கூடங்குளம் கழிவு மேலாண்மை திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

ஏற்கெனவே அனு உலையினால் பாதிக்கப்பட்டுள்ள எங்கள் கிராமத்தில் மனிதக் கழவுகளை சுத்திகரிக்கும் மையம் அமைக்கப்பட்டால் மேலும் எங்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படும். எனவே இத்திட்டத்தை உடனடியாக மாவட்ட நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட கூடங்குளம் கிராமத்தில் கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மனித கழிவு சுத்திகரிப்பு மையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒன்றிய மோடி அரசின் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் மூன்று கோடி ரூபாய் செலவில் மாவட்ட நிர்வாகத்தால் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சேகரிக்கப்படும் கழிவு நீரில் உள்ள திட, திரவ கழிவுகளை சுத்தம் செய்து அதனை மீண்டும் நிலத்தில் வெளியேற்றும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இத்திட்டத்தால் நிலம், நீர், காற்று மாசுப்பட்டு சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் என மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே இத்திட்டத்தை மாவட்ட நிர்வாகம் திரும்பபெற வேண்டும் என கோருகின்றனர்.

கடந்த டிசம்பர் 5 அன்று கூடங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் வின்சி மணியரசி தலைமையில், கூடங்குளம் மற்றும் ராதாபுரம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டு 29-க்கும் மேற்பட்டோர் இணைந்து மக்களை பாதிக்கக்கூடிய இத்திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அம்மனுவில் “எங்கள் கிராமம் மற்றும் சுற்றியுள்ள எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இத்திட்டத்தால் அவர்களுக்கு குடிநீர் வழங்குகின்ற நீர்நிலைகள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நிலத்தடி நீர் மற்றும் விளைநிலங்கள் மாசுபடுவதற்கான அபாயம் உள்ளது. மேலும், எங்கள் கிராமத்தில் அரசு மருத்துவமனை மற்றும் பொதுமக்கள், சிறுவர்களின் பயன்பாட்டிற்காக 1.5 ஏக்கர் நிலத்தில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


படிக்க: அரிட்டாபட்டியில் கனிம சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம்


மேலும், “எங்கள் கிராமப் பகுதியில் அதிகளவிலான மனிதக் கழிவுகள் சேராத நிலையில் மற்ற ஊராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள மனிதக் கழிவுகளை இங்கு கொண்டுவந்து சுத்திகரிப்பு செய்வதற்காக இத்திட்டம் கொண்டுவரப்படுகிறதோ என்கிற கேள்வியும் எழுகிறது. ஏற்கெனவே அனு உலையினால் பாதிக்கப்பட்டுள்ள எங்கள் கிராமத்தில் மனிதக் கழவுகளை சுத்திகரிக்கும் மையம் அமைக்கப்பட்டால் மேலும் எங்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படும். எனவே இத்திட்டத்தை உடனடியாக மாவட்ட நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும்” என்று அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, இத்திட்டத்தை மாவட்ட நிர்வாகம் ரத்துசெய்யாமல் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டால் டிசம்பர் 7 அன்று வியாபாரிகள் அனைவரும் முழு கடையடைப்பு போராட்டத்தையும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்துவோம் என்று மக்கள் எச்சரித்திருந்தனர்.

ஆனால், மாவட்ட நிர்வாகம் டென்டரை ரத்து செய்யாததால், அறிவித்தப்படி டிசம்பர் 7-ஆம் தேதியன்றூ கூடங்குளம் பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு முக்கிய கடைவீதிகள் வெறிச்சோடின. ஓட்டுநர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் 60-க்கு மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடவில்லை. மக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடிகட்டி போராட்டம் நடத்தினர். மேலும், இத்திட்டம் ரத்து செய்யப்படாவிட்டால் மக்களின்  போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழல் உள்ளது.

மத்திய-மாநில அரசுகளால் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் விரோதமான திட்டங்கள் அடுத்தடுத்து கொண்டுவரப்படுகின்றன. அப்பகுதியில் வாழும் மக்களிடம் அனுமதியோ ஆலோசனையோ கேட்கப்படாமல் எதேச்சதிகாரமான முறைகளிலேயே இத்திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. ஆனால், மக்கள் மீது திணிக்கப்படும் இத்திட்டங்களை மக்கள் ஒருபோதும் ஏற்கப் போவதில்லை. இதுபோன்ற தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களால் மக்கள் விரோதத் திட்டங்கள் முறியடிக்கப்படும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க