பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான சாதிவெறித் தாக்குதல்கள், திருட்டு, கொலை, கொள்ளை என தமிழ்நாட்டில் நாள்தோறும் பல குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கெதிராக குரலெழுப்பும் எதிர்க்கட்சிகளும் ஜனநாயக சக்திகள் பலரும் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஆனால், சட்டம்-ஒழுங்கு சீர்குலைவே இப்பிரச்சினைகளுக்கான காரணம் என்பது ஒரு பக்கப் பார்வை மட்டுமே. ஏனெனில், இக்குற்றங்களுக்கு பின்னணியில் சமூக-பொருளாதார-அரசியல் காரணங்களும் இருக்கின்றன. புதுக்கோட்டையில் கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிவந்த ஜகபர் அலி, மயிலாடுதுறையில் சாராய விற்பனையைத் தட்டிக்கேட்ட இரு இளைஞர்கள், நெல்லையில் செயல்பட்டுவந்த சமூக சேவகர் ஜாகிர் உசேன் ஆகியோரின் அடுத்தடுத்த படுகொலைகள் இதனை நிரூபிக்கின்றன.
சமூக ஆர்வலர்களின் படுகொலைகள்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் காட்டுப்பாவா பள்ளிவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட மெய்யபுரம், துலையானூர், லெம்பலாக்குடி பகுதிகளில் சட்டவிரோதமாக கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அப்பகுதியிலுள்ள மண்ணையும் மலைகளையும் புறம்போக்கு நிலங்களையும் கனிமவள மாஃபியா கும்பல்கள் ஆக்கிரமித்து, எம்.சாண்ட், ஜல்லி என அப்பகுதி இயற்கை வளங்களைச் சூறையாடி வருகிறது.
இதற்கெதிராக போராடிவந்த ஜகபர் அலி, இக்கொள்ளையில் முதன்மையாக ஈடுபட்டுவரும் ஆர்.ஆர். குழுமம் 70,000 லாரி அளவிலான கற்களைத் திருடி வைத்திருப்பதாகவும், தட்டிக் கேட்பவர்களை குண்டர் படைகளைக் கொண்டு மிரட்டுவதாகவும், தான் கொல்லப்படுவதற்கு முன்பு கடைசியாக வெளியிட்ட காணொளியில் கூறியிருந்தார். இக்கனிம வளக் கொள்ளைக் குறித்து மாவட்ட ஆட்சியர், டி.ஆர்.ஓ., கோட்டாட்சியர், வட்டாட்சியர், கனிம வளத்துறை என பல்வேறு அரசுத்துறைகளிடம் மனு கொடுத்து முறையிட்டதாகவும், “கொஞ்ச நாள் பொறுங்கள், நடவடிக்கை எடுக்கிறோம்” என்று அதிகாரிகள் அலைக்கழிப்பதாகவும், இதனால் மக்களைத் திரட்டி போராட உள்ளதாகவும் அக்காணொளியில் ஜகபர் அலி குறிப்பிட்டிருந்தார்.
ஜனவரி 10 அன்று விரிவான ஆதாரங்களுடன் கோட்டாட்சியரிடம் புகாரளித்துவிட்டு இக்காணொளி வெளியிடப்பட்டிருந்த நிலையில், புகார் கொடுத்த ஒரு வாரத்தில் ஜகபர் அலி லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டார். ஜனவரி 18 அன்று மதியம் தொழுகை முடித்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த ஜகபர் அலி மீது டிப்பர் லாரி மோதி தூக்கியெறியப்பட்டதில் நிகழ்விடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஜகபர் அலியின் படுகொலையை விபத்தாக சித்தரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினர், ஜனநாயக சக்திகள் மற்றும் சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கத்தினர் ஆகியோரின் தொடர் போராட்டத்தால்தான் அவரது மரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது என்பது அவரது மரணத்தைவிட கொடூரமானதாகும்.
இவரது மரணம் சமூக ஊடகங்களிலும், தமிழ்நாடு அரசியல் களத்திலும் பெரும் விவாதப்பொருளாகிய பிறகுதான், ஆர்.ஆர். கல் குவாரி உரிமையாளர் ராசு, அவரது மகன் தினேஷ், லாரி ஓட்டுநர், லாரி உரிமையாளர் ஆகியோர் போலீசால் கைது செய்யப்பட்டனர். ஜகபர் அலி வழக்கானது சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டிருக்கிறது. அவரது மரணத்திற்கு பிறகே, கனிமவளத்துறை அதிகாரிகள் ஆர்.ஆர். குழுமத்தின் சட்டவிரோத கல்குவாரிகளை ‘ஆய்வு செய்ததாக’ செய்திகள் வெளியாகின.
அடுத்ததாக, மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் சாராய விற்பனையை தட்டிக் கேட்டதற்காக ஹரிஷ், ஹரிசக்தி என்ற இரண்டு இளைஞர்கள் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால், இப்படுகொலைக்கும் சாராய விற்பனைக்கும் தொடர்பில்லை என்றும் வாய் தகராறு காரணமாகத்தான் இக்கொலை நடந்துள்ளதாகவும் அப்பட்டமாக பொய்யுரைத்தது போலீசு. ஆனால், வாய் தகராறு காரணமாக கொலை நடந்திருந்தால், இவ்வழக்கை விசாரித்துவந்த பெரம்பூர் போலீசு நிலையத்தின் 19 போலீசுகள் ஏன் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டனர் என்று கேள்வியெழுப்ப வேண்டியுள்ளது.
ஏற்கெனவே, இப்பகுதியில் சாராய விற்பனை குறித்து பலமுறை புகாரளித்தும் போலீசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஒருவேளை போலீசு முன்னரே சாராய விற்பனையை தடுப்பதற்கு முறையான நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்விரு இளைஞர்களின் உயிர் பறிபோய் இருக்காது என்பதே கசப்பான உண்மை.
இறுதியாக, தமிழ்நாட்டை உறையவைத்த ஓய்வுபெற்ற போலீசு உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் படுகொலை. 60 வயதான உசேன் நெல்லை டவுன் முர்த்திம் ஜைக்கான் மசூதியில் நிர்வாகியாக இருந்து வந்துள்ளார். எனவே, வக்ஃப் வாரிய சொத்துகளைப் பாதுகாப்பதில் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார்.
குறிப்பாக, வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமான 36 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற தவ்ஃபீக் என்ற நபரிடமிருந்து அந்தச் சொத்தை பாதுகாப்பதன் மூலம் அதில் ஏழை, எளியோருக்கான நற்காரியங்களை செய்ய வேண்டும் என்பதே ஜாகிர் உசேனின் நோக்கமாக இருந்துள்ளது. கிருஷ்ணமூர்த்தி என்ற தவ்ஃபீக் இந்துவாக இருந்து இஸ்லாமியராக மதம் மாறியவராவார். இந்த தவ்ஃபீக்தான், கூலிப்படை மூலம் உசேனை படுகொலை செய்திருக்கிறார்.
உசேன் கொலை செய்யப்படுவதற்கு முன்பு உருக்கமான ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார். “என்னை 30-க்கும் மேற்பட்ட கும்பல் கொலை செய்ய சுற்றிக் கொண்டிருக்கிறது. அதில் முக்கியமான நபர் தவ்ஃபீக். இந்தக் கொலை மிரட்டலுக்கு காரணம் நெல்லை டவுன் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் செந்தில்குமார். எப்படியும் என்னை கொன்றுவிடுவார்கள்” என்று அவர் கூறுவதுடன் அக்காணொளி நிறைவடைகிறது.
ஜாகிர் உசேன், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக பல முறை புகாரளித்தும் போலீசு அதனை கண்டுகொள்ளவில்லை. மாறாக, கோபால கிருஷ்ணன், செந்தில்குமார் ஆகிய இரண்டு போலீசு அதிகாரிகளும் தவ்ஃபீக்கிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, ஜாகீர் உசேன் மீது பொய்வழக்கு போட்டதோடு, அவரை மிரட்டி பணம் பறிக்கவும் முயன்றுள்ளனர்.
மேலும், உசேனின் கொலையில் உதவி மின்பொறியாளர் அருணன் மற்றும் எம்.ஏ.கே. டைல்ஸ் நிறுவன முதலாளி ஆகியோருக்கு சம்பந்தமிருப்பதாக உசேனின் மகள் கூறியிருப்பதன் மூலம், இக்கொலைக்கு வெறும் 36 சென்ட் நிலம் மட்டும் காரணம் இல்லை என்பது தெளிவாகிறது.
