மே 19 ஆம் தேதி அன்று திருப்பூர் மாவட்டத்தின் கரைப்புதூர் பகுதியில் உள்ள சாய ஆலையில் கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் விசவாயு தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் கரைப்புதூர் பகுதியில் ‘ஆலயா’ நிறுவனத்தின் சாய ஆலை செயல்பட்டு வருகிறது. ஆலையில் உள்ள கழிவு நீர்த் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக, இடுவம்பாளையம் சுண்டமேடு அம்பேத்கர் நகரின் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சரவணன், வேணுகோபால் மற்றும் ஹரி கிருஷ்ணன் ஆகிய மூவரும் சின்னச்சாமி என்பவருக்குச் சொந்தமான கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்பு லாரியில் 19 ஆம் தேதி அன்று சென்றுள்ளனர். அங்கே எவ்வித பாதுகாப்பு கருவிகளும் இல்லாமல் மூன்று பேரையும் ஆலை உரிமையாளர் ஆறடி ஆழம் உள்ள கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபடுத்தியுள்ளார்.
ஆனால் தொட்டிக்குள் இறங்கிய சிறிது நேரத்தில் விசவாயு தாக்கி மூவரும் மயங்கி விழுந்துள்ளனர். அவர்களைக் காப்பாற்றுவதற்காகச் சென்ற சின்னச்சாமி உள்ளிட்ட சிலரும் விசவாயுவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் மூவரையும் பழைய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஹரிகிருஷ்ணன், சரவணன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். பின்னர் சின்னச்சாமி, சரவணன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் 20 ஆம் தேதி காலை சிகிச்சை பலனின்றி வேணுகோபால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சாய ஆலையில் விசவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அறிந்து 19 ஆம் தேதி இரவு சாய ஆலைக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், போலீஸ் கண்காணிப்பாளர் கிரிஷ் யாதவ் அசோக் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சாய ஆலையை ஆய்வு செய்தனர். மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் ஆய்வறிக்கை வந்தவுடன் சம்பந்தப்பட்ட ஆலை நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
படிக்க: தாழ்த்தப்பட்ட மக்களை மலக்குழிக்குள்ளேயே இருத்தும் பாசிச மோடி அரசு!
இச்சம்பவம் குறித்து சரவணனின் மனைவி கௌசல்யா பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் சாய ஆலை உரிமையாளர் நவீன், பொது மேலாளர் தனபால், கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்பு லாரி உரிமையாளர் சின்னச்சாமி மற்றும் மேற்பார்வையாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் மீது கவனக்குறைவாக இருந்தது, உயிரிழப்பு ஏற்படுத்துதல், மனித கழிவுகளை மனிதனை வைத்து அள்ளியது, மனித கழிவுகளை பட்டியலின மக்களை வைத்து அள்ளியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் நந்தகோபால், செயலாளர் சி. கே கனகராஜ், பொருளாளர் பஞ்சலிங்கம் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயனிடம் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்துள்ளனர்.
அதில் 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 30 லட்சம் வழங்க வேண்டும்; வீடு, வேலை, நிலம் வழங்கும் வரை மறுவாழ்விற்கான ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும்; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க மாவட்டந்தோறும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்க வேண்டும்; அதில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தங்களுடைய மனுவில் தெரிவித்துள்ளனர்.
கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்வதற்கும், மனித கழிவுகளை அள்ளுவதற்கும் இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் மனிதர்களை ஈடுபடுத்தும் நிலையே இன்றுவரை தொடர்கிறது. அதிலும், பட்டியலின மக்களே அதில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு கருவிகளும் வழங்கப்படுவதில்லை.
எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் மலக்குழி மரணங்களைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதில்லை. மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே தான் உள்ளன. ‘திராவிட மாடல்’ தி.மு.க அரசும் அதற்கு விதிவிலக்கல்ல.
செய்தி ஆதாரம்: தீக்கதிர்
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram