மானாமதுரை பேருந்து நிறுத்தம்: மக்களை அலையவிடும் அதிகார வர்க்கம்!

மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் எனக் கேட்டால் மாதக்கணக்கில் அலையவிடும் இந்த அதிகாரிகள், பணம் படைத்தவர்களிடமும் கார்ப்பரேட்டுகளிடமும் எப்படி வாலாட்டுகிறார்கள் என்பதை நாம் தினமும் பார்த்துதான் வருகிறோம்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட கீழ்க்கரை மேல்கரை மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள்  கோரிக்கையை அலட்சியப்படுத்தும் அதிகார வர்க்கம்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வழியாகத்தான் மதுரையில் இருந்து ராமநாதபுரம் ராமேஸ்வரம் வரை செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நான்கு வழிச்சாலை வருவதற்கு முன்பாக மானாமதுரையில் இரண்டு பேருந்து நிறுத்தங்கள் இருந்தன. மதுரையில் இருந்து வரும்போது அண்ணா சிலை பைபாஸ் ரோடு பேருந்து நிறுத்தமும் அதன் பிறகு புதிய பேருந்து நிலையத்திற்கும் சென்று பஸ்கள் நிறுத்தி செல்லப்படுவது வழக்கம். இரண்டு பேருந்து நிறுத்தத்திற்கும் இடையில் ஒரு கிலோ மீட்டருக்கும் சற்று கூடுதலான தொலைவு உள்ளது. அண்ணா சிலை பைபாஸ் ரோட்டில் உள்ள நிறுத்தத்தால் ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்று வந்தனர். இந்த பேருந்து நிறுத்தத்தை நம்பியே மானாமதுரையின் சரி பாதி மக்கள் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் இருந்தனர்.

இதன் பிறகு நான்கு வழிச்சாலை வந்தது. புதிய பேருந்து நிலையத்திற்கும் அண்ணா சிலை பைபாஸ் ரோட்டிற்குமிடையில் உள்ள ரயில்வே கேட்டை கடப்பதற்கு நான்கு வழி மேம்பாலம் அமைக்கப்பட்டது. அதன் பிறகு இந்த அண்ணா சிலை பைபாஸ் நிறுத்தம் என்பதை ஊருக்கு வெளியில் பாலம் தொடங்கும் இடத்திற்கு (ஏற்கனவே இருந்த இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவு இருக்கும்) பேருந்து நிறுத்தத்தை மாற்றினார்கள். இதனால் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக அவர்கள் நிறுத்தும் இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டருக்கும் மேலாக மக்கள் நடந்தே செல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் பல்வேறு அசம்பாவிதங்கள் நடப்பதற்கு ஏதுவான இடமாகவும் இது உள்ளது. நடந்து வரும் பாதைகளில் தெருவிளக்குகள் இல்லை வைகை ஆற்றின் ஓரப்பகுதியான இப்படிப்பட்ட சிக்கலான ஒரு இடத்தில் மக்களைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்கள்.


படிக்க: கிருஷ்ணகிரி: சோக்காடி கிராம தலித் மக்கள் மீது ஆதிக்கசாதிவெறித் தாக்குதல்


பேருந்துகள் நிற்காமல் போனால் மானாமதுரையின் புது பஸ் ஸ்டாண்ட் என சொல்லக்கூடிய பேருந்து நிலையத்தில் தான் இறங்க முடியும். அங்கிருந்து பேருந்துகளில் சுற்றி வருவதற்கும் ஆட்டோக்களில் வருவதற்குமே மக்கள் அதிகமான சிரமப்பட வேண்டி உள்ளது. இதன் அடிப்படையில் தான், பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அண்ணாசாலை பாலத்தின் கீழ் பேருந்துகள் நிறுத்தி செல்ல வேண்டும் என்பது முன்வைக்கப்படுகிறது.

இது சம்பந்தமான கையெழுத்து இயக்கம் மக்கள் மத்தியில் நடத்தப்பட்டு  சிவகங்கை மாவட்ட ஆட்சியர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்ட ஆட்சியர்,  இன்னும் போக்குவரத்து துறை அதிகாரிகள் முதல் முதல்வர் தனிப்பிரிவு வரை 25 இடங்களுக்கு மனு அளிக்கப்பட்டது. மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லக்கூடிய பெரும்பான்மையான பேருந்துகள் கும்பகோணம் கோட்டம் போக்குவரத்து கழகத்தின் கீழ் வருவதால்  அங்கு உள்ள இயக்குனர்கள் தான் முக்கியமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கும்பகோணம் கோட்ட பொது மேலாளர் சார்பில் பேருந்துகள் அனைத்தும் மானாமதுரை அண்ணா சிலை பைபாஸ் பாலத்தின் கீழ் நின்று செல்ல உத்தரவிட்டனர்.

ஒரு வாரம் மட்டுமே பேருந்துகள் கீழே நின்று சென்றன; அதன் பிறகு நிற்காமல் தொடர்ந்து பாலத்தின் மேல் புறத்திலேயே சென்று கொண்டிருந்தன. இதை அதிகாரிகளிடம் முறையிட்டு கேட்டபோது நிறுத்தாத ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மீது புகார் தெரிவியுங்கள் என்றார்கள். ஆனால் அதன் பிறகு நிற்காத பேருந்துகள் குறித்து புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து மக்களின் கோரிக்கைகளை அவமதித்து வருகின்றனர்.


படிக்க: தொடரும் நீட் படுகொலைகள்! | வேண்டாம் நீட்! வேண்டும் ஜனநாயகம்!


அதன் பிறகு 16.10.2023 அன்று மீண்டும் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அதன் பிறகு கள ஆய்வு என்ற பெயரில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் வந்தனர். இந்த இடத்தில் பேருந்து நிறுத்தினால் உயிர்ப்பலி ஏற்படும் என்று சம்பந்தமில்லாமல் ஒரு பெரிய குண்டை போட்டனர். எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு பதில் இல்லை. அசம்பாவிதங்களும் வழிப்பறிகளும் நடந்தால் நீங்கள் பொறுப்பேற்பீர்களா எனக் கேட்டாலும் பதில் இல்லை. மீண்டும் நீங்கள் மனு கொடுங்கள் என சொல்லிவிட்டு நகர்ந்தார்கள்.

மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் எனக் கேட்டால் மாதக்கணக்கில் அலையவிடும் இந்த அதிகாரிகள், பணம் படைத்தவர்களிடமும் கார்ப்பரேட்டுகளிடமும் எப்படி வாலாட்டுகிறார்கள் என்பதை நாம் தினமும் பார்த்துதான் வருகிறோம்.

மானாமதுரை சிப்காட்-இன் அருகில் கொன்னக்குளம் என்ற ரயில்வே நிலையம் உள்ளது. அது அமைக்கப்பட்டதே சிப்காட்டில் அமைந்துள்ள வீடியோகான் என்ற கார்ப்பரேட் நிறுவனத்திற்காகத் தான். கார்ப்பரேட் நலனில் விழுந்து விழுந்து அக்கறை காட்டும் இந்த அரசுதான் ஒரு சாதாரண பேருந்து நிறுத்தத்திற்கு கூட மக்களை அலைக்கழிக்கிறது. இப்படிப்பட்ட அதிகாரிகளை பதவியில் இருந்து இறக்குவதற்கு மக்களுக்கு அதிகாரம் இருக்குமானால் மக்களுக்கு அடங்கிப் போவார்கள் தானே. ஆதலால் மக்களாகிய நாம் களத்திற்கு வந்து குரல் எழுப்புவோம்; நமது உரிமைகளை வென்றெடுப்போம்.


களச்செய்தியாளர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க