கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை: மம்தா அரசே குற்றவாளி!

ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சுவடுகள் கூட அழியாத நிலையில் சட்டக் கல்லூரி மாணவிக்கு இக்கொடூரம் அரங்கேறியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரியில் (South Calcutta Law College) 24 வயதான மாணவி, முன்னாள் மாணவர் ஒருவர் மற்றும் இரண்டு சீனியர் மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஜூன் 25 அன்று தேர்வு படிவங்களை நிரப்ப கல்லூரிக்கு வந்திருந்த அந்த மாணவியை சற்று நேரம் கல்லூரியில் இருக்குமாறு கூறியுள்ளனர். இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான வழக்கறிஞர், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அந்த மாணவியைக் கட்டாயப்படுத்தியதைத் தொடர்ந்து அதனை அவர் மறுத்ததால், அவர் மீது தாக்குதல் நடத்தி கல்லூரியினுள் உள்ள ஒரு அறைக்குள் இழுத்துச் சென்று, மற்ற இரண்டு குற்றவாளிகள் உடனிருக்க பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இந்த சம்பவம் இரவு 7.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாகக் கூறப்படுகிறது.

அதே சட்டக் கல்லூரியின் முன்னாள் மாணவர் தற்காலிக ஆசிரியரல்லாத ஊழியராக (temporary non teaching staff) 45 நாட்களுக்கு பணியமர்த்தப்பட்டுள்ளான்‌. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, மாணவியை திருமணம் செய்ய பலவந்தப்படுத்தியுள்ளான்.

பாதிக்கப்பட்ட மாணவியின் உடலில், பலவந்தமாக ஊடுருவுதல், கடித்த அடையாளங்கள் மற்றும் நகத்தின் கீறல்கள் உள்ளிட்ட கொடூரமான காட்டுமிராண்டித்தனமான பாலியல் வன்கொடுமைக்கான அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

தலைமை அரசு வழக்கறிஞர் சௌரின் கோசல் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் அனைவரும் பாலியல் வன்கொடுமை செய்யாவிட்டாலும் கூட, தொடர்புடைய அனைத்து நபர்களும் பொறுப்பேற்க வேண்டும். இந்த வழக்கில், மேலும் இரண்டு நபர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உதவியுள்ளனர். எனவே இது ஒரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு தான்” என்று தெரிவித்துள்ளார். தற்போது குற்றவாளிகள் மூன்று பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


படிக்க: கொல்கத்தா பாலியல் வன்கொலை: கிரிமினல்மயமான மருத்துவக் கட்டமைப்பும் அரசுமே குற்றவாளி!


“பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினருடன் மாநில அரசு உறுதியாக நிற்கிறது. பாதிக்கப்பட்டவரை அரசியல் செய்வதற்கான போர்க்களமாக மாற்றுவதற்கு பதிலாக, அவரது வலியைப் புரிந்து கொள்ள வேண்டும், அவர் மதிக்கப்பட வேண்டும், நீதி உறுதி செய்யப்பட வேண்டும்” என்று செய்தியாளர் சந்திப்பில் மாநில அமைச்சர் சசி பஞ்சா கூறியுள்ளார்.

ஆனால் குற்றவாளியின் சமூக ஊடக கணக்குகள் அவன் கல்லூரியின் திரிணாமுல் காங்கிரஸ் சத்ரா பரிஷத் (TMCP) பிரிவின் முன்னாள் தலைவர் என்றும், திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அமைப்பின் தெற்கு கொல்கத்தா பிரிவின் தற்போதைய நிர்வாகி என்றும் தெரியவருகிறது. சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படங்களும் ஆளும் திரிணாமுல் கட்சியின் மூத்த தலைவர்களுடன் அவர் இருப்பதைக் காட்டுகின்றன. குற்றம் சாட்டப்பட்டவருடன் தற்போது எந்த தொடர்பும் இல்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் மறுத்துள்ளது. ஆனால் அவர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டால் ’கடுமையான தண்டனை’ வழங்க வேண்டும் என்று நாடகமாடி வருகிறது.

தேசிய மகளிர் ஆணையம் இந்த வழக்கைத் தானாக முன்வந்து (suo moto) எடுத்து, மூன்று நாட்களுக்குள் விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க கொல்கத்தா காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவத்தைக் கண்டித்து சட்டக் கல்லூரி மாணவி புகார் அளித்த கஸ்பா போலீசு நிலையத்திற்கு வெளியே SFI, DYFI, SUCI உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைதியான முறையில் போராடிய மாணவர்களைக் கைது செய்துள்ளது கொல்கத்தா போலீசு. அதுமட்டுமின்றி மாணவர்கள் மீது தடியடி நடத்தி அராஜகம் செய்துள்ளது. போலீசின் இந்த செயலானது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சுவடுகள் கூட அழியாத நிலையில் சட்டக் கல்லூரி மாணவிக்கு இக்கொடூரம் அரங்கேறியுள்ளது. மேலும், இவ்விரண்டு சம்பவங்களிலுமே குற்றவாளிகள் ஆளுங்கட்சியின் முக்கிய புள்ளிகளுடன்‌ தொடர்பில் இருப்பது அம்பலப்பட்டுள்ளது.


படிக்க: பீகார் சிறுமி பாலியல் வன்கொடுமை: பா.ஜ.க. ஆட்சியில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்


கல்லூரி வளாகத்தின் உள்ளே வைத்து ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவு செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டுவதற்கு இவர்களுக்கு எப்படி தைரியம் வந்தது?

இந்த சம்பவத்திற்கு சட்டக்கல்லூரி நிர்வாகமும், தொடர்ந்து நடைபெற்றுவரும் பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதுடன் குற்றவாளிகளைப் பாதுகாத்து வரும் மம்தா அரசாங்கமும் தான் முழு பொறுப்பு!

இந்த வழக்கை உடனடியாக விசாரித்து குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். மேலும் குற்றவாளிகளுக்கு ஜாமீன் கிடைக்காததை உறுதிசெய்ய வேண்டும்!

இந்த சம்பவத்தின் முதன்மை குற்றவாளியான குற்றவியல் வழக்கறிஞரின் வழக்கறிஞர் உரிமத்தை ரத்து செய்து அவனுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும்!


பவித்ரா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க