இன்று (06.07.2025) காலை சிவகாசி சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 5 பேர் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள கீழத்தாயில்பட்டியில் திருத்தங்கலைச் சேர்ந்த கணேசன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆலையில் உள்ள 50 அறைகளில் 100-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (06.07.25) காலை தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென்று ஏற்பட்ட வெடி விபத்தில் பயங்கர சத்தத்துடன் 15-க்கும் மேற்பட்ட அறைகள் முற்றிலுமாக வெடித்து தரைமட்டமாகின. இக்கொடிய விபத்தில் பனையபட்டியைச் சேர்ந்த பாலகுருசாமி (50) என்பவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெடி மருந்து தயாரிப்பின் போது உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், வெம்பங்கோட்டை போலீசார் பட்டாசு ஆலையின் போர்மேன் யோகநாதனை கைது செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மாவட்ட வருவாய் அலுவலர் (டி.ஆர்.ஓ) ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
படிக்க: சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: தொடரும் அரசின் மெத்தனப் போக்கு
சில தினங்களுக்கு முன்பு சிவகாசி அருகே உள்ள சின்னகாமன்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக பட்டாசு ஆலை வெடி விபத்துகள் அதிகரித்து வருகின்றன. பட்டாசு ஆலையில் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதற்கும், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் (Directorate Of Industrial Safety And Health) சார்பில் குழு ஒன்று அமைத்துள்ளது. இக்குழுவில் வருவாய்த்துறை அதிகாரிகள், தீயணைப்புத் துறையினர், போலீஸ் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இக்குழுவினர் சிவகாசி முழுவதும் ஆய்வு நடத்தி விதிமீறலில் ஈடுபடும் ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தற்போது பட்டாசுக் கடைகளில் அளவுக்கு அதிகமாக இருப்பு வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
விபத்து நடந்த பின்பு தனது தவறை மறைத்துக் கொள்ள அரசு இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது போல் பாவனை செய்வதும் சிறிது காலம் கடந்த பின்னர் பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு ஆதரவாக நடந்துகொள்வதும் வாடிக்கையாகிவிட்டது.
பட்டாசு ஆலைகளில் முறையாக ஆய்வு செய்யப்படுவதில்லை. அரசு அதிகாரிகள் லாபவெறி பிடித்த ஆலை உரிமையாளர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு உரிமம் இல்லாத பட்டாசு ஆலைகளைக்கூட செயல்பட அனுமதித்து வருகின்றனர். பல பட்டாசு ஆலைகளில் முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லை. தொழிலாளர்களுக்கும் முறையான பாதுகாப்பான உடைகள் வழங்கப்படுவதில்லை. இவையெல்லாம் இதனைப் போன்ற விபத்துக்களின் போதுதான் வெளிவருகின்றன என்பது வருத்தமளிக்கும் உண்மை.
பட்டாசு ஆலைகளில் பணி புரியும் தொழிலாளிக்கு பணி பலன்கள் கொடுக்கப்படுவதில்லை. மாறாக, அவனுடைய உடல் கருகிய பின்பு இழப்பீடு என்கிற பெயரில் சிறிய தொகையை அளித்து அரசு தன்னுடைய படுகொலையை மறைத்துக் கொள்கிறது.
மாற்று வாழ்வாதாரத்தை கோரி வரும் பட்டாசு ஆலை தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற அரசு தயாராக இல்லை. மாறாக கரிமருந்து கிடங்குக்குளுக்கு உரிமம் வழங்கி எண்ணற்ற தொழிலாளர்களைக் கொன்று கொண்டிருக்கிறது.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram