செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, குறிப்பாக எலான் மஸ்க்கின் “ஸ்டார்லிங்க்” (Starlink) நிறுவனத்திற்கு நிர்வாக ரீதியாக ஒதுக்குவதற்கான தொலைத் தொடர்புத் துறையின் (Department of Telecommunications – DoT) சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து அத்துறையின் செயலாளர் நீரஜ் மிட்டலுக்கு (Neeraj Mittal) மத்திய அரசின் முன்னாள் செயலாளர் ஈ.ஏ.எஸ் சர்மா (E.A.S. Sarma) கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
சர்மா தனது கடிதத்தில், ஸ்டார்லிங்க் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டி செயல்முறை இல்லாமல் செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில் உள்ள அபாயங்களைத் தனது கடிதத்தில் எடுத்துரைத்துள்ளார். அமெரிக்க இராணுவத்துடனான ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் பிணைப்புகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்டார்ஷீல்ட் (Starshield) என்று பெயரிடப்பட்ட ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள் தொழில்நுட்பம், இராணுவ தரத்திலான ரேடார், அகச்சிவப்பு (infrared) ஏவுகணை கண்டறிதல் மற்றும் ஆப்டிகல் கண்காணிப்பு அமைப்புகள் (optical surveillance systems) உள்ளிட்ட பல்வேறு பேலோடுகளுக்கு (payloads) இடமளிப்பதற்கான மேம்பட்ட திறன்களைக் கொண்டுள்ளது. இக்காரணங்களால் ஸ்டார்லிங்கிற்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதானது இந்திய தரவு அமைப்புகள் (data systems) மற்றும் முக்கியமான தகவல் தொடர்பு உள்கட்டமைப்பு (sensitive communications infrastructure) ஆகியவற்றை வெளிநாட்டு கண்காணிப்புக்கு உட்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது என்று சர்மா எச்சரித்துள்ளார்.
“ஸ்டார்லிங்க் என்பது வெறும் செயற்கைக்கோள் தகவல்தொடர்புக்கான ஒரு வழிமுறை மட்டுமல்ல என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். அது ரேடார்கள், ஆப்டிகல் கேமராக்கள் மற்றும் அகச்சிவப்பு ஏவுகணை ஏவுதல் சமிக்ஞை அமைப்புகள் (infrared missile launch signaling systems) உள்ளிட்ட பல்வேறு பேலோடுகளுக்கு இடமளிக்கக்கூடிய ஆற்றல் கொண்ட செயற்கைக்கோள் பஸ் தொழில்நுட்பம் (satellite bus technology). ஸ்டார்ஷீல்ட் செயற்கைக்கோள்களைத் தனது நோக்கத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதில் பென்டகன் உறுதியாக உள்ளதென்பது வெளிப்படையான உண்மை”என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
படிக்க: செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் ஊழல்: அம்பலப்பட்ட பாசிச பா.ஜ.க அரசு!
ஸ்பேஸ்எக்ஸின் (SpaceX) ஸ்டார்லிங்குடன் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் பிணைப்பு குறித்த அறிக்கைகளை மேற்கோள் காட்டியுள்ளார். “செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டவுடன், ஸ்டார்லிங்க் போன்ற ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் தனிப்பட்ட மற்றும் பொது தரவு அமைப்புகளை வரம்பின்றி அணுகமுடியும்; புவியியல் எல்லைகளைக் கடந்து அந்த தரவுகளைப் பயன்படுத்துவதற்கு அதற்கு எந்தத் தடையும் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், தொலைத் தொடர்புத் துறை (DoT) மூலோபாய செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரத்தை தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு (ஏலம் மூலம் வழங்காமல்) நிர்வாக ரீதியாக ஒதுக்குவது சட்டவிரோதமானது என்றும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அதை ஒதுக்குவது பொது நலனுக்கு எதிரானது என்றும் அக்டோபர் மாதத்தில் அவர் எழுதிய முந்தைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததை சர்மா சுட்டிக்காட்டுகிறார்.
மிகவும் மதிப்புமிக்க தேசிய வளமான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயமான சந்தை மதிப்பை உறுதி செய்வதற்காக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி ஏல அடிப்படையிலான ஒதுக்கீடு நடைமுறையைத் தொலைத் தொடர்புத் துறை புறக்கணித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நடைமுறையைத் தவிர்ப்பது நீதிமன்ற அவமதிப்புக்குச் சமம் என்றும் சர்மா எச்சரித்துள்ளார். இது உச்ச நீதிமன்றம் தனது 2 ஜி ஸ்பெக்ட்ரம் தீர்ப்பில் கோரிய வெளிப்படைத்தன்மையைப் புறக்கணிக்கிறது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
படிக்க: அமெரிக்க அதிபர் தேர்தல்: பாசிஸ்டு ட்ரம்ப் வெற்றி!
“எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட வெளிப்படையான ஏல நடைமுறைக்கு உட்படாமல், செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம்-ஐ பயன்படுத்த அனுமதிப்பதைத் தொலைத் தொடர்புத் துறை விடாப்பிடியாக முன்னெடுத்துச் செல்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஸ்பெக்ட்ரம் போன்ற மதிப்புமிக்க இயற்கை வளத்தின் விலையை போட்டி வழிமுறைகள் மூலம் வழங்காதது பொருளாதார தர்க்கத்தையும் மீறுகிறது” என்று சர்மா எழுதியுள்ளார்.
நவம்பர் 12 அன்று, மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஸ்டார்லிங்கைத் தொடங்குவதற்கான முடிவு குறித்து இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) பரிந்துரைகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏல அடிப்படையில் மேற்கொள்ளாததை எதிர்த்து “ஊழல்” கோஷமிட்ட பா.ஜ.க தான் தற்போது செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலம் விட மறுக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு ஏலம் விடவேண்டும் என்ற உச்சநீதிமன்ற வழிகாட்டுதலையும் நிராகரித்துள்ளது. பாசிச கும்பல் ஒருபுறம் தேசவெறியைத் தூண்டிக் கொண்டே மறுபுறம் எலான் மஸ்க் போன்ற ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு நாட்டு வளங்களைத் தாரைவார்க்கிறது.
பொம்மி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
பாசிச மோடி கும்பல் தேசப்பற்று, தேசப்பாதுகாப்பு என்று பேசுவதெல்லாம் போலித்தனமானது என்பதை இக்கட்டுரை தெளிவுபடுத்துகிறது.
கார்ப்பரேட் நலனுக்காக தேசத்தைக் காட்டிக் கொடுப்பவர்கள்தான் சங்கிக் கும்பல்…