துக்கட்டி, அனைத்து கோயில்களிலும் தமிழிலில் மட்டும் வழிபாடு நடத்த வேண்டும். பார்ப்பனமயமாக்கப்பட்ட நாட்டார் குல தெய்வங்கள், சிறுதெய்வங்கள், முருகன், கொற்றவை போன்ற திணைத் தெய்வங்களை மீட்டெடுத்து ஆடு, கோழி பலியிட்டு வழிபடும் தமிழர் மரபை நிலைநாட்ட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

32. கீழடி, ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவுகளையும் இரும்புக் காலம் தமிழ்நாட்டில் இருந்து தொடங்குகிறது என்கிற புதிய கண்டுப்பிடிப்புகளும் தமிழ்நாட்டின் பார்ப்பன எதிர்ப்பு மரபுக்கும் தொன்மைக்கும் சான்றுகளாக உள்ளன. இந்த அகழாய்வுகளைத் தடுக்கும் மோடி அரசுக்கு இந்த மாநாடு தனது கண்டங்களைத் தெரிவிக்கிறது. மேலும், இந்த அகழாய்வு முடிவுகளை கல்வித் திட்டத்தில் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

33. தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. தமிழ்நாடு அரசு மாநிலக் கல்வி கொள்கை என்ற பெயரில் தேசிய கல்விக் கொள்கையின் பல்வேறுத் திட்டங்களை வேறு பெயர்களில் அமல்படுத்தி வருவதை இம்மாநாடு கண்டிக்கிறது.

34. மும்மொழிக் கொள்கைக்கு மாற்றாக தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் இருமொழிக் கொள்கையும் தாய்மொழிவழிக் கல்வியை பெருமளவில் ஒழித்துள்ளது. தமிழ்நாட்டில் தமிழே படிக்காமல், எந்த உயர் கல்வியையும் படிக்கலாம், உயர் பதவியையும் பெறலாம் என்ற இழிநிலையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் தாய்மொழிவழிக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் பயின்றோருக்கும் தாய்மொழிவழிக் கல்வியில் பயின்றோருக்கும் அரசு வேலைகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

35. தமிழ்நாட்டில், ஆணவப் படுகொலைகள், தலித் மக்கள் மீதான ஆதிக்கச் சாதிவெறியர்களின் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அனைத்து சாதிச் சங்கங்களிலும் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி உள்ளிட்ட சங்கப் பரிவார கும்பலின் ஊடுருவல் நடப்பதே இச்சாதிவெறித் தாக்குதல்கள் அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளது. எனவே, அனைத்து ஆதிக்கச் சாதி சங்கங்களையும், சங்கப் பரிவார அமைப்புகளையும் தடைச் செய்ய வேண்டும்.

பள்ளிகளில் சாதிக் கயிறு கட்டுவது, சாதிப் பாடல்கள் இசைப்பது, ஆதிக்கச் சாதிவெறியர்கள் ஆசிரியர்களாக இருப்பது, தலித் மாணவர்களை துப்புரவு வேலைகளில் ஈடுபடுத்துவது போன்ற இழிநிலைமைகள் உடனடியாக ஒழித்துக்கட்டப்பட்டு, அதற்கு காரணமான நபர்கள் கைது நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டும். மேலும், பள்ளிகளில் சாதி-வர்ண-வேத-பார்ப்பனிய எதிர்ப்பு கருத்துகளையும், சமூகநீதி-சமத்துவ கோட்பாடுகளையும் பாடத்திட்டத்தில் இணைத்து போதிக்க வேண்டும்.

36. சாதி, மதவெறிக் கலவரக்காரர்களை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸ் சாகா பயிற்சிக்கு தமிழ்நாடு அரசு தடைவிதிக்க வேண்டும். சாகா பயிற்சி நடைபெறும் பள்ளி, கல்லூரிகளின் அங்கீகாரம் இரத்துச் செய்யப்பட வேண்டும்.

37. தலித் மக்களுக்கு மட்டுமே சொந்தமான 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் ஆதிக்கச் சாதியினர் மற்றும் அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு, தலித் மக்களுக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்க வேண்டும். இப்பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்த குற்றவாளிகள், துணைபோன அதிகாரிகளை கைது செய்து அவர்கள் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.

38. வேங்கைவயலில் பாதிக்கப்பட்ட தலித் இளைஞர்களை குற்றவாளிகள் என்றும்,  கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில்  ஸ்ரீமதியின் தாயை குற்றவாளி என்றும்  அயோக்கியத்தனமாக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள  சி.பி.சி.ஐ.டி போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளியாக்கும் திமுக அரசின் இந்த மக்கள் விரோத போக்கை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

39. தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும். கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்களை தடைசெய்வதோடு, அதன் விற்பனைக்குத் துணைபோகும் போலீசு அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

40. ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலின் பாசிச நடவடிக்கைகளுக்கும் ஏகாதிபத்திய நுகர்வெறி கலாச்சரத்திற்கும் முதலில் பலியிடப்படுவது பெண்களே. பெண்கள் மீதான பாலியல் குற்றங்களில் அனைவரும் வயது வித்தியாசமின்றி ஈடுபடுகிறார்கள். பெண்களை அடிமைப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பாசிசக் கும்பலுக்கு எதிராகவும் பெண்ணை நுகர்வு பொருளாக்கும் ஏகாதிபத்திய நுகர்வுவெறி கலச்சாரத்திற்கு எதிராகவும் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும் என்று இம்மாநாடு  அறைகூவல் விடுகிறது. பாலின சமத்துவம் பேணும், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் சமத்துவ சமூகத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

41. தமிழ்நாடு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினர் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினர் தாக்குல்களை இம்மாநாடு கண்டிக்கிறது. மேலும், தமிழ்நாடு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதல்களை தடுக்காத, இலங்கை-இந்திய மீனவர்களுக்கு இடையேயான பிரச்சனையை தீர்ப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத ஒன்றிய, மாநில அரசுகளை கண்டிப்பதோடு, கச்சத்தீவை மீட்டு தமிழ்நாட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

(முற்றும்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க