சட்டவிரோத கல்குவாரிக்கு எதிராகப் போராடிவந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி கல்குவாரி கிரிமினல்களால் லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக கல்குவாரி கிரிமினல்களை கைது செய்துவிட்டோம் என்று கணக்குக் காட்டுகிறது தி.மு.க. அரசு. இதன்மூலம் பிரச்சனை முடிந்துவிட்டதாகச் சித்தரிக்கிறது.
ஆனால், கனிமவள கொள்ளைக்கு எதிராகப் போராடும் சமூக ஆர்வலர்கள் லாரி ஏற்றி கொலை செய்யப்படுவது தொடர் நிகழ்வாக நடந்து வருகின்றது. இதை நிரந்தரமாகத் தடுப்பதற்கான எந்த முயற்சியையும் அரசாங்கம் எடுக்கவில்லை. ஏனெனில், இந்தக் கனிமவள கொள்ளையை நடத்துவதே அரசாங்கத்தின் துணையுடன்தான்.
ஆர்.ஆர். கல்குவாரி போன்ற கிரிமினல் மாஃபியாக்கள் தனித்து இயங்குவதில்லை. ஆர்.டி.ஓ., தாசில்தார், மாவட்ட ஆட்சியர், கனிமவளத்துறை போலீசு, துறை அமைச்சர் என இவர்களின் ஆதரவோடுதான் இந்த மாஃபியா கும்பல்கள் இயங்கி வருகின்றன. ஆட்சி மாற்றம் நடந்தாலும், யார் ஆட்சிக்கு வந்தாலும், கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதில் கைதேர்ந்த சேகர் ரெட்டி, கரிகாலன், ஆறுமுகம் போன்ற கிரிமினல்கள் அரசாங்கம்-அதிகாரிகளின் துணையுடன் கனிமவள கொள்ளையைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.
ஜகபர் அலி விவகாரத்திலும், ஜகபர் அலி தாசில்தாரிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் புகார் கொடுத்த மறுநாளே 70,000 டாரஸ் லாரி சக்கை லோடு மீண்டும் குவாரிக்குள் கொட்டும் வேலை நடக்கிறது. தாசில்தாரோ, பத்து நாள் பொறுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்கிறார். இதன்மூலம் கல்குவாரி கிரிமினல்கள் சக்கை லோடை பதுக்குவதற்கான அவகாசத்தை வழங்குகிறார் தாசில்தார். இதேவேளையில் சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலை செய்யப்படுகிறார்.
காட்டிக்கொடுத்த தாசில்தாரோ மாவட்ட ஆட்சியரோ இதுவரை கைது செய்யப்படவில்லை. மாறாக, இந்த அரசும் அதிகாரிகளும் ட்ரோன் மூலம் ஆய்வுசெய்து இரண்டு ஆண்டுகளாக அனுமதி பெறாமல் இயங்கிவந்த சட்டவிரோத கல்குவாரிகளையும் கிரிமினல்களையும் கண்டுபிடித்துள்ளதாக நாடகமாடுகிறது.
படிக்க: மதுரை கச்சைகட்டி: கல்குவாரியை எதிர்த்ததால் கொலை வெறி தாக்குதல்!
கல்குவாரி என்ன கண்ணுக்குத் தெரியாத பொருளா? இவர்கள் கண்ணுக்கு இதுவரை புலப்படவில்லையா? இரண்டு வருடங்களாகச் சட்டவிரோத கல்குவாரி இயங்கியதற்கு யார் பொறுப்பேற்பது? இந்தக் கேள்விகள் எதற்கும் அரசிடமிருந்து பதில் இல்லை.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்கப் போலீசு, கனிம வளங்களைப் பாதுகாக்க வருவாய்த்துறை, கனிமவளத்துறை என சட்டத்தின்படி சமூகத்தைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் அனைத்து அமைப்புகளும் அதற்கு எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. சேகர் ரெட்டியையும் கரிகாலனையும் ஆர்.ஆர். குவாரிகளையும் பாதுகாத்து வளர்த்து வருகின்றன. இதனால் விவசாயம் இழந்து, நீர்நிலைகளை இழந்து, புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் துயரங்களை அனுபவிக்கின்றனர்.
இதற்கு எதிராக ஓரிரு சகாயமோ, இறையன்போ மாற்றங்களை ஏற்படுத்திவிட முடியாது. இவர்களைப் போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு எதிரானதுதான் இந்த அரசு கட்டமைப்பு.
உழைக்கும் மக்களுக்கான மாற்று அரசு கட்டமைப்புதான் இதற்கெல்லாம் தீர்வாக அமையும். தனிப்பட்ட சமூக ஆர்வலர்களின் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறும்போது மட்டுமே நமது எதிரிகளை வீழ்த்த முடியும். நாம் வெற்றி பெற முடியும்.
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram