நாஜி கோடீசுவரர்கள்: எலான் மஸ்க் குடும்பத்தின் பாசிச பாரம்பரியம்

ஒட்டுமொத்த எலான் மஸ்க் குடும்பத்தைப் போன்ற மிகவும் சக்தி வாய்ந்த ஏகாதிபத்தியவாதிகளில் சிலர் வெளிப்படையாகவும் பெருமையாகவும் தங்களை நாஜிகளாக காட்டிக் கொள்கிறார்கள்.

டிரம்பின் பதவியேற்பு விழாவில் வெளிப்படையாக நாஜி வணக்கம் செலுத்திய எலான் மஸ்க், “நாஜிகள் வருவார்களா என்று நீங்கள் பந்தயம் கட்டுங்கள்” என்பது போன்ற நாஜி கருப்பொருள் கொண்ட தொடர்ச்சியான சிலேடைகளை எக்ஸ் தளத்தில் (X-இல்) திமிர்பிடித்த முறையில் பதிவிட்டார். மஸ்க்கின் வணக்கத்தை “உற்சாகமான தருணத்தில் ஒரு மோசமான சைகை” என்று கூறி அவரைப் பாதுகாத்த அவதூறு எதிர்ப்பு சியோனிச லீக் (Zionist Anti-Defamation League) கூட, இத்தகைய குறுஞ்செய்திகளை (ட்வீட்களை) கண்டித்துள்ளது.

எலான் மஸ்க் பாசிசத்தையும் பிற்போக்குத்தனமான அரசியல் இயக்கங்களையும் அரவணைத்துச் செல்கிறார் என்பது இரகசியமல்ல. அவர் தனது அரசியல் சார்புகளை மறைத்துக்கொள்ள ஒருபோதும் முயல்வதில்லை.

டிரம்ப்பை ஆதரிப்பது மட்டுமல்ல, ஜெர்மன் நவ-நாஜி கட்சியான ஏ.எஃப்.டி (AfD – Alternative for Deutschland) – க்கும் மஸ்க் அளித்துவரும் ஆதரவும் வெளிப்படையானது. இது, மைய நீரோட்டப் பத்திரிகைகளில் பரவலான செய்தியாகியுள்ளது. புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு தளத்தைக் கொண்ட மற்றொரு ஐரோப்பிய பாசிச அரசியல் கட்சியான பிரிட்டிஷ் சீர்திருத்தக் கட்சிக்கும் (British Reform Party) எலான் மஸ்க் நிதியுதவி செய்து ஆதரிக்கிறார்.

அண்மைய ஆண்டுகளில், உலகளாவிய ஆளும் வர்க்க அரசியலில் மஸ்க் ஒரு முக்கியமானவராக, பிரபலமானவராக மாறிவிட்டார். இருப்பினும், ஆளும் வர்க்க அரசியலில் பாசிசம் வகிக்கும் பங்கையும், ஏகாதிபத்திய நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்றவாறு பல்வேறு பாசிச இயக்கங்களையும் பிரமுகர்களையும் மறுசுழற்சி செய்யும் அமெரிக்காவின் வரலாற்றையும் பொறுத்தவரை, மஸ்க்கின் தனிப்பட்ட அரசியல் என்பது, கடலில் மூழ்கியுள்ள பனிப்பாறையின் ஒரு சிறுமுனை மட்டுமே.

உண்மையில், வலதுசாரி அரசியலில் முக்கியத்துவம் பெற்று அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களை ஊக்குவிக்கும் எலான் மஸ்க்கின் சொந்த குடும்பத்தில் அவர் முதல் நபர்கூட அல்ல.

1990-களின் முற்பகுதியில் தென்னாப்பிரிக்காவில் நிறவெறி வீழ்ச்சியடைந்த பிறகு, நெல்சன் மண்டேலா ஆட்சிக்கு வந்த பிறகு, நிறவெறியை ஆதரித்த பல வெள்ளை தென்னாப்பிரிக்கர்கள் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தனர். இவ்வாறு தஞ்சம் புகுந்த வலதுசாரி வாய்வீச்சாளர்களும் அவர்களது குடும்பங்களும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கு புதிய கோட்டையாக அமைந்தனர்.

ஆனால் மஸ்க் குடும்பத்தின் பாசிச மரபு 1990-களை விட இன்னும் நீண்ட நெடுங்காலத்தைக் கொண்டிருக்கிறது.


படிக்க: அமெரிக்காவில் கும்பலாட்சி துவக்கம்: புதிய வகை மேலாதிக்கத்திற்கான அறிவிப்பு!


மஸ்க்கின் தாய்வழி பாட்டி வின் பிளெட்சர், தாத்தா ஜோசுவா ஹால்ட்மேன் ஆகியோர், கனடா நாட்டில் 1940-களில் வெளிப்படையாக நாஜி அரசியலில் ஈடுபட்ட பெரும் பணக்கார மருத்துவர்கள் ஆவர். ஒரு நேர்காணலில், எலோனின் தந்தையாகிய எரோல், தனது முன்னாள் மனைவியின் நாஜி பெற்றோரின் வரலாறு குறித்துப் பேசினார்:

“அவர்கள் ஹிட்லரை வழக்கமாக ஆதரித்ததோடு, அது போன்ற நடவடிக்கைகளையும் ஆதரித்தார்கள். ஆனால் நாஜிக்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது என்று நினைக்கிறேன். ஆனால் அவர்கள் [முன்னாள் மனைவியின் பெற்றோர்களும் எலான் மஸ்க்கின் தாத்தாவும் பாட்டியும்] ஜெர்மன் நாஜி கட்சியில் இருந்தனர்; ஆனால் கனடாவில் இருந்தனர். மேலும் அவர்கள் ஜெர்மானியர்களிடம் அனுதாபம் கொண்டிருந்தார்கள்”.

சோவியத் யூனியன் மற்றும் பிற நேச நாட்டுப் படைகளின் வாயிலாக பாசிசம் தோற்கடிக்கப்பட்ட பிறகு, கனடா நாட்டிலிருந்த எலான் மஸ்க்கின் தாத்தாவும் பாட்டியும் (ஹால்ட்மேன் மற்றும் பிளெட்சர்) தங்கள் நாஜி நடவடிக்கைகளைத் தொடர்ந்தனர்.

பாசிச ஹிட்லர் 1933-இல் அதிகாரத்தைக் கைப்பற்றி உருவாக்கிய மூன்றாவது புதிய பேரரசுக்கு எதிரான போரின் காரணமாக, கனடா நாட்டின் பல போர்வீரர்களது உயிரைப் பறித்த அந்தப் போரின் காரணமாக, கனடா நாட்டின் அரசியலில் வெளிப்படையான நாஜிசம் அப்போது தடை செய்யப்பட்டது.

யாரோஸ்லாவ் ஹங்கா போன்ற நூற்றுக்கணக்கான உக்ரேனிய நாஜி எஸ்.எஸ். படையின் (The 14th Waffen Grenadier Division of the SS 1st Galician) இராணுவ அதிகாரிகளுக்கு கனடா வழங்கிய பரவலான பொது மன்னிப்பு குறித்து இங்கு ஒரு விசித்திரம் உள்ளது. கனடா நாட்டின் நாடாளுமன்றம் ஹங்காவை வெளிப்படையாகக் கௌரவித்த பின்னர், கனடா அரசாங்கம் பரவலாக விமர்சிக்கப்பட்டது.

உக்ரைன் நாஜிகளுக்கு கனடா நாட்டின் அரசாங்கம் காட்டிய அரவணைப்பானது, பாசிச கும்பலையும் நிறுவனங்களையும் தங்கள் சொந்த ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரல்களுக்குச் சேவை செய்வதற்கு ஏற்ப எவ்வாறு ஆளும் வர்க்கம் மறுசுழற்சி செய்கிறது என்பதற்கு மற்றொரு பொருத்தமான எடுத்துக்காட்டாகும். கூடுதலாக, இந்தக் கட்டுரையின் மையமாக இருக்கும் மஸ்க் குடும்பத்தின் பாசிச பாரம்பரியத்துக்கு இது ஒரு சான்றாகும்.

இருப்பினும், தன்னை அவமதித்து அந்நியப்படுத்தியதைக் கண்டறிந்த ஹால்ட்மேன், தனது வாழ்க்கையையும் தனது குடும்பத்தையும் இனவெறி தலைவிரித்தாடிய தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றினார். அங்கு அவரது பாசிச அரசியல் வெளிப்படையாக ஆதரிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் ஹால்ட்மேன் அரசியல் வாழ்க்கையில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஒருமுறை, 1950-களில் ஒரு உரையை நிகழ்த்தினார்,

“யூத வங்கியாளர்களின் அனைத்துலக சதி” மற்றும் யூத வங்கியாளர்களால் கட்டுப்படுத்தப்பட்ட “கலப்பின மக்களின் கூட்டத்திற்கு” எதிராக இனவெறி தலைவிரித்தாடும் தென்னாப்பிரிக்காவைக் “வெள்ளை கிறிஸ்தவ நாகரிகம்” வழிநடத்துகிறது என்று அவர் வலியுறுத்தினார். எலான் மஸ்க்-இன் தாத்தா இப்படிப்பட்டவராகத்தான் இருந்தார். இந்நிலையில், எலான் மஸ்க்-இன் சமீபத்திய நாஜி வணக்கமானது, ஒரு மோசமான கை சைகை என்று நாம் நம்ப வேண்டுமாம்.

ஹால்ட்மேன் மற்றும் பிளெட்சர் தம்பதிகளின் மகளாகிய மே (Maye), ஒரு இளம் வலதுசாரி அரசியல்வாதியும், பச்சை நிறப் படிகக் கல்லாகிய மரகதத்தை அகழ்ந்தெடுக்கும் சுரங்க முதலீட்டாளருமான எரோல் மஸ்க்கை மணந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. எலான் மஸ்க்-இன் தாயாகிய மே, தனது வாழ்நாள் முழுவதும் ஒரு உறுதியான பாசிஸ்டாகவே இருந்து வருகிறார். அவர் நீண்ட காலமாகவே டொனால்ட் டிரம்பை ஆதரித்து வருகிறார். மேலும் கடந்த 2024 அக்டோபரில் ஜனநாயகக் கட்சியினர் “சட்டவிரோத குடியேறிகளை” மெக்சிகன் எல்லை வழியாக அனுப்புவதன் மூலம் மட்டுமே வாக்குகளைப் பெறுகின்றனர் என்று எக்ஸ் தள (X-இல்) பதிவில் உறுதிபடக் கூறினார்.

இந்த வகையான வாதமானது, வெள்ளையின மேலாதிக்கவாத “மாபெரும் மாற்று சதிக் கோட்பாட்டிலிருந்து” (Great Replacement conspiracy theory) நேரடியாக வளர்ந்தோங்குகிறது.

(மாபெரும் மாற்று சதிக் கோட்பாடு என்பது, அதிதீவிர வெள்ளை இனவெறியர்களின் அவதூறு கோட்பாடாகும். அமெரிக்காவிலும், பெரும்பாலும் வெள்ளையர்களைக் கொண்ட சில மேற்கத்திய நாடுகளிலும் இது பரவலாக நிலவுகிறது. வெள்ளையர் அல்லாதவர்களான – கருப்பர்கள், செவ்விந்தியர்கள், ஆசியர்கள் அல்லது அராபிய குடியேறிகளுக்கு இணையாக வெள்ளையின குடிமக்களை மாற்ற முயற்சிக்கின்றனர் என்றும், இடதுசாரி சார்புடைய குழுக்கள் அல்லது யூத இனச் சதிகாரர்களின் வழிகாட்டுதலில் இது செயல்படுத்தப்படுகிறது என்றும் இந்த சதிக் கோட்பாடு கட்டவிழ்த்து விடப்படுகிறது.)

கறுப்பின மக்களையும் லத்தீன் அமெரிக்க குடியேறிகளையும் கொண்டு அமெரிக்காவில் உள்ள அனைத்து வெள்ளையர்களையும் மாற்றப்போவதாக வதந்திகளை அவிழ்த்துவிடும் ஒரு யூத இனவெறி சதிக் குழு இருப்பதை இது உறுதிப்படுத்துகிறது.

எலான் மஸ்க்-இன் தந்தையாகிய எரோல், தனது கருத்துக்களில் வெளிப்படையாக வலதுசாரியாக இருக்கிறார். மேலும், அவரது மரகத சுரங்க முதலீடுகள் அவரது குடும்பத்தின் செல்வத்தையும் செல்வாக்கையும் உயர்த்தியுள்ளன. எலான் மஸ்க் மட்டுமே இதனை முற்றாக மறைத்துள்ளார்.


படிக்க: எலான் மஸ்க்கிற்கு செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: எச்சரிக்கை செய்யும் முன்னாள் அரசு அதிகாரி


உலகின் மிகப் பெரிய பணக்காரராக எலான் மஸ்க் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளதால், அவர் பாசிச சொற்சிலம்பத்தாலும் செயல்பாடுகளாலும் மேலும் மேலும் தைரியமடைந்துள்ளார். இறுதியாகச் சொன்னால், வெள்ளை நிறவெறி ஆட்சியின் கீழ் ஆப்பிரிக்க மக்கள் கொடூரமாகச் சுரண்டப்படாமல், ஏகாதிபத்திய சக்திகளான அமெரிக்காவும் கனடாவும் பாசிச அரசியலை பரவலாக அங்கீகரிக்காமல் இவை எதுவும் சாத்தியமில்லை.

முன்னாள் வெள்ளை நிறவெறி அல்லது பாசிச அரசுகளின் ஆதரவாளர்களாக இருந்து, தங்கள் இறக்கைகளை விரித்து அதிக அளவில் இனவெறி செல்வாக்கை செலுத்திக் கொண்டிருப்பது ஹால்ட்மேன் மற்றும் மஸ்க் குடும்பங்கள் மட்டுமில்லை. இன்னும் ஏராளமான உதாரணங்களுக்கும் பஞ்சமில்லை.

தென்னாப்பிரிக்காவில் இருந்து மற்றொரு முக்கிய உதாரணம், தடயவியல் மருத்துவர் டேவிட் ஃபோவ்லர் என்பவராவார். இவர், ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கருப்பினத்தவரைக் கொன்ற கொடூரமான இனவெறி போலீசுக்காரன் டெரெக் சௌவி்ன் என்பவனை ஆதரித்து சாட்சியம் அளித்தவராவார். பின்னர் இவர் இச்செயலுக்காக பரவலான கண்டனத்தை எதிர்கொண்டார்.

தென்னாப்பிரிக்காவில் நிறவெறி அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்து, ஒரு வருடம் கழித்து, அதாவது, 1991-இல் தடயவியல் மருத்துவர் டேவிட் ஃபோவ்லர் தென்னாப்பிரிக்காவை விட்டு வெளியேறி அமெரிக்காவிலுள்ள மேரிலாந்து மாகாணத்திலுள்ள பால்டிமோருக்கு வந்தடைந்தார். ஆப்பிரிக்க கருப்பின மக்கள் அரசியல் அதிகாரத்தைக் கொண்டிருந்த ஒரு நாட்டில் மருத்துவத் தொழிலைச் செய்ய, இனவெறி கொண்ட இந்த மருத்துவருக்குப் பிடிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

அடுத்த இரண்டு சகாப்தங்களில், வெள்ளை இனவெறி போலீசுக் கொலைகளை பெரிய அளவில் மூடிமறைப்பதில் ஃபோவ்லர், பால்டிமோர் போலீசுத் துறைக்கும் மேரிலாந்து மாகாண போலீசுத் துறைக்கும் உதவினார். குறிப்பாக, 19 வயது அன்டன் பிளாக் என்ற கருப்பின இளைஞன் கொல்லப்பட்ட இழிபுகழ் பெற்ற நிகழ்வில், அவர் வெள்ளை நிறவெறி போலீசாருக்கு உதவினார்.

டெரெக் சௌவின் என்ற போலீசுக்காரனின் முழங்கால் ஜார்ஜ் ஃபிளாய்டின் கழுத்தில் கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் அழுத்தப்பட்டுள்ள போதிலும், ஃபிளாய்டின் மரணத்திற்கு இது காரணம் அல்ல என்று அவர் சாட்சியமளித்தார். அதன் பிறகு மருத்துவர் ஃபோவ்லர்-இன் மருத்துவத் தொழில் கவனமாகவும் விரிவாகவும் மீளாய்வுக்கு ஆட்பட்டது. இத்தகைய அனைத்து காரணங்களுக்காகவும் மேரிலாந்து போலீசுத் துறையினரின் கொட்டடிக் காவலில் இருந்தபோது இறந்த 1,300-க்கும் மேற்பட்டோரின் வழக்குகள் 2021-இல் மீண்டும் விசாரணைக்குக் கொண்டுவரப்பட்டன.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, நாஜி அதிகாரிகளை மீண்டும் கையகப்படுத்திக் கொள்வதில் “ஆபரேஷன் பேப்பர் கிளிப்” இழிபுகழ் பெற்றதாகும். அன்றைய சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான அமெரிக்காவின் பனிப்போர் காலத்தில், 1,600 ஜெர்மன் விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் ஜெர்மனியை விட்டு ரகசியமாக வெளியேறவும், அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதற்கும் அமெரிக்க கொலைகார உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. ஏற்பாடு செய்தது.

இந்த உயர் அதிகாரத்தினரில் பலர் முன்பு நாஜி கட்சியின் உயர் பதவியில் இருந்தவர்கள். சிலர் யூத கைதிகள் மீது கொடூர சித்திரவதை பரிசோதனைகளைச் செய்தவர்கள். இவர்களில் எவர் ஒருவரும் ஒருபோதும் நீதிமன்றத்துக்கு விசாரணக்குக் கொண்டு வரப்படவில்லை.

ஜெர்மனி கூட, அன்றைய “மேற்கு ஜெர்மனியில்” அல்லது “ஜெர்மனி சம்மேளனக் குடியரசில்” 20-ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதிக்குப் பிந்தைய ஆண்டுகளில் – 1950-க்குப் பிந்தைய ஆண்டுகளில் – நாஜி அதிகாரிகளை மீண்டும் தனது மறு பயன்பாட்டுக்காக உருவாக்கியது. 2010-களின் நடுப்பகுதியில், தற்போதைய ஜெர்மன் அரசாங்கமானது, அன்றைய மேற்கு ஜெர்மன் அரசாங்கத்தில் நாஜி நீதிபதிகள் மற்றும் பிற நீதித்துறை அதிகாரிகளின் பரவலான ஆதிக்கம் குறித்து தொடர்ச்சியான விசாரணைகளை நடத்தியது.

இதன் தொடர்ச்சியாக, 1957-ஆம் ஆண்டில் நீதித்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளில் 77% பேர் நாஜி கட்சியின் உறுப்பினர்களாக இருந்ததாக இறுதி அறிக்கை வெளியாகியது. 1972 வரை நீதித்துறையானது, நாஜி அல்லாத நீதிபதிகளைப் பெரும்பான்மையாகக் கொண்டதாகக்கூட இருந்ததில்லை என்று இன்னுமொரு ஆய்வு கண்டறிந்துள்ளது. ஹிட்லரின் முன்னாள் வழக்கறிஞரான கடைசி நாஜி அதிகாரி, 1992 வரை ஜெர்மன் நீதி அமைச்சகத்தை விட்டு வெளியேற்றப்படவில்லை. டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் என்ற நாளேடானது, இதனை “நாஜிகளை மறுசுழற்சி செய்தல்” என்று குறிப்பிட்டது.

இந்த பல்வேறு ஏகாதிபத்திய நாடுகளும் நிறவெறி ஆட்சிகளும் பாசிச ஊடுருவலில் இவ்வளவு ஆழமான பிரச்சினைகளைக் கொண்டுள்ளன என்பதை விளக்குவது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டதாகும்.

உண்மை என்னவென்றால், பாசிஸ்டு எலான் மஸ்க்கைப் போலவே, பாசிஸ்டுகளாக இருக்கும் ஏகாதிபத்திய ஆளும் வர்க்கம், புவிக் கோளத்தைச் சூறையாட பாசிச மக்கள்திரள் இயக்கத்தை வரலாற்று ரீதியாகப் பயன்படுத்தி வந்துள்ளது; தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.

ஜனநாயகத்தையும் நாகரிகத்தையும் கொண்டு வருபவர்கள் தாங்கள்தான் என்று ஏகாதிபத்திய ஆளும் வர்க்கம் உலகிற்குத் தொடர்ந்து கூறிவருகிறது. தங்கள் எதிரிகள் மிகவும் காட்டுமிராண்டிகள், நாகரிகமற்றவர்கள் என்று அவர்கள் உறுதியாகக் கூறுகின்றனர். இத்தகையோரைத் தோற்கடிக்கத் தேவையான எந்தவொரு அடக்குமுறையையும் அவர்கள் நியாயப்படுத்துகிறார்கள்.

இருப்பினும், ஒட்டுமொத்த எலான் மஸ்க் குடும்பத்தைப் போன்ற மிகவும் சக்தி வாய்ந்த ஏகாதிபத்தியவாதிகளில் சிலர் வெளிப்படையாகவும் பெருமையாகவும் தங்களை நாஜிகளாக காட்டிக் கொள்கிறார்கள். பனிப்போர் காலத்தின்போது, ஜனநாயக நாடாகச் சித்தரிக்கப்பட்ட அன்றைய மேற்கு ஜெர்மனி நாஜி நீதிபதிகளால் நிறைந்திருந்தது. அமெரிக்காவின் மிகப் பெரியதும் வரலாற்று ரீதியானதுமான கறுப்பின நகரங்களில் ஒன்று, இரண்டு சகாப்தங்களாக “மறுசுழற்சி செய்யப்பட்ட” தென்னாப்பிரிக்க நிறவெறி மருத்துவ ஆய்வாளரின் கீழ் அவதிப்பட்டது.

புதிய முதலாளி, பழைய முதலாளியைப் போலவே இருக்கிறார்.

உலகெங்குமுள்ள உழைக்கும் மக்களுக்கு நாஜி கோடீசுவரர்கள், நாஜி மருத்துவர்கள், நாஜி நீதிபதிகள் அல்லது வேறு எந்த வகைப்பட்ட நாஜிகளும் தேவையில்லை. தொழிலாளி வர்க்கத்திற்கு வேலையும், நிலமும், உணவும், தண்ணீரும், சுகாதாரமும் பாதுகாப்பும் கல்வியும்தான் தேவைப்படுகிறது.

ஏகாதிபத்திய ஆளும் வர்க்கம் ஒழிக! எலான் மஸ்க் ஒழிக!

***

அமெரிக்காவில் இயங்கும் “ஸ்டரகிள்-லா லூச்சா” (சோசலிசத்துக்கான போராட்டம்) எனும் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிய மொழிகளில் கட்டுரைகளை வெளியிடும் இணைய தளத்தில் லெவ் கோவ்ஃபாக்ஸ் என்ற ஜியோனிச எதிர்ப்பு யூத அரசியல் செயற்பாட்டாளர் ஜனவரி 26 அன்று எழுதிய இக்கட்டுரை “எம்.ஆர் ஆன்லைன்” எனும் ஆங்கில இணைய தளத்தில் ஜனவரி 28, 2025 அன்று மறுபதிப்பு செய்யப்பட்டது. MR Online, Posted Jan 28, 2025, Originally published: Struggle-La Lucha on January 26, 2025 by Lev Koufax, (Lev Koufax is an anti-Zionist Jewish activist).


மொழிபெயர்ப்பாளர்: அலெக்சாண்டர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க