உசேன் படுகொலை குறித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஜாகிர் உசேன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சமூக வலைதளங்களில் காணொளி வெளியிட்டதை தொடர்ந்து, ஏற்கெனவே பதியப்பட்ட சி.எஸ்.ஆர். அடிப்படையில், அவரை அச்சுறுத்துவதாக குறிப்பிட்ட எதிர்த்தரப்பினரை திருநெல்வேலி மாநகர போலீசு நிலையத்துக்கு அழைத்து போலீசார் விசாரித்துள்ளனர். விசாரணை நடைபெற்றுவரும் சூழ்நிலையிலேயே, இந்தக் கண்டிக்கத்தக்க சம்பவம் நடைபெற்றுள்ளது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்” என்று கூறினார்.
மு.க.ஸ்டாலினோ, எதிர்க்கட்சிகளோ கூறுவது போல இப்படுகொலைகளுக்கான காரணம் முன்விரோதமோ சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையோ மட்டுமல்ல. இப்படுகொலைகளை வெறும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையாக சுருக்குவதென்பதே பிரச்சினையின் முழுப் பரிமாணத்தை மக்களிடமிருந்து மூடிமறைப்பதாகும்.
அரசு கட்டமைப்பு கிரிமினல்மயம்
தனிப்பட்ட ரீதியில் போலீசு, அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுக்காததால் இப்படுகொலைகள் நடக்கின்றன என்று சுருக்கிப் பார்ப்பதாலேயே மேற்குறிப்பிட்ட கொலைகள் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையாகப் பார்க்கப்படுகின்றன. ஆனால், கொல்லப்பட்டவர்கள் தனிநபர் பிரச்சினைக்காக கொலை செய்யப்படவில்லை, அவர்கள் சமூகத்திற்காக செயல்படக் கூடியவர்களாக, குற்றத்தை எதிர்த்து கேள்வி கேட்பவர்களாக இருந்துள்ளனர். இவர்களைப் பாதுகாக்க வேண்டிய கூடுதல் பொறுப்பு இந்த அதிகாரிகளுக்கும், போலீசுக்கும் இருக்கிறது. அப்படியிருக்கும்போது ஏன் இவ்வாறான படுகொலைகள் அரங்கேறுகின்றன?
சான்றாக, மதுரையில் நடந்த கிரானைட் கனிமவளக் கொள்ளையை எடுத்துக்கொள்வோம். கிரானைடைக் கொள்ளையடிப்பதற்காக அரசின் மேல்மட்டத்திலிருந்து, கீழ்மட்டம் வரை அரசு அதிகாரிகள்-ஊழியர்கள் என அனைவரையும் விலைக்கு வாங்கி பி.ஆர்.பழனிச்சாமி ஒரு சாம்ராஜ்யத்தையே நடத்தினான். திருச்செந்தூரில், தாதுமணலைக் கொள்ளையடிப்பதற்காக வி.வி.மினரல்ஸின் வைகுண்டராஜன் நடத்திய கிரிமினல் சாம்ராஜ்யம் மற்றொரு மாதிரி. ஆனால், ஆற்று மணல், கிரானைட் போன்ற இயற்கைவளக் கொள்ளைக்கு அடித்தளம் போட்டுக்கொடுத்து கொள்ளையடிப்பதன் பரிமாணம் தற்போது மாறியிருக்கிறது. அதாவது, கொள்ளைக்கு மூளையாக செயல்படுவதிலிருந்து கொள்ளைக்காரக் கும்பலாகவே அரசு-அதிகார வர்க்கம் மாறியிருக்கிறது. தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கையை அமல்படுத்தியதன் மூலம், அரசு என்ற முறையில் சமூகத்திற்கு தான் செய்ய வேண்டிய குறைந்தபட்ச பொறுப்புகளைக் கூட கைகழுவுவதுடன், கொள்ளையடிப்பதற்கு ஏதுவாக கிரிமினல்மயமாகிக் கொண்டிருக்கிறது அரசு கட்டமைப்பு.
