பாசிச மோடி அரசின் தொழிலாளர் விரோத, விவசாய விரோத மற்றும் தேச விரோத கார்ப்பரேட் சார்பு கொள்கைகளைக் கண்டித்து இன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பாசிச மோடியின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் மோடி அரசை கண்டித்து 26 நவம்பர் 2020, 28-29 மார்ச் 2022 மற்றும் 16 பிப்ரவரி 2024 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தங்கள் நடத்தப்பட்டிருந்த நிலையில், மோடியின் மூன்றாவது ஆட்சியில் நடைபெறும் முதலாவது நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் இதுவாகும். பத்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மன்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழிலாளர் மற்றும் விவசாய சங்கங்கள் பாசிச பா.ஜ.க. அரசுக்கு எதிரான இந்த அறைகூவலை விடுத்துள்ளன.
தொழிற்சங்கங்கள் வெளியிட்ட அறிவிப்பின்படி, பாசிச மோடி அரசு கடந்த பத்து ஆண்டுகளாக வருடாந்திர தொழிலாளர் மாநாட்டை நடத்தவில்லை. அதே சமயத்தில் தொழிலாளர் நலனுக்கு விரோதமான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதிலும் 44 தொழிலாளர் சட்டங்களை நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளாக்கியதன் மூலம், தொழிலாளர் உரிமைகளைச் செல்லாக்காசாக்கியது. தொழிற்சங்க இயக்கத்தை அடக்கி முடக்குதல்; வேலை நேரத்தை அதிகரித்தல்; தொழிலாளர்களின் கூட்டு பேரம் பேசும் உரிமையைப் பறித்தல்; வேலைநிறுத்தம் செய்யும் உரிமை மற்றும் தொழிலாளர் சட்டங்கள் முதலாளிகளால் மீறப்படுவதை குற்றமற்றதாக்குதல் ஆகிய தொழிலாளர் விரோதத் தன்மைகளையே தொழிலாளர் சட்டமாக்கியது.
மறுபுறம், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, ஊதிய குறைப்பு, கல்வி, சுகாதாரம், அடிப்படை குடிமை வசதிகளில் சமூகத்துறை செலவினங்களைக் குறைத்தல், அதிகரித்த வேலையின்மை காரணமாக ஏழைகள், குறைந்த வருமானம் ஈட்டுவோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரைக் கடுமையாகப் பாதித்துள்ளது. மகாராஷ்டிராவில் கொண்டுவரப்பட்ட ஊபா போன்ற ஒடுக்குமுறை சட்டமான பொது பாதுகாப்பு மசோதா மற்றும் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களிலும் இதேபோன்ற சட்டங்களைக் கொண்டுவந்ததன் மூலம் மக்களுக்காகப் போராடும் வெகுஜன இயக்கங்களை ஒடுக்குவதற்கு சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துகிறது.
படிக்க: ஜூலை – 9 பொது வேலை நிறுத்தம் வெல்லட்டும்! | ம.அ.க
பாசிச மோடி அரசின் இத்தகைய தொழிலாளர் விரோத போக்கு, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொது சேவைகளை தனியார்மயமாக்குதல், அவுட்சோர்சிங் கொள்கைகள், ஒப்பந்தமயமாக்கல் மற்றும் பணியாளர்களை தற்காலிகமாக்குதல் ஆகியவற்றிற்கு எதிராக மேற்குறிப்பிட்ட தொழிற்சங்கங்களின் மன்றம் தொடர்ந்து போராடி வருகிறது. இம்மன்றத்தின் சார்பாக கடந்த ஆண்டு தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மண்டவியாவிடம் 17 அம்ச கோரிக்கைகள் அடங்கிய சாசனத்தை தொழிலாளர் மன்றம் சமர்பித்தது. இதன்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் 17 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன.
- எட்டு மணி நேர வேலை நாள், குறைந்தபட்சம் ரூ.26,000 மாத ஊதியம் மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுத்தல்
- நான்கு தொழிலாளர் குறியீடுகளை இரத்து செய்தல் மற்றும் தொழிலாளர் சார்பு சீர்திருத்தங்களை செயல்படுத்துதல்
- விவசாய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான (MSP) சட்டப்பூர்வ உத்தரவாதம் மற்றும் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி
- மின்சார திருத்த மசோதாவை ரத்து செய்தல் மற்றும் மின்சாரத்தை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு
- போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளுக்கு இழப்பீடு மற்றும் அவர்களின் நினைவாக ஒரு நினைவுச் சின்னம் மற்றும் போராடும் விவசாயிகள் மட்டும் ஆர்வலர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுதல்
- பொது விநியோக முறையை (PDS) வலுப்படுத்துதல் மற்றும் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் ஆகியவற்றை அதில் சேர்த்தல்
- அனைத்து மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கணவனை இழந்தோருக்கு மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் வழங்குதல்
- பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொதுச் சொத்துக்களின் நிறுவனமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கலை நிராகரித்தல்
உள்ளிட்ட அம்சங்கள் அக்கோரிக்கைகளில் இடம்பெற்றுள்ளன.
படிக்க: அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச்செய்வோம்! | துண்டறிக்கை | பு.ஜ.தொ.மு
இந்த பிரம்மாண்டமான வேலைநிறுத்தப் போராட்டத்தில் வங்கி, அஞ்சல் சேவை, போக்குவரத்து, எஃகு தொழில், சுரங்கத்தொழில், கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சாந்த 25 கோடி தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மாநில அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டு அமைப்பாக்கப்பட்ட மற்றும் அமைப்புசாரா/முறைசாரா தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமென ஏற்கெனவே அறிவித்திருந்தபடி வேலைநிறுத்தம் நடந்து வருகிறது. அதேபோல், சம்யுக்த கிசான் மோர்ச்சா மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டு முன்னணி உள்ளிட்ட விவசாய சங்கங்களும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளித்துள்ளதுடன் வேலைநிறுத்தப் போராட்டம் கிராமப்புறங்களில் வெற்றியடையச் செய்ய வினையாற்றி வருகின்றன.
இந்நிலையில், பீகாரில் ஏழை-எளிய, தலித்-சிறுபான்மை மக்களின் வாக்குரிமை-குடியுரிமையை பறிக்க மோடி அரசின் கைப்பாவையான தேர்தல் ஆணையத்தால் கொண்டுவரப்பட்டுள்ள ‘சிறப்பு தீவிர மறு ஆய்வு’க்கு எதிராக இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அம்மாநிலத்தில் உள்ள இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவிலும் இன்று நடக்கவிருந்த பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதுடன், பல மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், தமிழ்நாட்டில், வேலைநிறுத்தத்தில் பங்கெடுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது சம்பளம் பிடித்தம், துறைரீதியான நடவடிக்கை உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தலைமை செயலாளர் வெளிப்படையாகவே எச்சரித்துள்ளார். மேலும், அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கெடுக்கவில்லை என்பதை உத்தரவாதப்படுத்துவதற்காக இன்று முன்கூட்டியே வேலைக்கு வரும்படியும் வாய்வழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பா.ஜ.க-வை வீழ்த்தப்போவதாக சொல்லிக்கொள்ளும் இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பாக இந்த பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக அறைகூவல் விடுக்கப்படவில்லை.
பாசிச மோடி அரசின் தொழிலாளர்-விவசாய-மக்கள் விரோத போக்கிற்கு எதிராக நடக்கும் இந்த ஆர்ப்பாட்டமானது அதன் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பலின் இந்துராஷ்டிர அடிக்கட்டுமானங்களாக உள்ள பல்வேறு சட்டதிட்டங்களுக்கு எதிராக நடக்கிறது. இந்த அடிக்கட்டுமானங்களை தகர்ப்பதன் மூலமாகவே பாசிச கும்பலை பலவீனமடையச் செய்ய முடியும் என்ற வகையில் இப்போராட்டம் அந்த பாசிச சட்டதிட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் தொழிலாளர்-விவசாயிகள் ஒற்றுமையைச் சாத்தியப்படுத்துவதிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இப்போராட்டத்திற்கு ஆதரவளித்து எதிர்க்கட்சிகள் ஊக்கமாகப் பங்கெடுத்துக்கொள்வதும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வேலைநிறுத்தத்தை வெற்றியடையச் செய்வதும் எதிர்க்கட்சிகளின் கடமையாகும். ஆனால், அதற்கு நேரெதிரான எதிர்க்கட்சிகளின் நடவடிக்கையானது பாசிச எதிர்ப்பில் எதிர்க்கட்சிகளின் சந்தர்ப்பவாதத்தையும் தொழிலாளர் ஒற்றுமையை விரும்பாத அதன் தன்மையையும் வெளிக்காட்டுகிறது. இது எதிர்க்கட்சிகளிடத்தில் பாசிச எதிர்ப்பு அரசியல்-பொருளாதார மாற்றுத் திட்டம் இல்லாததன் தவிர்க்கவியலாத விளைவாகும்.
சோபியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram