மதுரை கச்சைகட்டி: கல்குவாரியை எதிர்த்ததால் கொலை வெறி தாக்குதல்!

இக்கொலைவெறித் தாக்குதல் நடந்த பின்பும் தற்போது வரை உரிமம் முடிந்து செயல்பட்டு வருகின்ற குவாரிகள் மீதும் ஞானசேகரனை கொலை செய்யத் திட்டமிட்ட குவாரி உரிமையாளர் மீதும் திமுக அரசு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை.

துரை மாவட்டம் கச்சைகட்டி பகுதியில் சட்டவிரோதமாகச் செயல்படுகின்ற கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய சமூக ஆர்வலர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட கச்சைகட்டி, ராமையன்பட்டி, பூச்சம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ளக் கிராமங்கள் அப்பகுதியில் உள்ள வகுத்துமலை வனப்பகுதியை ஒட்டி 22க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் அரசின் அனுமதியுடன் 20 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வருவதால் அக்கிராமங்கள் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளன.

குறிப்பாக குவாரிகளிலிருந்து கற்களை ஏற்றிச் செல்வதற்கு தனிப்பாதை இன்றி விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக உள்ள ஓடை வழியாக லாரிகள் சென்று வருவதால் அதனை நம்பி பயிரிடப்படும் தென்னை சாகுபடி உள்ளிட்ட விவசாய பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே கல்குவாரிகளால் அப்பகுதியைச் சுற்றியுள்ள இயற்கை வளங்கள் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் அழிந்து கொண்டிருக்கிறது. அதற்கு எதிராகக் கிராம மக்களும் சமூக ஆர்வலர் ஞானசேகரனும் குவாரிகளை தடை செய்ய வலியுறுத்தி தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் கச்சைகட்டி பகுதியில் உரிமம் முடிந்து செயல்பட்டுவந்த கல்குவாரியை அம்பலப்படுத்தியதுடன் குவாரிகளின் உரிமம் காலாவதியான பிறகும் சட்டவிரோத முறையில் செயல்படுகின்ற குவாரிகளை தகவல் அரியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கண்டறிந்து அக்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தது குவாரிகளை நடத்துபவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் ஆத்திரமடைந்த கல்குவாரி உரிமையாளர்கள் சமூக ஆர்வலர் ஞானசேகரனை கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய ஞானசேகரனை பைக்கில் ஒருவர் பின்தொடர்ந்து வந்துள்ளார்.

ஆனால் சில நொடிகளில் பின்னே வந்தவன் ஞானசேகரன் கழுத்து, கை, வயிறு ஆகிய பகுதிகளில் கம்பியைக் கொண்டு தாக்கியதில் அவர் மயங்கியுள்ளார்.


படிக்க: கச்சைகட்டி: விதி மீறும் கல்குவாரிகளால் அழிக்கப்படும் விவசாயம் | ஆவணப்படம்


இதனைக் கண்ட மக்கள் ஞானசேகரனிடம் ஓடி வருவதற்குள் கொலைவெறி தாக்குதல் நடத்தியவன் பைக்கில் தப்பித்துப் போயுள்ளான். ஞானசேகரனை உடனடியாக வாடிப்பட்டி அரசு மருத்துமனக்கு மக்கள் கூட்டிச் சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அவர் அனுப்பிவைக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்த பின்பு கச்சைகட்டி பகுதியில் செயல்பட்டுவரும் கல்குவாரியில் ஓட்டுநராக வேலை செய்து வருகின்ற முருகனை கொலைவெறித் தாக்குதல் உள்ளிட்டவற்றின் கீழ் கைது செய்துள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில் கல்குவாரி நடத்துபவர்களின் தாக்குதலிலிருந்து தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று போலீசிடம் கோரியுள்ளார்.

ஆனால் இக்கொலைவெறித் தாக்குதல் நடந்த பின்பும் தற்போது வரை உரிமம் முடிந்து செயல்பட்டு வருகின்ற குவாரிகள் மீதும் ஞானசேகரனை கொலை செய்யத் திட்டமிட்ட குவாரி உரிமையாளர் மீதும் திமுக அரசு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கல்குவாரி மாஃபியாக்கள் தங்களது நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்வதும் அரசு அவர்களைத் தொடர்ந்து பாதுகாப்பதும் இயல்பாக்கப்பட்டுவிட்டது.

எனவே இயற்கை வளங்கள் மற்றும் விவசாய நிலங்களை அழித்து மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கின்ற குவாரிகள் உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கின்ற சமூக ஆர்வலர்களுக்கு அரசு உரிய பாதுகாப்பை வழங்கிட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க