எனவேதான், இயற்கைவளக் கொள்ளைக்கு எதிராகவோ அல்லது சமூகப் பிரச்சினைகளுக்காகவோ போராடுபவர்கள் படுகொலை செய்யப்படுவதை இந்த அதிகார வர்க்கம் கண்டுகொள்வதில்லை என்பதுடன், அப்படுகொலைக்குக் கூட்டாளியாகவும் செயல்படுகிறது. ஜகபர் அலி கொடுத்த புகார் குறித்து ஆர்.ஆர். குழுமத்திற்கு தெரிவித்த தாசில்தார், நடவடிக்கை எடுக்காத அதிகார வர்க்கம், தவ்ஃபீக்குக்கு ஆதரவாக ஜாகிர் உசேனை பணம் கேட்டு மிரட்டிய போலீசு அதிகாரிகள், பலமுறை புகாரளித்தும் சாராய விற்பனையை தடுக்காத போலீசு அதிகாரிகள் அனைவரின் நடவடிக்கையும் அரசுக் கட்டமைப்பு கிரிமினல்மயமாகி வருவதையே காட்டுகின்றன.
ஜகபர் அலியின் மரணத்தைத் தொடர்ந்து, கனிம வளத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தமிழ்நாடு முழுவதும் 500-க்கும் குறைவான கல்குவாரிகள் மட்டுமே அரசின் அனுமதியுடன் இயங்குவது தெரிய வந்துள்ளது. ஆனால், 3000-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக இயங்கி வருகின்றன. அதேபோல், சுமார் 5000 கிரஷர்கள் சட்டவிரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அரசுக்கட்டமைப்பு மற்றும் அரசியல்வாதிகளின் ஆதரவின்றி இவ்வளவு குவாரிகளும், கிரஷர்களும் சட்டவிரோதமாக செயல்பட முடியுமா? இதிலிருந்தே ஆற்று மணல், தாது மணல், கிரானைட் கொள்ளையின் பரிமாணம் எந்தளவிற்கு பரந்துவிரிந்துள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியும்.
அரசியல் கட்சிகள் ஓட்டு வாங்குதற்காக தங்களுக்கிடையே அரசியல் முரண்பாடுகள் இருப்பதாக காட்டிக்கொண்டாலும், திரைமறைவில் தங்களுடைய தொழில் நலன்களுக்காக கட்சி வேறுபாடின்றி நெருக்கமாகத்தான் இருக்கின்றனர். பா.ஜ.க-வைப் போல, கிரிமினல்களை நேரடியாக தங்களது கட்சிக்குள் சேர்த்துக் கொள்ளவில்லையென்றாலும், இந்த கிரிமினல் கூலிப்படைகளின் உதவியின்றி தங்களது தொழிலை நடத்த முடியாது என்பதுதான் தற்போதைய அரசியல் கட்சிகளின் நிலை.
அரசு-அரசாங்கம்-கூலிப்படை என இவற்றிற்கிடையே இருந்த கோடுகள் மறுகாலனியாக்கக் கொள்கை அமல்படுத்தப்பட்ட இந்த 30 ஆண்டுகளில் மறைந்திருப்பதே, இக்கொள்கையால் நாடு கண்ட ‘வளர்ச்சி’யாகும். இதற்கு சிறந்த சான்றுதான், கடந்த ஜூலையில் நடைபெற்ற ஆம்ஸ்ட்ராங் படுகொலையாகும். ரியல் எஸ்டேட் – ஸ்கிராப் உள்ளிட்ட பல விவகாரங்களில் ஏற்பட்ட பிரச்சினையில், பா.ஜ.க, அ.தி.மு.க., தி.மு.க. என பல கட்சி பிரமுகர்கள்-போலீஸ்துறை-கூலிப்படையின் கூட்டால் அப்படுகொலை அரங்கேறியது.
ஒருபுறம் அரசுக் கட்டமைப்பு கிரிமினல்மயமாகி வருவதும், மறுபுறம் அரசுக் கட்டமைப்பில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் ஊடுருவல் தீவிரமாகி வருவதும் இக்கட்டமைப்பை மேலும் நஞ்சாகவும், மக்கள் விரோதமாகவும் மாற்றி வருகிறது. அரசுக் கட்டமைப்பு கிரிமினல்மயமாவது – ஆர்.எஸ்.எஸ். ஊடுருவுவதானது பாசிசம் அரங்கேறுவதற்கான அடிப்படைகளாக உள்ளன. எனவே, இத்தகைய அபாயமிக்க நிகழ்ச்சிப்போக்கின் பின்னணியிலிருந்து இப்படுகொலைகளை புரிந்துகொண்டு, அதற்கெதிராக குரலெழுப்புவதும் போராட்டங்களை கட்டியமைப்பதும் முன்நிபந்தனையாகும்.
வாகைசூடி
(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram