மானாமதுரை சிப்காட் வளாகத்திலிருந்து
மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு செய்யும்
நச்சு ஆலையை நிரந்தரமாக வெளியேற்று!
அன்பார்ந்த மானாமதுரை வாழ் பொது மக்களே!
நமது ஊரில் அமைந்துள்ள சிப்காட் வளாகத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவ கழிவு சுத்திகரிப்பு தொழிற்சாலை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை என்பது மிகவும் அபாயகரமானது. மருத்துவமனையிலிருந்து வெளிவரும் ஆப்ரேஷன் செய்த கத்திகள், ஊசி, ஆபத்தான நோய்களுக்குப் பயன்படுத்திய பொருட்கள் கழிவுகள் என அனைத்து விதமான கழிவுகளையும் இங்கு கொண்டு வந்து புதைப்பார்கள் அல்லது எரிப்பார்கள். இதன் விளைவாக நச்சு வாயுக்கள் பியூரான், பையாக்சின் போன்றவை வெளியேறும். இது சிறுநீரகத்தைப் பாதிக்கக் கூடியது, புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது. இன்னும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதித்து குடிநீரையும் கூட பாதிக்கக் கூடியது.
இந்த ஆலை ஏற்படுத்தக்கூடிய பாதிப்புக்கு ஒரு உதாரணம்
விருதுநகர் மாவட்டம் அ.முக்குளம் கிராமத்தில் அமைந்திருந்தது ராம்கி எனும் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை. 2006 இல் துவங்கப்பட்ட அந்த ஆலையிலிருந்து வெளியேற்றப்பட்ட நச்சு வாயுக்கள் மற்றும் கழிவு நீரால் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டது. அ.முக்குளம் சுற்றுவட்டாரத்தில் உள்ள 12 கிராம மக்களில் ஆயிரக்கணக்கானோருக்குச் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு டயாலிசிஸ் எனும் இரத்த சுத்திகரிப்பு செய்யக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதில் நூற்றுக்கணக்கானோர் இறந்தும் போயினர். இன்று வரை நோய்வாய்ப்பட்டு அவதிப்படுவோர் பல நூறு பேர். ஐந்து,பத்து வயது சிறிய குழந்தைகளுக்கு எல்லாம் டயாலிசிஸ் செய்யும் நிலைமைக்குத் தள்ளப்பட்டனர். பலரும் ஊரை காலி செய்து விட்டுச் சென்றனர். இந்த 12 ஊர்களிலும் பெண் கொடுத்து பெண் எடுப்பது போன்ற விவகாரங்களைப் பலரும் மறுத்தனர். குளம் கண்மாய்களில் கழிவுநீரினால் ஏற்பட்ட பாதிப்பால் ஆடு மாடுகள் பலியாகின. 2006லிருந்து 2016 வரை பத்து வருடங்கள் செயல்பட்ட இந்த நிறுவனம் ஏற்படுத்திய பாதிப்புகள் ஏராளம். 2013 இல் இருந்து 2017 வரை 12 கிராம மக்களும் தொடர் போராட்டத்தின் மூலமாக இந்த ஆலையை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். ஆலைக்கு ஆதரவாகச் செயல்பட்ட அதிகாரிகள் அனைவரையும் போராடி முறியடித்தனர்.
நம் கண் முன்னே இவ்வளவு பெரிய உதாரணம் இருக்கும்போது இதெல்லாம் அதிகாரிகளுக்கு அரசியல்வாதிகளுக்கும் தெரியாதா?
அப்படியானால் இவர்கள் யாரின் நலனுக்காக இருக்கிறார்கள்.
படிக்க: பொட்டலூரணி: கழிவு மீன் லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்!
கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் மானாமதுரை பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள திருமண மண்டபத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம் என்ற ஒன்று வைத்திருந்தனர். அதில் மானாமதுரையில் உள்ள விவசாயச் சங்கங்கள் ஜனநாயக சக்திகள் இயக்கங்கள் கட்சிகள் என அனைவரும் கலந்து கொண்டு ஆலை இங்கு வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். அதே சமயத்தில் வெளிமாநிலத்திலிருந்து இரண்டு இளைஞர்களைக் கூட்டி வந்து ஆதரவாக மனு கொடுக்க வைத்தனர். அதைத் தடுத்து நிறுத்திய மானாமதுரை மக்கள் அவர்களை வெளியேற்றினர்.
ஒட்டுமொத்த மக்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதையெல்லாம் மீறி தற்போது அந்த தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்கப்பட்டது என்பது மக்களின் கருத்துகளைக் குப்பை காகிதமாகக் கசக்கிப் போடுவதற்குச் சமம். இதனைச் செய்தவர்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், வட்டாட்சியர், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள்தான். இது அத்தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினரிற்கும் நன்கு தெரியும்.
இப்போது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பாக கலெக்டரிடம் மனு கொடுத்த பிறகு கட்டுமானப் பணிகளை நிறுத்தி உள்ளதாக அறிவித்தார்கள். ஆனால் முழுவதுமாக சிப்காட் வளாகத்திலிருந்து அது வெளியேற்றப்படும் என எந்த வாக்குறுதியும் கொடுக்காமல் இன்று வரை இழுத்தடித்து வருகின்றனர்.
அ.முக்குளம் கிராம மக்கள் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை வேண்டாம் எனத் தொடர்ந்து போராடி வந்த காலகட்டத்திலேயே சாயப்பட்டறை கழிவுகளை 200 ஏக்கரில் புதைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்தனர். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் மிச்சமாகும் மின்னணு கழிவுகளை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம் போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு அனுப்பித் தான் சுத்திகரிப்பு செய்கின்றனர். நமது நாடுகளைக் குப்பைத் தொட்டியாக்கும் முயற்சியை மேற்கொள்கிறார்கள். அதற்கு இங்குள்ள அரசுகள் அனைத்தும் அடிமை சேவகம் செய்கிறார்கள்.
இது போன்ற கழிவுகள் அடுத்து சிப்காட் வளாகங்களுக்குக் கொண்டு வரப்படலாம் என்ற அபாயமும் உள்ளது.
படிக்க: கூடங்குளம் கழிவு மேலாண்மை திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்
மானாமதுரை சுற்றுவட்டாரத்தில் கொன்னக்குளம், நவாத்தாவு, உடைகுளம், கல்குறிச்சி போன்ற பல்வேறு பகுதிகளும் பாதிக்கும் அபாயம் உள்ளது. தமிழ்நாட்டில் ஒரு நாளில் வெளியேற்றப்படும் மருத்துவக் கழிவுகள் 45 டன்கள் என்கிறார்கள். இந்தியாவில் இது ஆறாவது இடம் என்கிறது புள்ளிவிவரம். இதில் 12 மாவட்ட கழிவுகள் மானாமதுரை சிப்காட் வளாகத்திற்கு வர இருக்கிறது என கூறப்படுகிறது.
அருகில் செவன்த் டே மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு மானாமதுரை சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து பல மாணவர்களும் வருகிறார்கள். கொன்னக்குளம் மேல்நிலைப்பள்ளி உள்ளது; இங்கும் பல கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் வந்து படிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
மக்கள் நலனைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் இது போன்ற ஆலைகளிடம் காசு வாங்கிக் கொண்டு அனுமதி கொடுக்கும் அதிகாரிகள் அரசியல்வாதிகள் மத்தியில் உறுதியான மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டி உள்ளது.
அ.முக்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி கிராம மக்கள் எம்மை போன்ற களத்தில் உறுதியாக நின்று போராடக்கூடிய அமைப்புகளைத் தொடர்பு கொண்டு இணைந்து போராடினர். அப்படிப்பட்ட மக்கள் போராட்டங்களால் தான் ராம்கி ஆலை வெளியேற்றப்பட்டது.
தற்போது வரை தூத்துக்குடி அருகே பொட்டலூரனி மக்கள் கழிவு மீன் தொழிற்சாலைக்கு எதிரான போராட்டத்தை எமது அமைப்புகளுடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இதுபோல் மாநகராட்சியுடன் கிராமங்களை இணைப்பது, நகராட்சியுடன் கிராமங்களை இணைப்பது, விவசாயத்தை அழித்து சிப்காட் கொண்டு வருவது போன்ற பல்வேறு மக்கள் போராட்டங்களிலும் நமது அமைப்புகளை இணைத்து மக்கள் உறுதியாகப் போராடி வருகின்றனர். தி.மு.க அரசு இது போன்ற மக்கள் விரோத திட்டங்களில் மக்களுக்கு எதிராக நிற்பதை முறியடிக்க வேண்டியுள்ளது. ”வேண்டும் ஜனநாயகம்” என முழங்க வேண்டி இருக்கிறது.
தெரிந்தே நமது தலையில் மிளகாய் அரைக்க வருகிறார்கள். நாம் ஏமாளிகளா? நமது ஊர் என்ன குப்பைத்தொட்டியா? இதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலையை நிரந்தரமாக அகற்றுவதற்கான போராட்டத்தை முன்னெடுப்போம் வாருங்கள்.
தோழர். ரவி,
மாநில இணைச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram